
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
96. கர்ம சித்தாந்தம்.
ஸ்லோகம்:
சுகஸ்ய துக்கஸ்ய ந கோ௨பி தாதா பரோ ததாதீதி குபுத்திரேஷா !
அஹம் கரோமீதி வ்ருதா௨பிமான: ஸ்வகர்ம சூத்ரக்ரதிதோ ஹி லோக: (ஜந்து:) !!
-ஆத்யாத்ம ராமாயணம் (2-6-5)
பொருள்:
தீதும் நன்றும் பிறர் தர வாரா. யாரோ இவற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைப்பது அறியாமை. என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது வீண் மமதை. ஒவ்வொருவரும் தம்தம் வினைப்பயன் என்னும் கயிற்றால் தளைக்கப்பட்டு உள்ளார்கள்.
விளக்கம்:
இன்பமும் துன்பமும் எவ்வாறு நிகழும் என்பதை கர்ம சித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு சிந்திக்கச் செய்யும் ஸ்லோகம் இது. நான் செய்கிறேன் என்ற வீணான தற்பெருமையை விட்டுவிட வேண்டும். கடமை உணர்வோடு பணி செய் என்று போதிக்கும் சுலோகம். கருட புராணத்தில் இந்த ஸ்லோகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களே இந்த பிறவியில் இன்ப துன்பங்களாக விளைகின்றன என்பதை உணரவேண்டும். ‘கொடுத்து வைத்தவர்’ என்ற சொல்லைக் கேட்டிருப்போம். முற்பிறவியில் பிறருக்கு உணவளித்தவருக்கு இப்பிறவியில் சுகமும் இன்பமும் வந்து சேரும். கடந்த பிறவியில் பிறருக்கு தானம் அளித்தவர் இப்பிறவியில் செல்வந்தராக விளங்குவார்.
நற்செயல் புரிந்தவருக்கு நன்மையும் தீய செயல் செய்தவருக்கு தீமையும் விளையும் என்பதே கர்ம சித்தாந்தம். இது குறித்த புரிதல் இன்றி நம் துன்பங்களுக்கு பிறரைப் பொறுப்பாக்கி நிந்திப்பதால் சமுதாயத்தில் சமரசம் கெட்டுப் போகிறது. பகை விரோதம், பழிக்குப்பழி போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் கர்ம சித்தாந்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.