
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் மதவெறி கும்பலா? என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…
நேற்று நடந்த டி என்பிசி குரூப் 2 முதன்மைத் தேர்வில் அம்பேத்கர் தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய மனிதராக அண்ணல் அம்பேத்கர் அவர்களை சித்தரித்திருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. அண்ணல் அம்பேத்கர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்தை அவரது அனுபவத்தின் வாயிலாக பார்க்க வேண்டும்.
அவர் புத்த மதத்தை தழுவிய போது நான் ஏன் கிறித்துவம், இஸ்லாம் மதத்தை ஏற்கவில்லை என்று தெளிவாக இந்த நாட்டின் பண்பாடு கெட்டுவிடக்கூடாது என்பதால் இந்த மண்ணில் தோன்றிய புத்த மதத்தினை ஏற்கிறேன் என்று கூறினார். ஆனால் இந்து மதம் பற்றிய அவரது கருத்தை மட்டும் ஒரு கேள்வியாக அரசுப் பணியாளர் தேர்வில் கேட்டு இருப்பது உள்நோக்கம் கொண்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய உறுப்பினர்கள் திமுக அரசால் நியமிக்கப்பட்டவர்கள். இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சியாக இதை செய்திருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. இந்தக் குழுவில் லயோலா கல்லூரி மூலம் வந்த பாதிரியார் ஆரோக்கியராஜ் இருக்கிறார்.
இந்தக் குழுவினர் அறிவுசார்ந்த, நிர்வாகம் சார்ந்த மேலாண்மை கேள்விகள் அமைக்காமல், இந்து விரோத கருத்தை தேடிப்பிடித்து கேட்கிறார்கள் என்றால் அவர்களது நோக்கம் எவ்வளவு கீழ்த்தரமானது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.
இந்த அரசு பதவி ஏற்ற போது அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாக செயல்படும் என்றும் யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டோம் என்றும் மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் உறுதி கூறினார். ஆனால் இதுபோன்ற செயல்கள் மூலம் மக்களால் நேசிக்கப்படும் தேசிய தலைவர்களை சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பதும், இந்து மதத்தை கொச்சைப்படுத்திட முனைவதும், அரசு ஊழியர்களாக வருபவர்கள் இந்து விரோதமாக செயல்பட வேண்டும் என்ற சமிக்ஞையா என்று சந்தேகத்தை இந்த கேள்வி எழுப்புகிறது.
எனவே இந்த கேள்வியை தயாரித்த குழுவினர் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் தமிழக முதல்வரும் தமிழக கவர்னர் அவர்களும் தற்போதுள்ள இந்த டிஎன்பிஎஸ்சி குழுவை கலைத்துவிட்டு தகுதி வாய்ந்த, நிர்வாக திறமைமிக்க குழுவை நியமிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

