
திருநெல்வேலி வ.உ.சி மைதானம், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு சண்டைகளில் ஈடுபட்ட இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர். இது இன்று சமூகத் தளங்களில் பரபரப்பாகப் பகிரப் பட்டது.
நெல்லையில் கல்லூரி மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய இடமாகத் திகழ்வது பஸ் நிலையமும் வ.உசி மைதானமும்தான்! அதிகமாக மாணவர்கள், பொதுமக்கள் கூடும் இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறந்தநாள் கொண்டாடுவதற்கு வ உ சி மைதானத்திலும் பஸ் நிலையத்திலும் வைத்து நெல்லையைச் சேர்ந்த இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சிறுசிறு சண்டைகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பின்னர் சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர்.

இது குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கூறியுள்ளனர். இதை அடுத்து, ரகளையில் ஈடுபட்ட 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் இரு வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 49 பேரை, அவர்களின் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.

அவர்கள் செய்த செயலுக்காக 1330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்ற தண்டனை போலீசாரால் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மாணவர்கள் போலீஸ் ஸ்டேசன் முன்பு அமர்ந்த படி 1330 குறளையும் எழுதினர். அதன் பின்னர் மாணவர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து முத்திரை ஒன்றை பெற்று பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற உத்தரவும் இருந்தது.

திருக்குறளும் திருவள்ளுவரும் இப்போது பிரபலம் ஆகியிருப்பதால், சண்டையிட்டுக் கொண்ட மாணவர்கள் 1330 குறளையும் எழுத வேண்டும் நூதன தண்டனை போலீசாரால் வழங்கப் பட்டது பெரிதும் பாராட்டப் பட்டது.