
- ஆர் கே
நவம்பர் என்றாலே சேபாக் ஸ்டேடியம் தொடங்கி ஈடேன் தோட்டம் வரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மன உறுதியை தொடர்ந்து சோதிக்கும் மாதம் போலத்தான் என்று நினைக்கும் அளவுக்கு சுழல வைத்து மட்டை போட வைத்துவிடுகிறது. உங்களுக்கு நினைவிருக்கிறதா ?மும்பை வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு, சச்சின் டெண்டுல்கர் 16 நவம்பர் 2013 அன்றுதான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதன் மூலம் அவரது 24 ஆண்டுகால அபாரமான விளையாட்டு வாழ்க்கை நிறைவுக்கு வந்தது.
அவர் ஓய்வு பெற்ற சில மணிநேரங்களிலேயே, இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுவதாக அறிவித்து அந்த விருதைப் பெறும் மிக இளைய நபராகவும் திகழ்ந்தது வேறு கதை. இதோ இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அறிவிக்கப்பட்ட தேதி = 17 நவம்பர் 2026 . ஆக தோனி தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.. இதற்காக அவர் தனது விருப்பமான ‘மைன் பல் தோ பல்’ (Main pal do pal) பாடலைப் பயன்படுத்தினார்; இதே பாடலைத்தான் அவர் 2020 ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோதும் பயன்படுத்தியிருந்தார்.
மஞ்சள் நிற ஜெர்சியை ஒரு உணர்ச்சியாக மாற்றிய பெருமையுடன் இந்த உரிமையை சுமந்தவர் தோனி . இறுதியாக களத்தை விட்டு விலகுகிறார். ஒரு பேட்ஸ்மானாக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக, ஒரு வழிகாட்டியின் பாத்திரத்தை ஏற்கும்போது, எம்எஸ் தோனி அந்த பழக்கமான மஞ்சள் நிறங்களில் களத்தில் நடப்பதை வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாது.
சென்னைக்கு வந்து CSK யால் அழைத்துச் செல்லப்பட்ட நீண்ட கூந்தலுடன் அந்த இளம், துணிச்சலான மனிதராக நம் மனதில் இன்னும் நினைவில் நிழலாடுகிறார். அவர் இந்த நகரத்தின் மிகவும் அன்பான மகன்களில் ஒருவராக தொடர்ந்து விளங்கப்போகிறார் என்கிற அன்பு பாச மொழிகள் எல்லாம் அப்போது எங்களுக்குத் தெரியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) வெளியிட்ட அறிக்கையில் தோனியின் கருத்து எதுவும் இடம்பெறவில்லை. 2020-ல் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு விடைபெற்றது போலவே, இப்போதும் சமூக ஊடகங்கள் மூலமாகவே தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
2 டிசம்பர் 2005 அன்றுதான், சென்னை சேப்பாக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக எம்.எஸ். தோனி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் தொடக்கமாகும்!
ஐபிஎல் 2027-க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைக்குழு உறுதி செய்யப்பட்டுள்ளது! ‘தல’ எம்.எஸ். தோனி ஆலோசகராகவும் , ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராகவும், ஆல்பி மோர்கல் உதவிப் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்கின்றனர்!
ரவீந்திர ஜடேஜாவும் தனது ‘தலை’ எம்.எஸ். தோனிக்கு உருக்கமான பிரியாவிடை அளித்துள்ளார்: முக்கியமான தருணங்களில் களத்தைப் பகிர்ந்து கொண்டது முதல், மஞ்சள் நிற சீருடையில் இணைந்து கோப்பைகளை வென்றது வரை—இவர்களுக்கிடையிலான பிணைப்பு கிரிக்கெட்டைத் தாண்டிய ஒன்று. சென்னை செபாக் மைதானத்திற்கு என்று பாராட்டப்படும் படியான குணம் ஒன்று உண்டு. அது தான் கொண்டாடும் நாயகர்களை ஒருபோதும் கைவிடாது.
குண்டப்பா விஸ்வநாத், விவியன் ரிச்சர்ட்ஸ், லாயிட் , ஸ்ரீகாந்த், சச்சின் தொடங்கி டோனி வரை ரசிகர்களை ரன் மழையால் குளிர வைக்கும் நாயகர்களை உச்சி குளிர வைக்கும் பங்கு. சென்னை சென்னைதான். வெளியூர்களில் இருந்து வந்தவர்களை சென்னை எப்போதும் அரவணைத்து தனதாக்கிக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு கதைதான் ரஜினிகாந்த். இன்னொருவர் எம்எஸ் தோனி. அவர் இங்கே பிறக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் நம்மில் ஒருவராக மாறினார். மேலும் நம் இதயத்தில் அந்த இடம் நிரந்தரமானது.
தோனி இன்னும் ஓராண்டு விளையாட முடிவெடுத்திருந்தால், கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு எடுக்க முடிவு செய்யும் நிகழ்வை ஒரு பெரும் கொண்டாட்டமாகவே ஆக்கியிருப்பர். உருப்படியில்லாத நிகழ்வுகளுக்கெல்லாம் ரீல்ஸ் உருட்டப்படும் வெளி உலக நிகழ்வுகள் இருக்கும்போது, சூப்பர் கிங்ஸ் நாயகனை தூக்கிக் கொண்டாடாமல் இருக்க முடியுமா?
ஐ பி எல் தொடரிலிருந்து தங்கள் தல ஓய்வு பெறும் நாள் என்றோ ஒருநாள் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இருப்பினும், கால் ஷீட்டுகள் இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கும் நேரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன் என்று அறிவித்தால் ரசிகர்கள் மனது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையாக எண்ணிப்பாருங்கள். அதே மனா நிலைதான் கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையஜும். ஆனாலும் இன்றைய சூழலை ஏற்றுக்கொள்வது கடினமாகத்தான் இருக்கிறது.
இருப்பினும்,கிரிக்கெட்டை எங்களுக்கு மிக அருகில் கொண்டு வந்து நெருக்கமாக்கியதற்கு நன்றி, தல. . வெற்றி என்பது எட்டக்கூடிய தூரத்தில்தான் இருக்கிறது என்று எங்களை தொடர்ந்து நம்ப வைத்ததற்கு நன்றி அண்ணா. நீங்கள் கொடுத்த நினைவுகள், நிகழ்த்திய அற்புதங்கள், சாத்தியமற்ற வெற்றிகள், மற்றும் ஒரு ஒட்டுமொத்த நகரத்தையே நம்ப வைத்த அந்த எண்ணற்ற தருணங்களுக்காக நன்றி .
தோனியின் அந்த நினைவுகளை மஞ்சள் நிறத்தில் மீண்டும் நினைவுபடுத்துவதில் ஒவ்வொரு ரசிகனும் உண்மையிலேயே உணர்ச்சிவசப்படுகிறான். என்ன ஒரு தலைவர், பாட்டிங் ஆளுமை, ரசிகர் மனம் அறிந்த ஆளுமை, மைதானம் தாண்டியும் சோசியல் மீடியாக்களை எல்லாம் தாண்டிய வீர தீரா ஆளுமை, விளையாட்டு தந்திரங்களை அறிந்து சரியான தருணத்தில் – அது கடைசி நொடியாயினும் எப்படியாவது செயல்படுத்தி வெற்றிக்களம் கண்ட ஆளுமை, அற்புதமான விக்கெட் கீப்பிங் ஆளுமை, மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிரிக்கெட் மற்றும் சென்னை நகரத்தின் அற்புதமான தூதுவர் எனும் பெருமை.
தீபகற்ப இந்தியா சர்வதேச கிரிக்கெட் அளவில் தீபம் ஏற்றிப் பிரகாசிக்க வைத்து வரும் தலைசிறந்த ரோல் மாடல், மக்கள் தொடர்பாளர், வளரத்துடிக்கும் இளம் கிரிக்கெட் சிங்கக்குட்டீஸுக்கு திறன்மிகு கிரியாஊக்கி நம்ம தோனி என்றால் மிகையாகாது.


