கட்டுரை: கே.ஜி.ராமலிங்கம்
இன்று காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நூறாவது பிறந்த நாள் …
புதுக்கோட்டை தந்த பொக்கிஷங்கள் – நாதோபாசகர் நாமசங்கீர்த்தன பிதாமஹர் பூஜ்யஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் (பஜனை பாடல்கள், ராதா, சீதா கல்யாணம், அகண்ட நாமம் போன்றவைகள் மூலம் நாமசங்கீர்த்தனத்தை பரப்பி அதற்கான வழிமுறைகளை வகுத்துத் தந்தவர்)
திரையுலகில் தனக்கொரு பாணியை ஏற்படுத்தி அதில் ஒளி வீசி சரித்திரம் படைத்த கந்தர்வகான சிரோன்மணி புதுக்கோட்டை உத்தண்டம் பிள்ளை சின்னப்பா (பி. யு. சின்னப்பா).
தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அதை தனது ஆயுள் வரைக்கும் அதை காப்பாற்றி எல்லோராலும் பாராட்டும் படியாக வாழ்ந்து வாழ்வில் எந்தவித சர்ச்சைகளில் சிக்காமல் திரையுலகில் இரண்டாவது பாத்திரம் ஏற்று நடித்தாலும், கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர், பாராட்டுகளைப் பெற்றவர்
ஜெமினி கணேசன் (17.11.1920 – 22.3.2005) ஆம் இந்த வருடம் அவரின் நூற்றாண்டு வருடம்.
புதுக்கோட்டையில் ராமு கங்கம்மா தம்பதிகளுக்கு 17.11.1920ல் பிறந்த கணேஷ் சிறுவயதில் செல்லமாகவும் வசதியாகவும் வளர்ந்தார், பத்தாவது வயதில் தந்தையை இழந்தவரை மேற்கொண்டு வளர்ப்பதில் அக்கரை காட்டியது அவருடைய அத்தை முத்துலட்சுமி ரெட்டி அவர் ஒரு டாக்டர். அவருடைய ஆசை என்னவென்றால் கணேஷும் ஒரு டாக்டர் ஆகணும் என்பதே. தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றதும் 1940ல் பாப்ஜியை மணந்த பின்னர் மருத்துவ படிப்பை விரும்பியவருக்கு விதி வேறு வழியில் வந்து அவரை ஜெமினி ஸ்டூடியோ நிர்வாகியாக செயல்பட வைத்தது, அங்கு புதிதாக நடிக்க வருபவர்களின் விபரங்களை சேகரித்து வைப்பது தான் அவருடைய பணியாக இருக்க, இந்த காலக்கட்டத்தில் வந்தவர்கள் தான் சிவாஜி,சந்திரபாபு போன்றோர்.
ஒரு நாள் நாராயணன் கம்பெனியில் இருந்து பட்டண்ணா ‘தாயுள்ளம்’ படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார் (கதாநாயகனாக ஆர். எஸ். மனோகர் நடித்தார்), உடனே ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தில் சேர்ந்து ஜெமினியிலிருந்து விலகினார்.படம் நூறு நாட்கள் ஓடியது,
ஆனால் ஜெமினி என்ற பெயர் கணேஷுக்கு முன்னால் ஒட்டிக் கொண்டு விட்டது. அன்று முதல் ஜெமினி கணேசன் ஆனார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி, நாகேஸ்வரராவ் போன்ற ஜாம்பவான்கள் தங்களது திறமையை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் அழகான இளைஞர், சுருட்டை முடி, களையான முகவெட்டு, எவரையும் வசீகரம் செய்யும் பார்வை பொருந்தும் ஜெமினி கணேசன் மிக கச்சிதமாக இருக்க பட்டண்ணா தனது அடுத்த படமான மனம் போல் மாங்கல்யத்திற்கு ஒப்பந்தம் செய்தார், ஜோடியாக சாவித்திரி கதாநாயகி, படத்தின் வெற்றி இருவரையும் வெற்றிகரமான ஜோடியாக வரித்தது.
