old coin - 2026

நாணயத்தின் கௌரவப் பக்கம்

லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் சுய முன்னேற்றம்
old coin - 2026

பிரபலங்களை பேட்டி எடுக்கும் எனது தொடர் சகாப்தத்தில் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு பிரபலத்தை பேட்டி எடுத்த பின்னர் அவரே ஒருவர் பெயரைக்கூறி அவரை பேட்டி எடுக்கப் பரிந்துரைத்தார். சொன்னவர் எனக்குப் புதியவர். சொல்லப்படுபவர் எனக்கு ஓரிரு தருணங்களில் ஏற்கனவே அறிமுகமானவர்.

ஆங்கிலத்தில் LATTER எனக்கூறுவார்கள். அந்த லேட்டர் மனிதர் (தற்போது LATER கூட). அந்த later பழகுவதற்கினியவர். யாரை சந்தித்தாலும் வெறும் கையுடன் சந்தித்த நிகழ்வுகள் குறைவு. பழம், பேனா என்று அவர் ஆபீஸ் எக்சிக்யூட்டிவ் பையில் ஏதாவது எப்போதும் மணந்து, மலர்ந்து கொண்டிருக்கும். சிபாரிசு செய்தவரும் விடவில்லை. நானும் அந்த பழகுவதற்கினியவரை விடவில்லை …. பேட்டி எடுத்தே தீருவது என்று கங்கணம்.

அப்படி என்ன அவரிடம் சிறப்பு என்றால் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் (இப்போது புழக்கத்தில் இல்லை) முதல் 1000 ரூபாய் வரை மிக மிக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் வண்ணம் அரிதாகப் புழங்கும் ரூபாய் நோட்டுக்களை சேமிக்கும் பழக்கம். அரிதான இந்திய, வெளிநாட்டு நாணயங்களும் இவற்றில் அடக்கம்.

அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளில் எடுத்துக்காட்டுக்கு 880880, 010000, 100100 என்று வித்தியாசமான அரிதில் கிடைக்கக்கூடிய நோட்டுக்கள் இருக்கும். போஸ்ட் ஆபீஸ், வங்கி என்று எங்கே போனாலும் காசாளரை நட்புக்கொண்டு விடுவார். இப்படி பொழுதுபோக்காக என்று வைத்துக்கொண்டால் பணம் சுழற்சி இன்றி முடங்கி விடுமே என்று கேட்டேன். “அரிய சாதனைகள் செய்யணும் என்று களத்தில் இறங்கி விட்டால், நம்ம பர்ஸ் கடிக்கிறதே!!” எனக் கவலைப்படுவதில் புண்ணியம் இல்லை என்றார். சாதாரண மனிதர்தான். ஆனால் பணக்காரர் போல பதவிசுடன் நாணயங்களுக்கு நடுவே வாழ்ந்த பெருமை அவருக்கு.

இந்த ஸ்டேட்மேன்ட் எதற்கு என்று வினவலாம். பல தருணங்களில், நாம் அன்பளிப்பாக அளிக்கும் நாணயங்கள் சிலவற்றை ஒரே சட்டத்தில் பதித்து வைத்து – வீட்டு பெட்டகங்களை, வரவேற்பறை அலமாரிகளை அலங்கரிக்கும் வாழ்வின் சுவை தெரிந்த நண்பர்கள் பலர் உள்ளனர்.

இப்படி பதித்து வைத்தால் இரண்டு சங்கதிகள் நாம் தெரிந்து கொள்ளலாம். : 1. சமுதாயத்துக்காக / வேலை செய்த நிறுவனத்திற்காக / கல்லூரிக்கான நாம் அளித்த நல்ல பங்குக்கு கிடைத்த மரியாதை நாம் இவற்றை பார்க்கும் தருணங்களில் எல்லாம் நம் மனதில் நிற்கவல்லவை. 2. யார் யார் நமக்கு இவற்றை பரிசாக அளித்தார்களோ அவர்களை எப்போதும் நம் மனதில் இருத்தி, வணங்கும் பாராட்டத்தக்க குணம்.

