சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
35. கடமை என்றும் வீண் போகாது!
ஸ்லோகம்:
க்வசித்தர்ம: க்வசித்மைத்ரீ க்வசித்கீர்தி: க்வசித்தனம் |
கர்மாப்யாஸ: க்வசித் சேதி சிகிஸ்தாநாஸ்தி நிஷ்பலா ||
–– சுஸ்ருத சம்ஹிதை
பொருள்:
மருத்துவராக நோயாளிக்கு செய்யும் சிகிச்சை என்றுமே வீண் போகாது. பிறருக்கு சிகிச்சை செய்வது உங்கள் தர்மம். அது புண்ணியத்தைப் பெற்றுத் தரும். ஓரொருமுறை நீங்கள் செய்த சிகிச்சை மூலம் புதிய மனிதர்களோடு நட்பு கிடைக்கிறது. வேறு ஒரு முறை புகழை சம்பாதித்து அளிக்கிறது. உங்களுக்கு ஆதாயம் கிடைக்கவும் செய்கிறது. இவற்றின் மிஞ்சிய உதவிகரமான அனுபவத்தை ஒவ்வொரு முறையும் கற்றுத்தருகிறது.
விளக்கம்:
மருத்துவர்களை கவனத்தில் கொண்டு சுஸ்ருத மகரிஷி அளித்த இந்த ஸ்லோகத்தில் நாம் செய்யும் பணியில் கிடைக்கும் பல்வேறு பலன்களை விவரிக்கிறார்.
செல்வம் மட்டுமே பிரதான பலன் என்று எண்ணக்கூடாது. இது வைத்தியர்களுக்கு மட்டுமே அல்லாமல் அனைவருக்கும் பயன்படும் கருத்து. வெறும் பணம் சம்பாதிப்பதற்காகவே எல்லா வேலைகளும் என்ற எண்ணம் கூடாது என்று போதிக்கிறார் மகரிஷி.
உதாரணத்திற்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர் இலவசமாகச் செய்யும் ஒரு அறுவை சிகிச்சையை வெளியில் வேறோரிடத்தில் செய்தால் லட்சங்களை அள்ளிக் குவிக்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை செய்த அனுபவத்தையும் கிடைக்கும் புண்ணியத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற செய்தியை இந்த ஸ்லோகத்தில் சுஸ்ருத மகரிஷி எடுத்துரைக்கிறார். ஒரு அபூர்வமான அறுவை சிகிச்சை செய்து செய்தித்தாள்களில் புகழப்பட்ட மருத்துவருக்கு பொருளாதார ரீதியாக பெரிதாக எதுவும் கிடைக்காமல் போகலாம். ஆனால் கீர்த்தியும் அனுபவமும் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும் என்கிறார்.
பணமே எல்லா நேரத்திலும் முக்கிய பிரயோஜனமாக இருக்கக்கூடாது. நாம் செய்யும் நற்செயல், நாம் வெளிப்படுத்தும் அன்பு, கல்வியறிவு பலப் பல பலன்களை விளைவிக்கக் கூடியது என்பதை அறிந்து நடந்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறார் மகரிஷி.