இரு திலகங்களும் நாடக உலகில் இருந்து திரைக்கு வந்ததால் கல்வி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில் . அங்கீகாரம் கிடைக்க ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் மக்கள் திலகம் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த பிறகு தான் கதாநாயகனாக திகழ்ந்தார், ஆனால் நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தி அவரை கதாநாயகனாக ஆக்கியது. அதன் பிறகு வந்த படங்கள் சாதாரண வெற்றியைக் கூட பெற்றதில்லை. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே ஜெமினி தன்னை நட்சத்திர நடிகனாக நிலை நிறுத்திக் கொண்டார். ஆரம்ப கால படங்கள் அனைத்தும் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இவருடைய இயல்பான குணங்களே இவருக்கு பக்கபலமாக இருந்து வந்தது இவருக்கு பக்கம் பக்கமாக வசனமும் பேச வரும், குறைந்த வசனங்களால் தனது முகபாவங்களால் நடிப்பை வெளிப்படுத்த முடியும். ஏவிஎம்மின் களத்தூர் கண்ணம்மா, ராமு இரண்டும் வெற்றி படங்களாக உருவாகியது. திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார்.
ரஜனி, கமல் இருவரையும் புடம்போட்ட தங்கமாக மாற்றியது பாலச்சந்தர் என்றால், பாலசந்தரை நட்சத்திர இயக்குனர் அந்தஸ்தை பெற பங்களிப்பு இவருடையது, கேபியின் ஆரம்ப படங்களான இரு கோடுகள், புன்னகை, பூவா தலையா? வெள்ளி விழா, தாமரை நெஞ்சம், கண்ணா நலமா? ஹீரோ இவர்தான்.
செளகார் ஜானகிக்காக பாலச்சந்தர் இயக்கிய காவியத்தலைவி படத்தில் இவர் பாத்திரம் முக்கியமான ஒன்று.
தனது யதார்த்தமான நடிப்பால் கடைசி வரை நட்சத்திர வானில் ஜொலித்தார். இவரது பலமும் பலவீனமும் தான் அவரை காதல் மன்னன் என்ற பெயரை பெற்றுத்தந்தது, ஆனாலும் நான்கு மனைவிகளிடமும் அன்போடும், பாசத்தோடும் வாழ்ந்தார்.
ஆரம்ப காலத்தில் கண்டசால தான் இவருக்கு பிண்ணனிப்பாடல்கள் பாடுவதுண்டு, அதன் பிறகு ஏ. எம். ராஜாவின் குரல் பொருந்தி வந்தது – காலங்களில் அவள் வசந்தம் பாடலுக்குப் பிறகு பி. பி. ஸ்ரீநிவாஸ் குரல் ரொம்ப பொருத்தமாக இருந்தது, அதன்பிறகு இயற்கை எனும் இளையக்கன்னியில் எஸ்.பி.பி தொடர்ந்தார்.
இவரது நடிப்பு/வசனங்கள் சில படங்களில் சில காட்சிகள் –
1.பூவா தலையா படம் சூட்டிங் குற்றால பகுதியில் எடுத்தது, என் சிறிய வயதில் அந்த சூட்டிங்கை தூரத்தில் இருந்து பொதுமக்களுடன் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது (ஜெமினி, ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், ராஜஸ்ரீ, நிர்மலா, வாசு போன்றவர்களை அருகே இருந்து பார்த்தேன்) தென்காசியில் டாக்டர் தங்கம் கிருஷ்ணமூர்த்தி ஜெமினி கணேசனின் வகுப்பு தோழர், மதுரையை தாண்டி எப்ப வந்தாலும் தென்காசி வந்து தன் நண்பரை பார்க்காமல் போகமாட்டார்.
2. இரு கோடுகள் படத்தில் ஒரு வசனம் – அலுவலக சம்பந்தப்பட்ட கோப்பு (file) காணாமல் போய் விடும், இவர் தான் அந்த கோப்பை கையாள்வார், இது விஷயமாக கலெக்டர் விசாரணை நடத்தும் போது – எப்படி அந்த பைல் காணமல் போனது, உங்கள் பொறுப்பில் தானே அந்த பைல் இருந்தது அது எப்படி காணாமல் போனது என்று கேட்க ஜெமினி சொல்வார் I am also searching that file, but unable to trace it. உடனே கலெக்டர் (செளகார் ஜானகி) சொல்வார் நீங்கள் fileஐ தொலைத்துவிட்டு தேடுகிறீர்கள், நானோ lifeஐ தொலைந்து விட்டு நிற்கிறேன், you can make a new file with the old correspondence, but…. what about.. என்று ஜெமினியை பார்க்க I am talking about the file…. என்று கூறி letters are changed between life and file என்று சொல்லும் போது ஜெமினி கணேசனின் முகபாவம் மூலம் அருமையாக நடித்திருப்பார்.
3. முகபாவ நடிப்புக்கு மற்றொரு உதாரணம் – வெள்ளிவிழா படத்தில் ஜெயந்தி படுக்கையறை காட்சியில் புதிய நைட்டி அணிந்து ஜெமினி கணேசனோடு படுக்கையில் இருந்து வரும் போது குழந்தை அழும் – பாலுட்ட ஒரு பிள்ளை அழுகின்றது, நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது – என்ற இடத்தில் இவரின் முகபாவம் இருக்கிறதே…. ஆஹ்…ஆஹா…. கேபியின் டச்…
இந்த கால கட்டத்தில் வந்த ஒரு படம் தான் வெகுளிப்பெண் கதாநாயகி ஞாபகம் இல்லை – ஜெமினி ஆபீஸ் வேலையாக வெளிநாடு போவதற்காக ஏர்போர்ட் செல்வார், அவர் மனைவி கதவை சாற்றி விட்டு ஹாலில் உள்ள ஷோபாவில் படுத்துறங்க அவளின் தங்கை அக்காவின் புடவையை கட்டிக் கொண்டு பெட்ரூமில் படுத்து உறங்கிவிடுவாள். இந்த நேரத்தில் விமான நிலையம் சென்ற ஜெமினிக்கு விமானம் ரத்து செய்யப்பட்ட சேதி கேட்டதும் வீடு திரும்பி கதவைத் தட்ட கூடத்தில் படுத்திருந்த மனைவி கதவை திறந்து விட்டு என்னாச்சு என்று கதவை திறந்து விட்ட பிறகு படுத்து விடுவாள், அதேசமயம் ஜெமினி உடைகளை மாற்றி விட்டு பெட்ரூமில் படுத்து பாதி உறக்கத்தில்…. மறுநாள் காலை மனைவி என்னாச்சு பிளைட் கேன்சலா என்று கேட்டு விட்டு தனது வேலைகளை தொடருவார். இரண்டு மாதங்களுக்கு பின்னர் கதாநாயகியின் தங்கை கர்ப்பமாக…. அப்புறம் நடக்கும் கதைதான் முழுப்படமும். அந்த சமயத்தில் பார்த்தது, முழுப்படமும் ஞாபகம் வரவில்லை. யாராவது பார்த்திருக்கலாம்….. முடிந்தால் கூறவும்.
ஜெமினி கணேசனின் பேர் சொல்லும் படங்கள் எத்தனையோ உள்ளது – காத்திருந்த கண்கள், தேன் நிலவு, மாயா பஜார், பார்த்திபன் கனவு, மீண்ட சொர்க்கம், கல்யாண பரிசு, அன்னை வேளாங்கண்ணி (ஜெயலலிதாவுடன் வானமெனும் வீதியிலே குளிர்வாடை எனும் தேரினிலே ஓடிவரும் மேகங்களே.. என்ற பாடலில் இருவரின் காஸ்ட்யூம்கள் அருமையாக இருக்கும்). மலைநாட்டு மங்கை, குலவிளக்கு, வஞ்சிக்கோட்டை வாலிபன், கற்பகம், நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி, மிஸ்ஸியம்மா, பணமா பாசமா, கந்தன் கருனை, கங்கா கெளரி, ஆதிபராசக்தி (சிவபெருமான் வேடம்), கணவனே கண்கண்ட தெய்வம், வீரபாண்டிய கட்டபொம்மன், மற்றும் ‘ப’ வரிசையில் வந்த சிவாஜி படங்களில் இவரும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்….
உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்வில் ஜெமினி கணேசன்
நவம்பர் 7 கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 17 ஜெமினி கணேசன் அவர்களின் பிறந்த நாள்
அது 1972ம் ஆண்டு.
“யார் இந்தப் பையன் ?” என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர்.
“இவன் பெயர் கமலஹாசன்” என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி கணேசன். “களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவன். நடிப்புத் திறமை உள்ளவன். இவனுக்கு நீங்கள் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதற்காகத்தான் உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”
ஸ்ரீதர் தன் அருகில் நின்ற கமலஹாசனை மேலும் கீழுமாக பார்த்தார்.
இளம் மீசை. இரண்டும் கெட்டான் வயது. ஏக்கமான பார்வையோடு ஸ்ரீதர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தார் கமல்ஹாசன். அவரை சிறிது நேரம் உற்று நோக்கிய பின் ஜெமினி கணேசனை நோக்கி திரும்பி இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.
“ஸாரி. இவனுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது.”
“ஏன் ?”
“ஏனென்றால் இவனுக்கு சினிமாவுக்கு ஏற்ற முக அமைப்பு இல்லை.”
ஸ்ரீதர் இப்படி சொன்னவுடன் கமலஹாசனின் முகம் பரிதாபமாக மாறியது. கண்கள் இரண்டிலும் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது. அருகில் நின்ற ஜெமினி கணேசன் கமலின் தோள்களில் தட்டிக் கொடுத்தார். “சரி. வாப்பா போகலாம்.”
கமல் தழுதழுத்த குரலில் ஜெமினியிடம் சொன்னார் : “நான் வீட்டுக்கு போகிறேன். அப்படியே என் சொந்த ஊருக்கும் போய் விடுகிறேன்.”
புன்னகைத்தார் ஜெமினி. “ஏன் ? அதற்குள் நம்பிக்கை இழந்து விட்டாயா?”
கமல் நிமிர்ந்து ஜெமினியின் முகத்தை பார்த்தார். “உண்மையை சொல்லுங்கள். எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னமும் நீங்கள் நம்பி கொண்டிருக்கிறீர்களா ?”
“ஏன் இப்படிக் கேட்கிறாய் ?”
“இல்லை. எனக்கு பிறகு நடிக்க வந்த மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் எல்லோரும் சிவாஜியோடும் எம்ஜிஆரோடும் சேர்ந்து நடித்து, இப்போது தனியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருவன் மட்டும் இப்படி வாய்ப்புக்கள் கிடைக்காமல் ஏதாவது ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நடிப்பதற்கு ஏற்ற திறமை என்னிடம் இல்லை என்றுதானே அர்த்தம் ?”
கமல் கேட்டது நியாயமான கேள்விதான். ஏனென்றால் 1972ல் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குறத்தி மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு ஒரு முக்கியமான வேடம்.
மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்கும் அதே காட்சியில் ஒரு ஓரத்தில் நின்று ‘ராஜா வாழ்க’ என்று கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் ஒரு சாதாரண கேரக்டர் கமலஹாசனுக்கு.
அந்த விரக்தியில்தான் ஜெமினியை நோக்கி அப்படி ஒரு கேள்வியை கேட்டார் கமல். ஆனால் கமலின் இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாத ஜெமினி,
கமலை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டிக் கொண்டு நேராக போன இடம் இயக்குநர் கே பாலச்சந்தர் வீடு.
ஸ்ரீதரிடம் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே பாலசந்தரிடமும் சொன்னார் ஜெமினி.
பாலச்சந்தர் கமலஹாசன் முகத்தை உற்றுப் பார்த்தார். படபடவென துடிக்கும் இதயத்தோடு பாலச்சந்தரின் பதிலுக்காக காத்திருந்தார் கமல்.
பதில் கிடைத்தது. வாய்ப்பும் கிடைத்தது. அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தார் பாலச்சந்தர். 300 ரூபாய் சம்பளம்.
ஜெமினி கணேசன் கமலஹாசனை தன் அருகில் அழைத்தார். “300 ரூபாய்தானே தருகிறார்கள் என்று உன் முழு திறமையையும் காட்டாமல் விட்டு விடாதே. நீ யார் என்பதை நிரூபித்துக் காட்ட இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒருபோதும் உனக்கு கிடைக்காது. நிச்சயம் நீ மிகப்பெரும் நடிகனாக வருவாய். மிகப் பெரும் புகழ் பெறுவாய்.
சரி. நான் போய் வருகிறேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.
அந்தணராகிய ஜெமினி அந்தணர் கமலை அந்தணர் பாலசந்தர் மூலம் உயர்த்தினார். இது தான் உண்மை.
அரங்கேற்றம் வெளிவந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
தொடர்ந்து தம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சினிமா உலகத்தின் அத்தனை சிகரங்களையும் தொட்டார்.
அனைத்து சிம்மாசனங்களிலும் அமர்ந்தார் கமல்.
அந்த நேரத்தில்தான் ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஸ்டூடியோவில் தற்செயலாக ஜெமினி கணேசனை பார்த்தார். அருகில் ஓடினார். ஜெமினி கணேசன் சிரித்தபடி கேட்டார்:
“என்னப்பா கமல், எப்படி இருக்கிறாய் ?”
கமல் பதில் சொல்வதற்கு முன் சின்னஞ் சிறு புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டார் ஜெமினி. “ஆமாம். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் ?”
யாரை குறிப்பிட்டு கேட்கிறார் என தெரியாமல் கமல் குழம்பிப் போய் நிற்க, சிரித்தபடி கேட்டார் ஜெமினி.
“கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சொன்னாயே. உன்னோடு அறிமுகமான மாஸ்டர் சேகர், பிரபாகர், ஸ்ரீதர் எல்லோரும் ஓஹோ என்று ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.
இப்பொழுது கொஞ்சம் திரும்பி பார். நீ குறிப்பிட்ட அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்.”
ஜெமினி கணேசன் சொன்னது உண்மைதான். கமலைத் தவிர அவரோடு அறிமுகமான வேறு எந்த குழந்தை நட்சத்திரமும், இப்போது திரை உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லவே இல்லை.
இதை சொல்லிக் காட்டி விட்டு புறப்பட்டு போய் விட்டார் ஜெமினி.
எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் கமலுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை.
எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கமலின் முன்னேற்றத்திற்காக எதற்காக ஜெமினி இவ்வளவு முயற்சிகளை எடுத்து இருக்க வேண்டும் ?
எவ்வளவு நேரம் சிந்தித்தும் இதற்கான பதில் எதுவும் தெரிய வில்லை கமலுக்கு.
எனக்கும் கூட ஒரு சில விஷயங்களுக்கு பதில் தெரியவில்லை.
ஏனெனில் நம் வாழ்க்கையிலும் கூட இதுபோல பிரதிபலன் எதிர்பாராமல் எத்தனையோ பேர் நம்மிடம் எல்லையற்ற அன்பு காட்டியிருக்கிறார்கள், காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் வாழ்க்கையிலும் கூட எதிர்பாராத விதமாக ஏதாவது பிரச்சினைகளில் நீங்கள் சிக்கித் தவிக்கும்போது எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஓடி வந்து இது போல உதவிகளை செய்து இருக்கக்கூடும்.
அதை எந்த நாளும் மறக்காமல் இருப்பது மட்டுமே நீங்களும் நானும் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன். அதற்கு பிரதிபலனாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த அவ்வை சண்முகி. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
நாம் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் நமக்கு செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர் தான் நம் காதல் மன்னன் ஜெமினி கணேசன் – “ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும், உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும், இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற வாலியின் வைர வரிகள் இவருக்கு பொருந்தும்.