nighty dress wearig women - 2026

படி தாண்டா ‘நைட்டி’

லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் சுய முன்னேற்றம்
nighty dress wearig women - 2026

— ஷமா ராணா —
***
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் நொய்டாவில் ஒரு வீட்டில் குடியிருந்தேன். அந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணி நாளெல்லாம் நைட்டி அணிந்திருப்பார். நைட்டியில் தான் சமைப்பார். வேலைக்காரர்களை மேற்பார்வை யிடுவார். பால்காரர் வந்தால் அவரிடம் பால் வாங்குவார். பக்கத்து வீட்டுடன் வம்பளப்பதும் அதே ஆடையில்தான். வீட்டுக்குள் நைட்டிக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் அவர் வாயிலை தாண்டி போகும்போது மட்டும் ஆடையை மாற்றிக் கொள்வார். ஆரம்பத்தில் நான் அதை கவனிக்கவில்லை. பிறகுதான் எனக்கு இது கவனத்தில் பட்டது. இது இந்திய பெண்களுக்கும் அவர்களது சவுகரியத்திற்கும் இடையேயான சிக்கலான உறவை கச்சிதமாக சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இந்திய பெண்கள் வாசல் தாண்டி போகலாம். ஆனால் நைட்டி வாசலை தாண்டக் கூடாது.

சில மாதங்களுக்கு முன்பு (இந்தியன் எக்ஸ்பிரஸில்) ‘சிவப்பு உதட்டு சாயம்’ குறித்த கட்டுரை வெளியாகி இருந்தது. அதை படித்த போது அதற்கு நேர் எதிரான இந்த விஷயம் மனதில் பட்டது . சிவப்பு உதடுகள் ‘என்னை பார்’ என்று கூவி அழைக்கும் போது ‘என்னை பார்க்காதே’ என்கிறது நைட்டி. இரண்டுக்கும் இடையே பெண்மை தன்னை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. ஒருபுறம் கவர்ச்சியாக அதே வேளையில் கவனத்தை ஈர்க்காத , எளிமையான ஆனால் மட்டமாக இல்லாமல் , சௌக்கரியமாக அதேவேளையில் அலட்சியமாக இல்லாதபடி என்று இரண்டுக்கும் இடையே கச்சிதமாக பெண்கள் நிற்க வேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறது.

நைட்டிக்கு எதிரான சங்கடமான நிலை தொன்மையானது அல்ல. அண்மையதுதான். மேற்கு வங்கத்தில் யூகோ வங்கி கிளை ஒன்றின் ‘நைட்டி மற்றும் அரை நிக்கர்’ அணிந்து வரக்கூடாது என்ற அறிவிப்பு தொற்றுநோய் வேகமாக பரவியது நினைவிருக்கலாம். பூப்போட்ட காட்டனை கவனமாக கண்காணிப்பதை விடவும் வேறு பல கவலைகள் வங்கிக்கு இல்லையா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனாலும் நைட்டியை தவிர்க்கச் சொன்ன அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கவில்லை. பல தசாப்தங்களுக்கு முன்பே இந்திய இல்லங்களில் நுழைந்து, பிரஷர் குக்கரை போலவே ஏற்புடையதாகிவிட்ட போதிலும் முன் வாசலை கடந்து செல்ல ஏனோ அதற்கு சமூக ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்திய பொதுவெளியில் பெண்மை தன்னம்பிக்கையுடன் ஒலிக்க தொடங்குவதற்கு முன்பே வீட்டுக்குள்ளே நைட்டி பெரும் புரட்சி செய்து விட்டது. புடவை கொசுவம், பாவாடை, ஊக்கு போன்றவற்றில் இருந்து விடுதலை பெற்று சமைக்க, பாத்திரம் கழுவ, துவைக்க, குனிந்து சுத்தம் செய்ய, தூக்கிக் கொண்டு போக பெண்களுக்கு சுதந்திரத்தை தந்தது. தலைவழியாக நுழைத்துக் கொண்டு நம்ம பாட்டுக்கு சௌகரியமாக நடமாடலாம். அன்றாட வாழ்க்கையை வாழலாம். நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம். பெண்ணுக்கு வசதியாக, சகஜமாக இருப்பதே அதன் நோக்கம். வேறு யாராவது பார்க்கும்போதுதான் சிக்கல் வருகிறது.

ALSO READ:  ஆஸ்கருக்குச் செல்லும் இளையராஜா இசையமைத்த மராட்டிப் படம்!

