செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று இரவு சாப்பாடு முடிந்ததும் சிறுவர்கள் அனைவரும் அறையில் தூங்கினர். இரவு 10 மணி அளவில் சீர்திருத்த பள்ளி நிர்வாகிகள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது 5 சிறுவர்கள் மாயமாகி இருந்தனர்.

அறையில் உள்ள 2 ஜன்னல் கம்பிகள் ஆக்ஷா பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அதன் வழியாக 5 சிறுவர்களும் குதித்து தப்பி இருப்பது தெரிந்தது.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறிது தூரத்தில் ரெயில் நிலையம் இருப்பதால் ரெயிலில் அவர்கள் தப்பி இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து அனைத்து ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விழுப்புரம், விருத்தாசலம், ரெயில் நிலையத்தில் நின்ற ரெயிலில் போலீசார் சோதனை செய்த போது சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய 3 சிறுவர்கள் சிக்கினர்.

தப்பி ஓடிய மற்ற 2 சிறுவர்களையும் தேடி வருகிறார்கள். அவர் தேனியை சேர்ந்தவர்கள் ஆவார். அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் விரைந்து உள்ளனர்.

இதே சீர்திருத்த பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் காவலாளியை தாக்கியும், ஜன்னல் கம்பியை உடைத்தும் சிறுவர்கள் தப்பி சென்று இருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவத்தால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending