

சித்து மூஸேவாலா கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
கடந்த மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் முதல் கட்டமாக 8 பேரை கைது செய்து விசாரித்து வந்த காவல்துறை பின்னர் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்தனர்.
இந்நிலையில். இன்று சித்து மூஸாவாலா கொலையில் தொடர்புடைய பிஷ்னோய் கூட்டாளிகள் இருவர் பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தர் மாவட்டத்தில் உள்ள சீச்சா பக்னா மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது மறைந்திருந்த கொலையாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் காவலர்கள் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்பிரீத் சிங் ஆகிய இருவர் பலியாகினார்.