kadeswara subramaniam hindu munnani - 2026

கோயில் சொத்தை ஆக்கிரமித்தவர்க்கு ஆதரவாக செயல்படுவதா?

சற்றுமுன் அரசியல் சென்னை தமிழகம்
kadeswara subramaniam hindu munnani - 2026

கோயில் சொத்தை ஆக்கிரமித்தவர்க்கு ஆதரவாக செயல்படுவதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,கோயிலுக்குச் சொந்தமான கடைகளில் வாடகை உயர்த்த கூடாது என கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்ததற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல பாரத நாடு முழுவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டு தூக்கி எறியப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். தற்போது தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் மக்கள் இவர்களை புறந்தள்ளி இவர்கள் வாங்கிய வாக்குகளை பூதக்கண்ணாடி வைத்து தேடும் நிலைக்கு சென்றுவிட்டது.

தற்போது உச்ச நீதிமன்றமே கோயில் நிலம் சார்ந்த வழக்கிற்கு கோயில் நிலம் அது இனாம் நிலம் ஆனாலும் அந்த கோயிலில் உள்ள கடவுளுக்கே சொந்தமானது என்றும் அரசாங்கம் கோயில் நிலத்தை பாதுகாக்கும் காவலர் மட்டுமே என்றும் ஆணை பிறப்பித்திருந்தது.

கோயில் சொத்து என்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சொந்தமல்ல என்று சட்டபூர்வமான ஆணை இருந்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்கள் இருப்பை காட்டி கொள்ள வேண்டுமென்றே தமிழகத்தில் ஒரு பதட்டமான நிலையை உருவாக்க கோயில் நிலம் மற்றும் சொத்துக்களை தாரை வார்க்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்கள் நிலையை கேலி கூத்தாக்கியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோயில்கள் சம்பந்தமான தனது தீர்ப்புகளில் கோயில் சொத்து மைனர் சொத்தாகவே கருதப்படுகிறது என்று சொல்லி இருக்கிறது. ஆகையால் அதை பெயர் மாற்றம் செய்யவோ, விற்கவோ அதை தங்கள் விருப்பபடி பயன்படுத்துவோ அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்பதையே உணர்த்துகிறது.

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வீடுகட்டி வசித்து வருகிறார்கள் என்பதற்காக கோயில் நில உரிமையையும் கோயில் நிலத்தின் மீது கட்டி உள்ள கட்டிடத்தின் உரிமையையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கத்தக்கதல்ல.

தமிழகத்தில் நன்றாக செயல்பட்ட பல ஆலைகளையும் அரசின் பொதுவுடமை நிறுவனங்களையும் போராட்டம் என்ற பெயரில் நிர்மூலமாக்கி சின்னாபின்னமாக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தற்போது கோயிலையும், கோயில் சொத்துக்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் கேந்திரமாக விளங்கும் கோயிலை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோயிலுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் இதுவரை தமிழகத்தில் காலம் காலமாக விவசாயிகள் அனுபவித்து வரும் நிலங்களையும் ஆயிரக்கணக்கான வருடங்களாக குடியிருந்து வரும் வீடுகள் மற்றும் சொத்துக்களையும் வக்ஃப் போர்டு என்ற பெயரில் திடீரென்று பெயர் மாற்றம் செய்து அபகரிப்பதை பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்..?

ஏழைப் பங்காளன் என்று சொல்லும் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்மையாகவே ஏழைகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடுபவர்கள் என்றால் கோடிக்கணக்கான தன் கட்சி சார்ந்த சொத்துக்களை வீடு இல்லாத ஏழை க்களுக்கு கொடுக்கலாமே. அப்பாவி தொழிலாளர்களிடமிருந்து சந்தா என்ற பெயரில் பல கோடி ரூபாய் வசூலித்து கிடைக்கும் பணத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரலாமே. அதை விட்டுவிட்டு கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்காக கோயில் சொத்துக்கள் மீதும் கோயில்நிலத்தின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு கண் உறுத்துவது ஏன்?

தமிழக அரசாங்கம் இது போன்ற அப்பட்டமான சட்டத்திற்கு புறம்பான நியாயமற்ற கோரிக்கைகளை புறந்தள்ள வேண்டும். கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களின் சொத்துக்களை மீட்டு அதை பாதுகாக்க வேண்டும். கோவில் சொத்துகளையும், கோவில் நிலங்களையும் தாரைவார்க்க துடிப்பது ஏன் ?

கோவில் சொத்துக்கள் கோவிலுக்கே சொந்தமானது அதை பாதுகாப்பது அரசின் கடமை ஆகையால் இந்து சமய அறநிலையத்துறையும், தமிழக அரசும் கோயில் சொத்து மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் வேண்டுமென்றே கலவரம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.