
மலேசியா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாட்டு தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு ஏ என் சிவராமன் விருது வழங்கப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளரும் பத்திரிகை உலகின் பிதாமகர் என்று புகழப்படுபவருமான ஏ என் சிவராமன் அவர்களின் பெயரில் வருடந்தோறும் சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. தேஜஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் இந்த விருதினை சிறந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.
இந்த வருடம் ஏ என் சிவராமன் விருது வழங்கும் விழா இணைய வழியில் ஜூம் மீட்டிங் வாயிலாக நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிங்கப்பூரை சேர்ந்த மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் எஸ் எஸ் சர்மா, மலேசியாவின் மூத்த தமிழ் பத்திரிக்கையாளர் ராமதாஸ் மனோகரன் ஆகியோருக்கு ஏ.என். சிவராமன் விருது வழங்கப்பட்டது. ஏ என் சிவராமன் பெயரன் வழி உறவினரும் கலைமகள் இதழின் ஆசிரியருமான கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருது வழங்கும் விழாவில் ஆடிட்டர் ஜி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர் கலந்துகொண்டு பத்திரிகையியல் குறித்து பேசினார். பத்திரிகையாளர்கள் தன்னார்வ தொண்டர்களைப் போல சமூகத்தின் பொறுப்பை உணர்ந்து செய்திகளை வெளியிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கீழாம்பூர் சங்கர சுப்ரமணியம், நாம் சொல்ல வரும் கருத்தை தாய் மொழியில் சொல்லும் போது வீரியம் மிக்கதாக அமையும். அந்த வகையில் தாய்மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் இரு கண்கள் என்று கருதியவர் சிவராமன். அவர் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று செய்தியும் சேகரித்து வந்தார்.
இளம் பத்திரிகையாளர்கள் தற்கால செய்திகளைச் சேகரிப்பதுடன், சரித்திர நிகழ்வுகளையும் படிக்க வேண்டும். அப்போதுதான் கருத்தாழமிக்க கட்டுரைகளை எழுத முடியும். அது அவரின் வளர்ச்சிக்கும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் உதவும்.
இன்று விருது பெற்றுள்ளவர்கள் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடக்கும் தமிழ் மாநாடுகள் உள்ளிட்டவற்றை செய்தி ஆகியுள்ளனர். தமிழர்களின் நாடக மன்றங்கள் மற்றும் வாசகர் வட்டத்தையும் வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு ஏ.என்.எஸ் விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று பேசினார்.
இந்த இணைய நிகழ்ச்சிக்கான ஜூம் மீட்டிங் ஏற்பாடுகளை தேஜஸ் பவுண்டேஷன் அமைப்பின் பிடிடி ராஜன் செய்திருந்தார் சி.வி.சந்திரமோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பவித்ரம் அமைப்பின் நிறுவுனர் டாக்டர் ஜாய்ஸ் திலகம் நிறைவுரை ஆற்றினார்.