இந்தக் கட்டுரையை நான் வேண்டுமென்றே பகிர்ந்துகொள்ள சில மாதங்களாகக் காத்திருந்தேன், ஏனென்றால் சில மைல்கற்கள் அவற்றிற்கே உரிய தருணத்திற்குத் தகுதியானவை.

சில நாட்களுக்கு முன்னர், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஒரு மேடையில் விழாக்களில் பலருக்கு சால்வைகள் போர்த்துவது வேண்டாமே என்று அவரது சொந்தக்கருத்தை பரந்த பார்வையுடன் வெளியிட்டிருந்தார். ஏன்? இப்படி அவர் கருத்து தெரிவித்திருந்தார் என்று நாம் சிந்திக்கலாம்.ஒன்று அவற்றை பின்னால் பயன்படுத்துவோர் குறைவு. இரண்டு இவற்றைப் போர்த்தும் நேரம் மேடைகளில் கணிசமான நேரத்தை எடுத்துக்கொள்வதால், ஆடியன்ஸ் பலரும் பெரும் அங்கலாய்ப்பு !!!

சரி.. நமது கருத்துக்கு வருவோம். சால்வைக்கு பதிலாக பஞ்சலோக / வெள்ளி போன்ற சிறிய அளவிலான நாணயங்களை விழா pamphlet /ரிலீஸ் ஆன புத்தகத்தோடு விழா தொடக்கத்திலேயே மைக்கில் நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் வழங்க முற்படலாம். இதனால் என்னென்ன பயன்கள்? மேடையில் இதற்காக எடுத்துக்கொள்ளும்/சால்வை போர்த்தும் நேரம் கணிசமாகக் குறையும். நாணயத்தை பண பீரோவிலோ வரவேற்பு அறையிலோ காட்சிக்காக வைத்து வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் நாணயம் பெற்ற பின்னணிகளை பேசி மகிழலாம்.

ஏனெனில் நாம் கவுரவிக்கப்படும்போது அந்த தருணத்தில் நமது சாதனைகளில் மற்றோரு மைல்கல்லை எட்டியிருக்கலாம். வெறும் நாணயம் ஆயினும் பெரும் இடம்/மேடை/மேடையில் அலங்கரிக்கும் VIP அமர்வுகளில் அணிவகுப்பு போன்றவை சாதனையாளர் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாததாகின்றன.

நாணயம் என்னும் பரிசு பெறுவோர் பொதுவாய் நாணயமாக உழைத்ததன் அங்கீரத்திற்காகத்தின் பொருட்டே பெறுவார்கள் என்று வைத்துக்கொண்டால் நாணயம் பெறுவோர் பெருமை அங்கீகாரங்களைத் தாண்டியவையாகின்றன. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளாக இத்தகைய தருணங்களும்,பரிசுகளும் மாறி விடுகின்றன.

அடுத்த முறை நாமும் நாணயங்களை சேகரிக்கப் பழகுவோம். ஒவ்வொரு நாணயமும் நமது நாணயம் மிகு சாதனைக்காக நமக்கு வழங்கப்படுபவை. நம்மைப் பெருமைப்படுத்துபவை. எனவே, நாம் பெறும், பெறப்போகும் ஒவ்வொரு நாணயமும் ஒரு விருதை விட மேலானது.

ஒவ்வொரு நாணயமும் நிச்சயமாய் ஒரு கதையைச் சொல்லவல்லது. மாந்தர்தம் ஏறி வந்த பயணத்தைப் பிரதிபலிக்கிறது, அது மட்டுமல்லாமல்,நம்மை வடிவமைத்த மனிதர்களையும் அனுபவங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது.

  • ஆர்.கே

Posts by தினசரி செய்திகள்: