ilayaraja music program in singapore - 2026

சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல் விமர்சனம்
ilayaraja music program in singapore - 2026

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இசை அனுபவம்!

– மீனாட்சி முத்தையா, சிங்கப்பூரிலிருந்து…

பெருமகிழ்ச்சி, உவகை, பேரானந்தம், மட்டற்ற மகிழ்ச்சி இப்படி எந்த வார்த்தைகளுக்குள்ளும் அடக்கமுடியாத உணர்வை எப்படிச் சொல்வீர்கள்?

வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஓர் அற்புத உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும். நேற்றைய இசைஞானியின் நிகழ்ச்சி அத்தகைய அற்புத உணர்வுக்குள் அரங்கிலிருந்த அனைவரையும் இழுத்துச் சென்றது. 7.25-க்கு அரங்கிற்குள் நுழைந்தார் இசைஞானி. நிகழ்ச்சி முடியும் போது இரவு 11.50. ஒரு விநாடி கூட மனிதர் உட்காரவில்லை! நான்கு மணிநேரத்திற்கும் மேலாக நின்று கொண்டே நிகழ்ச்சியை நடத்தினார்.

ஒரு பாடல் முடிந்து அடுத்த பாடலுக்குத் தயாராக ஆர்கெஸ்ட்ரா சில விநாடிகள்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனை அருமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றிய திறமையான கலைஞர்கள் அனைவருக்கும் அன்பு.

இசைஞானி முதலில் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஆரம்பிப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால், உள்ளே வந்ததுமே ஜனனி ஜனனியில் ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து ஹரிசரணின் அற்புதக் குரலில் ஓம் சிவோகம் பாடல். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து பேச ஆரம்பித்த ராஜா, தன்னுடைய படிப்படியான வளர்ச்சியை விவரித்து அன்னக்கிளிக்கு இசையமைத்த இடத்திற்கு வந்தது வரை பகிர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடலைத் தமிழ் தெரியாத விபாவரி அருமையாகப் பாட, அடுத்து வழி நெடுக காட்டுமல்லி தலைவன் குரலில் அரங்கைக் கட்டிப்போட்டது.

ALSO READ:  திருமலைக்கோவில் தேரோட்டம்; கும்பிடு சரண வழிபாடு நிகழ்த்தி பக்தர்கள் பரவசம்!

இதன்பின் அடுத்தடுத்து கொண்டாட்டமான பாடல்கள்தான்! ராஜா ராஜாதி ராஜன் எங்கள் ராஜா, மடை திறந்து தாவும் நதி அலை, மேகம் கொட்டட்டும், ராக்கம்மா கையத்தட்டு, நின்னுக்கோரி வர்ணம், ஆசை நூறு வகை என்று சரவெடித் தோரணம்.

டோரத்தியின் முத்துமணிச்சரம் பாடலின் ஆரம்ப இசை வந்ததுமே அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது. பெயர்காரணத்தினாலேயே எனக்கு இந்தப் பாடல் வெளியான நாளில் இருந்தே சற்று அதிகமான ஒட்டுதல் இந்தப் பாடலுடன்.

வனக்கிளியே என்று ராஜா ஆரம்பிக்க ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, லேசாகக் குரல் உடைந்து ராஜா மாதங்கி மரகதமணி மீனாட்சி என்று தழுதழுக்க… அந்த நிமிடத்தில் எழுந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டுவர வார்த்தைகளே இல்லை. ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க மறுக்காமல் ராஜா மீண்டும் வனக்கிளியேவில் ஆரம்பித்துப் பாடினார்.

சரண், யுகேந்திரன், கார்த்திக் மூவரும் பாடிய பாடல்களைத் தனியொரு பதிவாகத்தான் எழுத வேண்டும். நேற்றைய நிகழ்ச்சியில் அதிகக் கைத்தட்டல்களைப் பெற்ற பாடல் எனில், ஹரிசரண் பாடிய சங்கீத ஜாதிமுல்லை பாடல்தான். அநாயாசமாகப் பாடுகிறார். அதேபோல் சரத்தும், சுர்முகியும் இணைந்து பாடிய கண்மணி அன்போடு பாடலுக்கு ரசிகர்கள் மொபைல் டார்ச்சை ஆன் செய்து வைப்பை உருவாக்கிக் கொண்டாடித் தீர்த்தார்கள். இந்தப் பாடலும் ஒன்ஸ்மோர் கேட்கப்பட்டு கடைசி வரிகள் மீண்டும் பாடப்பட்டது.

ALSO READ:  நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்கள் இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை!

விக்ரம், சொர்க்கம் மதுவிலே, கல்யாணவிருந்து, எஞ்ஜோடி மஞ்சக்குருவி பாடல்கள் எல்லாம் பட்டையைக் கிளப்பியது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. பதிவின் நீளம் கருதி பட்டியலை மட்டும் முதல் கமெண்டில் இணைக்கிறேன்.

நிகழ்ச்சியின் கடைசிப் பாடல் தென்பாண்டிச் சீமையிலே பாடல். ராஜாவுடன் சேர்ந்து ரசிகர்களும் பாடி நிறைவாக உணர்ந்த கணம் அது.

உன் வாழ்வில் சில நொடிகள் என் வாழ்வில் சில நொடிகள் எந்நாளும் நினைவில் நிற்கும் இந்நொடி தானே! இந்நொடி தானே!

வேறென்ன சொல்வது. இது எனக்கு வாழ்நாள் பேறு.

Posts by Dhinasari Reporter:

ALSO READ:  ஐப்பசி மாத துலா ஸ்நானம்; கடைமுகம்; முடவன் முழுக்கு!