தீபாவளி சிறப்பு பேருந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படும்

திருச்சி

திருச்சி:
தீபாவளி பண்டிகையொட்டி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்படும் என்று மாநகரக் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையொட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித வாகனத்தையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது. பேருந்துகள், வேன்கள், கார், ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல வேண்டும்.

பொது மக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வியாபாரிகள் விற்பனை கூடாது.

பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளு வண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. காவல்துறை அறிவித்துள்ள விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100-லிலும், மாநகர காவல் ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் எண்ணான 96262 73399-க்கு தெரிவிக்க வேண்டும்.

நாளை முதல் தாற்காலிக பேருந்து நிலையங்கள்:போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் வருகிற நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தாற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகிலிருந்தும்,

புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் பழைய இலுப்பூர் சாலையிலிருந்தும், மதுரை மார்க்கம் செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் – மதுரை சர்வீஸ் சாலையிலிருந்து இயக்கப்படவுள்ளது.

மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எந்தவித மாற்றமுமின்றி வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்று பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தற்காலிக பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு இன்னல் ஏற்படா வண்ணம் தகுந்த காவல் துறையின் பாதுகாப்பும், மாநகராட்சி மூலம் நிழற்குடை, குடிநீர், பொதுக் கழிப்பிட வசதி, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை தெரிவித்தல் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.