ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இன்று கலிபோர்னியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் ‘டிஜிட்டல் இந்தியா’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ’பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை நமது புதிய சுற்றுப்புறமாக மாறிவிட்டது’ என குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது , ’ஆசிரியர்கள் மற்றும் தாத்தா-பாட்டிகளின் வேலையை கூகுள் குறைத்துவிட்டது. உலகில் சூரியன் மறைவதை பார்க்க கலிபோர்னியா மிகப்பெரிய இடமாகும். ஆனால், இங்குதான் ஒவ்வொரு புதிய ஐடியாக்களும் முதலில் காணப்படுகிறது.
மராட்டியத்தில் விவசாயிகள் வாட்ஸ்-அப் குரூப் மூலம் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டு பலன்பெறுகின்றனர். தொழில் நுட்பம் என்பது அதிகாரம் அளிக்கும் மற்றும் நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளுக்கு இடையிலான பாலம் என்பதை நான் காண்கிறேன்.
மத்தியில் எனது அரசு பதவியேற்றதும், நாங்கள் நரேந்திர மோடி மொபைல் ஆப்-பை தொடங்கினோம். அது நான் மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள உதவுகிறது’
எனது அரசு மத்தியில் பதவியேற்றதும், அதிகாரமளித்தலுக்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்க நாங்கள் இணையம் மற்றும் செல்போன் மூலமாக வறுமைக்கு எதிரான தாக்குதலை தொடங்கினோம்.
அனைத்து விமான நிலையங்கள் மற்றும் 500 ரெயில் நிலையங்களில் நாங்கள் ஒயர்லெஸ் நெட்வோர்க் சேவையை கொடுத்து வருகிறோம். இவ்விவகாரம் தொடர்பாக கூகுளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
சமூக வலைதளங்கள், சமூக தடைகளை குறைத்துவிட்டது. சமூக வலைதளமானது பொதுமக்களை அடையாளத்தின் மூலம் மதிப்பிடாமல் மனிதம் என்ற மதிப்பின் மூலம் இணைக்கிறது. எனவே, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை வயர்லெஸ் நெட்வொர்க்கு மூலம் இணைக்க உள்ளோம் என்று பேசினார்.