2 நாட்களில் 18 பேரைக் கடித்துக் குதறி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது கொடூர அணில் ஒன்று.
இங்கிலாந்தின் பக்லி டவுனில் ஒரு ‘சைக்கோ’ அணில் கட்டுக் கடுங்காத வகையில் அட்டகாசம் செய்துள்ளது.
இரண்டே நாளில் அந்த அணில், 18 பேரை அட்டாக் செய்து காயப்படுத்தி உள்ளது.
இந்த விசித்திர அணிலுக்கு ‘ஸ்டிரைப்’ என்று உள்ளூர்க்காரர்கள் பெயர் வைத்து உள்ளனர். இங்கிலாந்தின் பக்லி பகுதியில் இந்த அணில் சுற்றி வந்ததாம். இந்த அணிலுக்கு பக்லியைச் சேர்ந்த காரின் ரெனால்ட்ஸ் என்பவர் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு தந்து செல்லப் பிராணி போல பாவித்து வந்துள்ளார்.
தற்போது ஸ்டிரைப் குறித்த செய்தி அறிந்து மிகுந்த கவலையில் இருக்கிறார் காரின்.
ஸ்டிரைப் குறித்து காரின் சொல்கையில், ‘அவனுக்குப் பல மாதங்களாக நான் உணவு கொடுத்து வந்தேன். அவன் பொதுவாக பறவைகளுக்குப் போடப்படும் உணவுகளை திருடிச் சாப்பிட முற்படுவான்.
அதே நேரத்தில் நான் உணவு தந்தால் என் கையிலிருந்து எடுத்து நல்லப் பிள்ளை போலச் சாப்பிட்டுவிட்டு ஏக்கத்துடன் என்னையே பார்ப்பான்.
அதே நேரத்தில் கடந்த வாரம் நான் உணவு கொடுத்த போது எனது கையை அவன் கடித்துவிட்டான். அப்போது தான் அவன் பலரையும் இதைப் போலக் கடித்துள்ளான் என்கிற செய்தி கேட்டு துயரமடைந்தேன்.
அவனைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஸ்டிரைப் இப்படி இருந்ததில்லை. ஏன் இப்படி அவன் திடீரென்று நடந்து கொள்கிறான் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் அவனின் இந்த செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தேன்.
எனவே, நான் அவனுக்கு எப்போதும் உணவு கொடுக்கும் பூங்காவில் பொறி வைத்தேன். அதை வைத்த 20 நிமிடத்தில் அவன் மாட்டிக் கொண்டான்.
அவன் என்னை நம்பி அங்கு வந்தான். அவனை நான் ஏமாற்றி விட்டேன்’ என்று வருத்தத்துடன் முழுக் கதையையும் பகிர்ந்து கொண்டார்.
ஸ்டிரைப்பை பிடித்த பிறகு அவன் உள்ளூர் அரசு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். இதையடுத்து அரசு தரப்பு கூறியதாவது, ‘ஸ்டிரைப்பை பிடித்த பின்னர் மருத்துவர் மூலம் அவனை நிரந்தரமான தூக்கத்தில் போட்டுவிட்டோம்.
ஒரு அணிலை இப்படிச் செய்வது வருந்தத்தக்க விஷயமாக இருந்தாலும், நம் நாட்டில் உள்ள சட்டங்கள்படியே நாங்கள் நடந்து கொண்டோம்’ என்று கூறியுள்ளது.