
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
86. கல்வி, செல்வம், வீரம்!
ஸ்லோகம்:
வித்யா விவாதாய தனம் மதாய சக்தி: பரேஷாம் பரபீடனாய |கலஸ்ய சாதோர்விபரீதமேதத் ஞானாய தானாய ச ரக்ஷணாய||
– பர்த்ருஹரி
பொருள்:
தீயவன் கல்வியறிவை விவாதம் செய்வதற்கு பயன்படுத்துவான். அவனுடைய செல்வம் கர்வம் கொள்வதற்குக் காரணமாகும். அவனுடைய வலிமை பிறரைத் துன்புறுத்துவதற்குப் பயன்படும். நல்லவர்களிடம் இந்த மூன்றும் உலக நன்மைக்கே பயன்படும். அவருக்கு கல்வியறிவால் ஞானம் கிடைக்கும். செல்வத்தால் தானம் செய்யும் குணம் அதிகரிக்கும். நல்லவர்களின் வலிமை சமுதாயத்தின் பாதுகாப்புக்குப் பயன்படும்.
விளக்கம்:
இயல்பாகவே தீயவர் பிறருக்குத் தீமை விளைவிப்பார்கள். நல்லவர் பிறருக்கு உபகாரம் செய்வதற்காகவே தன் சக்திகளைப் பயன்படுத்துவார். கல்வி, செல்வம், உடல் வலிமை இம்மூன்றையும் இருவரும் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை விளக்கும் சுலோகம் இது.
கிடைத்த சக்திகளை சமுதாய நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை இந்த ஸ்லோகம் மூலம் கவி நமக்கு அளிக்கிறார். இம்மூன்றையும் தவறாக பயன்படுத்துபவருக்கு கூறப்படும் போதனை இது.
தீயோர் அதிகாரத்தாலும் செல்வத்தாலும் வன்முறையாலும் சமுதாயத்தை அடக்கியாளப் பார்ப்பார்கள். அதனால்தான் சாஸ்திரக் கல்வியை அருகதையற்றவர்களுக்கு கற்றுத் தரக் கூடாது என்று கூறப்படுகிறது.
காவல்துறையின் கையிலிருக்கும் ஆயுதம் பாதுகாப்புக்கும் திருடன் கையிலிருக்கும் ஆயுதம் வன்முறைக்கும் பயன்படுகிறது அல்லவா?
தன் விதண்டாவாதத்தால், விபரீத வியாக்கியானத்தால் இளைஞர்களை தவறான வழிக்குத் திருப்பும் போலி மேதாவிகள் பல்கலைக்கழகங்களை மாசு படுத்துகிறார்கள். அதிகாரத்தை கையில் கொண்டு தேசத்துரோக சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து ஜனநாயகத்தை ஏளனம் செய்கிறார்கள். இவர்களை மறுத்து கல்வி செல்வம் வலிமை மூன்றையும் உலக நன்மைக்கு பயன்படுத்துவோரை பாராட்டுகிறது இந்த ஸ்லோகம்.