
வானவர் கால அளவை
சதுர்யுகம் ஓரிரண் டாயிரம் பிற்படின்
சதுமுகற் கொருதின மதாம்!
சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்
தாமும்ஈ ரேழ்சென் றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்
மாண்டபோ தொருகற் பம்ஆம்!
மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய
மால்தனக் கோர்தி னமதாம்!
துதிபரவும் இத்தொகையில் ஒருகோடி நெடியமால்
தோன்றியே போய்ம றைந்தால்
தோகையோர் பாகனே! நீநகைத் தணிமுடி
துளக்கிடும் கால மென்பர்!
அதிகம்உள பலதேவர் தேவனே! தேவர்கட்
கரசனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
மயில் (போலும் உமாதேவியார்)
ஒரு பங்கிலுள்ளவனே!, கூட்டமாக
உள்ள பலவகைப்பட்ட வானவர்க்கும் வானவனே!, வானவர் தலைவனே! அருமை தேவனே!, (கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்னும்) நான்கு கொண்ட யுகங்கள் இரண்டாயிரம் கடந்தால் நான்முகனுக்கு ஒரு நாளாகும். கூறத்தக்க இந்த ஒரு
நாளிலே பதினான்கு இந்திர பதவிகள் கழிந்துவிடும், அறிவுமிகுந்த இந்தக் கணக்கின்படி நான்முகன் வயது நூறு கழிந்து இறந்தானானால் ஒரு கற்பம் எனப்படும், (இவ்வாறு) மாறிமாறி வரும்
பிறமகற்பம் ஒருகோடி கழிந்தால் திருமாலுக்கு ஒரு நாளாகும், துதிக்கத் தகுந்த இந்த எண்ணிக்கையில் ஒரு கோடி திருமால்கள் பிறந்து மறைந்தால், நீ சிரித்து அழகிய திருமுடியை ஒருமுறை அசைக்கும் காலம் ஆகும் என்று அறிஞர்
கூறுவர்.