
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
54. மனத்துக்கு மிக நெருக்கத்தில்…!
சுலோகம்:
தூரஸ்தோ௨பி ந தூரஸ்தோ யோ யஸ்ய மனசி ஸ்தித: |
யோ யஸ்ய ஹ்ருதயே நாஸ்தி சமீபஸ்தோ௨பி தூரத: ||
– சாணக்கிய நீதி
பொருள்:
மனதிற்கு பிடித்தவர்கள் எத்தனை தொலைவில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பதாகவே தோன்றுவர். மனதில் இடம் பிடிக்காதவர் அருகிலேயே இருந்தாலும் தொலைவில் இருப்பதாகவே தோன்றுவர்.
விளக்கம்:
உறவுக்கும் நட்புக்கும் மனதில் எந்த இடம் அளிக்கிறோம் என்பதே முக்கியம் என்று தெரிவிக்கும் சுலோகம் இது. மனதிற்கு அருகில் இருப்பவரே நமக்கு அருகில் இருப்பவர் என்று மனதின் சக்தியை விவரிக்கிறது.
பணி நிமித்தமாக தொலை தூர இடங்களில் வசிக்கும் பிள்ளைகளை ஸ்கைப்பில், பேஸ்புக், வாட்ஸப் வீடியோக்களில் தினமும் சந்திப்பார்கள் பெற்றோர்கள். நெடுந்தொலைவில் உள்ளார்கள் என்ற எண்ணம் தோன்றாமல் மனதால் நெருங்கி உள்ளதால் அவர்கள் அவ்வாறு வாழ்கிறார்கள்.
இந்த வேறுபாடு சமுதாயத்தில், குடும்பத்தில், மனிதர்களிடையே, அமைப்புகளில், ஊழியர்களிடையே, அண்டை நாடுகளே யானாலும் பிடிக்காத நாடுகளின் இடையே தெளிவாகத் தென்படுகிறது.