என் தோழி ஒருத்தி கருவுற்ற போது மாடி படிக்கட்டு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆடை கட்டுப்பாட்டை விதித்ததை சொன்னாள் . அவரது மாமியார் – மாமனார் தரை தளத்தில் வசித்தனர். அவள் மேல் தளத்தில் நைட்டியில் வசதியாக வளைய வருவாள் . ஆனால் கீழே இறங்கி வர வேண்டும் என்றால் ஆடையை மாற்றிக் கொண்டுதான் வரவேண்டும். கர்ப்ப காலத்தில் உடல் மாறும், நடை மாறும், பசி மாறும், மற்றவர்களின் பார்வையை ஈர்ப்பதாக தோற்றம் இருக்கும். ஆனால் இதெல்லாம் கண்ணியம் சார்ந்த விதிகளை மாற்றாது. மேல்தளத்தில் நைட்டி எல்லா வகையிலும் ஏற்புடையது. படிக்கட்டு வந்தவுடன் அதன் கண்ணியம் சார்ந்த நற்சான்று காணாமல் போய்விடும்.

குறைந்தபட்ச அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடியதாக இந்த ஆடையை வடிவமைத்தது ஒரு சாதனை என்று தான் கூற வேண்டும். பொதுவாக இந்திய நைட்டி நீண்டதாக, தளர்வாக, வண்ண பூ போட்டதாக, பெரிதாக இருக்கும். நீங்கள் எந்த வடிவில் இருந்தாலும் அது பொருந்திவிடும். சமுதாயத்தை சீரழிப்பது அதன் நோக்கமாக இருந்தால் இதொரு மோசமான வியாபார யுக்தி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாதுரியம் இதற்கு ஒரு எளிய தீர்வை கண்டுபிடித்தது. அதுதான் ‘துப்பட்டா’ . நைட்டிக்கு மேலே இதை போட்டுக் கொண்டால் கலாச்சார அதிசயம் நிகழ்ந்துவிடும். கீழே எதையும் மாற்ற வேண்டாம், மேலே இதை போட்டுக் கொண்டால் மரியாதையான தோற்றம் கிடைத்துவிடும். ‘நான் சௌக்கியமாக இருக்க விரும்புகிறேன்’ என்று நைட்டி சொல்லும். ஆனால் ‘நான் பண்பாட்டை மறந்து விடவில்லை’ என்று துப்பட்டா அவசர அவசரமாக ஒத்தூதும். பண்பாடு என்பது ஒன்றின் மீது ஒன்றாக படிந்து இருப்பது தானே.

பார்ப்பதற்கு யார் வசதி படைத்தவராக தோற்றமளிப்பார் ?

இந்திய ஆணை பாருங்கள். பழைய அரை நீக்கர் , வெளிறிய டி-ஷர்ட், ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு அப்பார்ட்மெண்டில் இருந்து கீழ இறங்கி பால் வாங்குவான். தக்காளியை பேரம் பேசுவான் . செக்யூரிட்டியுடன் இருபது நிமிடம் உலக அரசியல் பற்றி வகுப்பெடுப்பான். யாரும் அவனுடைய ஆடையை சமுதாய சீர்கழிவு என்று கருத மாட்டார்கள். அவனுடைய ஆடை மூலம் சமுதாயத்துக்கு என்ன செய்தியை சொல்லுகிறான் என்று கேள்வி எழுப்ப மாட்டார்கள். அவர் அங்கிள். அங்கிளுக்கு தக்காளி வேண்டும் அவ்வளவுதான்.

ALSO READ:  41 நாள் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

ஒரு பெண் வசதியானவராக தோற்றமளிக்க நிறைய விஷயங்கள் தேவை. அவள் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் ஆனால் கவனத்தை ஈர்ப்பவளாக இருக்கக் கூடாது. எளிமையாக இருக்க வேண்டும் அதே வேளையில் சோர்வாக, ஒளியற்று இருக்கக் கூடாது. சாதாரணமான ஆடையை அணிய வேண்டும் ஆனால் கண்ணியமாக தோன்ற வேண்டும். சமுதாயத்தில் கௌரவமாக, கண்ணியமாக தோற்றமளிக்கும் வரையில் ஒரு பெண் வசதியான ஆடையை அணியலாம்.

ஒய்யார நடை போட்டு சொகுசான நீண்ட ஆடை வந்தபோது அதன் அபத்தம் அம்பலமானது. வழவழப்பான சாட்டன் பைஜாமா, விலை உயர்ந்த முழு மேலாடையுடன் ரிசார்டில் காலை உணவு அறைக்கு வர முடிந்தது. நட்சத்திர ஓட்டல் வரவேற்பறையில் கண்ணியமாக உலாவ முடிந்தது. சரியான அலங்காரத்தில், சரியான இடத்தில் உலாவினால் யாரும் நீங்கள் ஆடை மாற்ற மறந்ததாக நினைக்க மாட்டார்கள். உயர்தர துணியில், கச்சிதமாக வெட்டி வடிவமைக்கப்பட்ட, விலை உயர்ந்த ஆடையை கவனமாக தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு ஆடையே அணியாதது போன்ற பாவனையில் நீங்கள் வரலாம். சௌக்கியமாக அணியும் ஆடை பிராண்ட் லேபிளுடன் இருந்தால் அது மதிப்புக்குரியதாக மாறிவிடும்.

நானூறு ரூபாய்க்கு கிடைக்கும் பூ போட்ட நைட்டிக்கு அந்த அந்தஸ்து கிடையாது. நாலாயிரம் ரூபாய்க்கு விற்கும் நைட்டியின் அக்காவுக்கு ‘நாகரீகமான நீண்ட ஆடை’ என்ற கௌரவம் உண்டு. மேக்ஸியை போட்டுக் கொண்டு படி இறங்கினால் புருவம் உயரும். இரண்டும் உடலை மறைக்கின்றன. உடுத்த இரண்டும் சௌக்கியமாக இருக்கின்றன. ஆனால் ஒன்று பண வசதியையும் சொகுசையும் ரசனையையும் காட்டுகிறது. மற்றது பிரஷர் குக்கர், பால் பாக்கெட், வருமானம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்வதை அடையாளப்படுத்துகிறது. ஒரு பெண்மணி நாகரீக ரசனையுடன் ஆடை அணிந்திருப்பதாக கருதப்படுகிறார். மற்றவர் ஆடையே அணியாதது போல் அநாகரிகமாக பார்க்கப்படுகிறார். வேறுபாடு கண்ணியம் என்பதில் இல்லை. மாறாக எது நாகரீகம், ரசனை என்பதை நாம் இருக்கும் சமுதாய நிலை / வர்க்கம் முடிவு செய்கிறது.

ஒரு வகையில் நைட்டி என்பது ஒரு அவமதிப்பு போல்தான் தெரிகிறது. தலைமுடியை ஒய்யாரமாக கொண்டை போடாத, முகத்தை அழகு படுத்தாத, தொப்பை வயிற்றுடன் கூடிய, பார்க்க மனத்திருப்தி அளிக்காத உடலை கொண்ட, கௌரவமற்ற பெண்ணுக்குரியதாக நைட்டி இருக்கிறது. அது, நான் வந்துட்டேன், என்று சொல்வதில்லை. அடித்து வீழ்த்துவதில்லை. அடைய வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதில்லை. யாராவது பார்க்கிறார்களா என்று அக்கறையற்று அது இருப்பது மன்னிக்க முடியாதது . அதனால் தானோ என்னவோ கண்ணியமாக உடுத்தி இருப்பவர்களை பார்க்கும்போது மக்கள் அசௌக்கரியமாக உணருகிறார்கள். நைட்டி உடலில் எதையும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால் நான் ஆடை அணிவது மற்றவர்களுக்காக அல்ல என்ற முடிவெடுத்த பெண்ணைப் பற்றி நிறைய சொல்கிறது.

ALSO READ:  தென்காசி மாணவ-மாணவிகள் தேசிய அளவில் சாதனை: ‘கிளியாந்தட்டு’ போட்டியில் வெண்கலம்!

உதட்டு சாயமும் நைட்டியும் படுக்கை அறையில் நேர் எதிரான இடத்தில் வாழலாம். ஒன்று ஒப்பனை மேஜையில், மற்றது அலமாரியில். ஆனால் சமுதாயம் இரண்டிற்குமான விதிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. பார்த்தவுடன் கவரக் கூடியது ஒருபுறம் என்றால் மனநிறைவு தராதது மற்றொரு புறம். இரண்டுக்கும் இடையே சரியான புள்ளியில் பெண் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். பிரச்சனை உண்மையில் உதட்டு சாயத்திலோ இரவு உடையிலோ இல்லை. மற்றவர்களின் பார்வைக்கு, வசதிக்கு, எதிர்பார்ப்புக்கு ஏற்ப பெண் தன்னைத்தானே தொடர்ந்து எடை போட்டு நிலைநிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.

நான் குடியிருந்த வீட்டுக்காரி அதை புரிந்து கொண்டிருந்தார். ஆனால் அப்பட்டமாக வெளிப்படுத்தவில்லை. வாசக்கதவுக்கு உள்ளே தனக்காக உடுத்திக் கொண்டார் . உலகத்தை சந்திக்கும்போது தன்னை மாற்றிக் கொண்டார். இந்திய பெண்கள் பள்ளி வகுப்பறையை, அலுவலகத்தை, நீதிமன்றத்தை, நிர்வாக அறையை கடந்து சென்று விட்டார்கள். நைட்டி இன்னமும் வாசக்கதவுடன் வாதாடிக் கொண்டிருக்கிறது.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

Posts by தினசரி செய்திகள்: