chozhavandhan bus frequency - 2026

மாணவ மாணவியருக்கு போதிய பஸ் வசதி தேவை; கல்வியில் அக்கறை காட்ட கோரிக்கை!

சற்றுமுன் கல்வி சென்னை தமிழகம்
chozhavandhan bus frequency 1024x576 1 - 2026

தமிழகத்தில் மாணவர்கள், மாணவிகள் போதுமான போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி!! நடவடிக்கை எடுக்க வேண்டி இந்து இளைஞர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். 

ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்கள், மலைப்பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் போதுமான பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக, காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் நேரங்களிலும், மாலையில் வீடு திரும்பும் நேரங்களிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சில இடங்களில் பேருந்துகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பேருந்தின் பின்புறம் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களைப் பிடித்துக்கொண்டும் பயணம் செய்யும் அவலநிலை நிலவுகிறது.

இத்தகைய ஆபத்தான பயணங்களால் மாணவர்களின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. ஒரு சிறிய கவனக்குறைவுகூட மாணவர்களின் உயிரைப் பறிக்கும் துயரச் சம்பவங்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

மேலும், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கல்வி பாதிக்கப்படுகிறது. குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் வாகனங்களைப் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கல்வி என்பது ஒவ்வொரு மாணவரின் அடிப்படை உரிமையாகும். அந்தக் கல்வியைப் பெறுவதற்காகச் செல்லும் பயணமே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடக்கூடாது. 

எனவே, இந்த தமிழக அரசாங்கமும் பள்ளிக் கல்வித் துறையும் இதில் துரிதமாக செயல்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பயணம் செய்யும் வழித்தடங்களைக் கண்டறிந்து, அந்த வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மாணவர்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்து, பேருந்துகள் பற்றாக்குறையால் அவர்கள் பயண வாய்ப்பை இழக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து மாணவர்களின் போக்குவரத்துத் தேவைகளைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்களின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டி இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி (HYF) தமிழ்நாடு சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.

Posts by தினசரி செய்திகள்: