
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
72. இனம் இனத்தோடு!
ஸ்லோகம்:
ம்ருகா ம்ருகை: சஜ்கமனுவ்ரஜந்தி
காவஸ்ச கோபிஸ்துரகாஸ்தரங்கை:|
மூர்காஸ்ச மூர்கைஸ்ஸுதிய: சுதீபி:
சமானசீலவ்யசனேஷு சக்யம் ||
பொருள்:
மான்கள் பிற மான்களோடு சேர்ந்து திரியும். பசுக்கள் பசுக்களோடும் குதிரைகள் குதிரைகளோடும் சேர்ந்து திரியும். மூர்க்கர்கள் மூர்க்கர்களோடும், அறிவாளிகள் அறிவாளிகளோடும் நட்பு கொள்வர். சமமான உழைப்பு இருப்பவர்களிடையே மட்டுமே நட்பு நிலைக்கும்.
விளக்கம்:
ஒரே வித குணம் உள்ளவர்கள், ஒரே வித பிரச்சினை உள்ளவர்கள் நட்போடு இருப்பார்கள் என்ற உண்மையை விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
மகாபாரதத்தில் சமமான இயல்பு, சமமான கல்வி உள்ளவர்களிடையே மட்டுமே நட்பு, திருமண உறவு சாத்தியமாகும் என்று விவரிக்கிறார் வியாசர். துஷ்டனான கர்ணன் துஷ்டனான துரியோதனனோடு ஜோடி சேர்ந்தான்.
பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணன் தர்மாத்மாக்களான பாண்டவர்களுக்கு துணை நின்றார். தன் கூட்டத்தாரோடு ஒத்துப் போக இயலாமல் தர்ம ஸ்வரூபனான ரகுநாதனைச் சேர்ந்த விபீஷணன் கூட இதற்கு உதாரணமே. சமமான பிரச்சனை கொண்ட சுக்ரீவன் ராமனோடு நட்புக் கொண்டான்.