திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18–ந்தேதி தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையொட்டி அவரது மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5 நாட்களாக நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் முகாமிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இன்று காலை 9.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் டி.எஸ்.பி. ராஜன், இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் 2 போலீசார் கடலூர் வந்தனர். கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியா வீட்டுக்கு சென்றார்கள். அவரது தந்தை ரவியிடம் விசாரணை நடத்தினார்கள். விஷ்ணுபிரியா கடந்த 17–ந்தேதி வீட்டுக்கு வந்த போது கோகுல்ராஜ் வழக்கு தொடர்பாக எதுவும் கூறினாரா? என்று கேட்டார்கள். மேலும் ஏதாவது தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டாரா? என்றும் கேட்டனர். பின்னர் விஷ்ணுபிரியா குறித்து அவரது தாயிடம் விசாரித்தார்கள்.
இதையடுத்து விஷ்ணுபிரியாவின் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்றது.