spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeபுகார் பெட்டிபெண்களிடம் எப்படிப் பேச வேண்டும்?

பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும்?

- Advertisement -

woman EMPOWERMENT

பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று பலருக்குத் தெரியத்தான் இல்லை. என் ரிடயர்மென்ட்டுக்கு ஒரு எட்டு மாசம் முன்பு எனக்கு நடந்தது இது. எங்கள் போதாத காலம் அப்போது ஒரு பாடாவதி ஐஏஎஸ் எங்களுக்கு இயக்குனராக இருந்தார். பணி செய்த எந்த இடத்திலும் அவருக்கு நற்பெயர் இல்லை. கன்ஃபெர்ட் ஐஏஎஸ். நாங்கள் படித்துப் பார்த்து தெளிவாக எழுதியனுப்பும் கோப்பில் எல்லாம் சகட்டு மேனிக்கு கொர்ரீஸ் எழுப்பி வைப்பார். முக்கியமான கோப்புகளில் தேவையின்றி கொர்ரீஸ் போட்டு நிறுத்தி வைப்பார்.

தலைமைச் செயலகத்தில் ஒரு முக்கியமான திட்டம் தொடர்பான மீட்டிங் நடந்தது, அது தொடர்பான கோப்பு என்னிடம். அந்தக் கோப்பிலோ இவர் கொர்ரி போட்டு வைத்திருக்கிறார். நிச்சயம் அங்கு கேள்வி எழும்பும். அதுவும் மான்யத் தொகை விடுவிப்பது தொடர்பான கோப்பு அது.

கோப்பை எடுத்துக் கொண்டு நானும் எனது பிரிவின் உதவி இயக்குனரும் தலைமைச் செயலகம் சென்றோம். மீட்டிங் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு எங்களை அழைத்து அந்தக் கோப்பைக் கேட்டார். இயக்குனர் கேட்டால் கொடுத்துதானே ஆக வேண்டும்? நாங்களும் பணிவாகக் கோப்பை நீட்டினோம். கோப்பைப் பிரித்தார். எங்கள் கண்ணெதிரிலேயே அந்தக் கோப்பின் நோட் ஃபைலில் தான் கொர்ரி எழுதியிருந்த பக்கத்தை மட்டும் சரக்கென்று உருவி நான்காகக் கிழித்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். நானும் என் ஏடியும் ஒருவரை ஒருவர் திகைப்போடு பார்த்துக் கொண்டோம். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் மீட்டிங் நடக்க உள்ள நிலையில் அவர் அப்படி செய்தது எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏன் சார் இப்படி செய்தீர்கள் என்று கேட்கவா முடியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம்? எந்த ஒரு கோப்பிற்குமே குறிப்புக் கோப்புதான் அதன் ஜாதகம் மாதிரி. கோப்பில் எடுக்கப் பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதுதான் அத்தாரிட்டி. அதில் கடைசியாய் நான் கோப்பை சமர்ப்பித்த விவரமும், அதில் அவர் கொர்ரி எழுதியிருந்ததையும் மட்டும் கிழித்தால் கோப்பைப் பார்க்கிறவர்களுக்கு அதில் கடைசியாக எடுக்கப் பட்ட நடவடிக்கையின் விவரம் தெரியாமல் போகும்.

அப்படித்தான் அன்று ஆயிற்று. மீட்டிங்கில் அந்த ஐஏஎஸ் பழியை எங்கள் மீதே போட்டார். கோப்பு தனக்கு சமர்ப்பிக்கப்படவே இல்லை என்று அண்டப் புளுகு புளுகினார். அங்கேயே வைத்து எல்லார் முன்னிலையிலும் எங்களை, பொறுப்புடன் வேலை பார்க்கவில்லை என்று சொல்லி அவமதித்தார். ஏழை சொல் அம்பலம் ஏறுவதாவது! செயலாளர் எங்கள் இருவருக்கும் உடனே மெமோ கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

அவர் செய்த தவறுக்கு எங்களுக்கு மெமோ. அன்று முதல் அவருக்கு கோப்பு அனுப்பி அதில் தேவையற்ற கொர்ரி ஏதேனும் அவர் எழுதி இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை முன்ஜாக்கிரதையாக ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது எனக்கு வழக்கமாயிற்று.

அப்படித்தான் அடுத்த இரண்டு மாதம் கழித்து முதியோர் இல்லங்களுக்கு மான்யம் விடுவித்து கருவூலத்திலிருந்து பெறப்பட்ட ஒரு முப்பது காசோலைகளை சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்புவதற்காக ஒப்புதல் கேட்டு கோப்பு சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கோப்பு அவரது டேபிளுக்குச் சென்றது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் திரும்பவில்லை. நானும் அவரது உதவியாளரிடம் கேட்டு கேட்டு சலித்து விட்டேன்.

vidya subramaniam
எனது பணிஓய்வு தினத்தன்று எடுத்த படம்… (வித்யா சுப்ரமணியம்)

ஏன் இன்னும் மான்யம் விடுவிக்கவில்லை என்று என்ஜிஒக்களிடமிருந்து போன் மேல் போன் வந்தது. வந்து விடும் பொறுமையாயிருங்கள் என்று பதில் சொல்வோம். அதில் பொறுமையிழந்த யாரோ ஒருவர் பத்திரிகைக்குப் போய் விட்டார்.

லஞ்சம் எதிர்பார்த்து நாங்கள் மான்யத்தை விடுவிக்கவில்லை என்று மறுநாள் பத்திரிகையில் செய்தி வர, தலைமைச் செயலகத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி. நான் இயக்குனர் அறைக்கு அழைக்கப் பட்டேன். “ஏம்மா ஒழுங்கா வேலை செய்யறதில்லையா?” என்றார்.

“சார் ஃபைல் உங்க டேபிள்ளதான் பத்து நாளா இருக்கு” என்றேன். அவர் முகம் மாறியது. அவர் என்னை போகச் சொன்னார். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் அழைக்கப் பட்டேன். அந்தக் கோப்பைத் தூக்கி என் எதிரில் எறிந்தார். அதில் அப்போதுதான் பின் தேதியிட்டு ஏதோ கொர்ரி எழுதியிருந்தார். நான் குறிப்பு எழுதி எவ்ளோ நாளாச்சு? என் டேபிள்ள ஃபைல் இருந்தா பார்த்து எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே? என்று கத்தினார். நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மலைத்துப் போய் நின்றிருந்தேன்.

அப்போது அவர் என்னை, காலோடு தலை பார்த்து விட்டு சொன்னதுதான் நான் இதை  எழுதக் காரணம்.

“நிக்கற ஸ்டைலைப் பாரேன். என்னமோ விஸ்வரூபம் படத்துக்கு டிக்கெட் வாங்க நிக்கறா மாதிரி போஸ் குடுத்துக்கிட்டு நிக்கறாங்க இந்தம்மா” என்றார் நக்கலாக.

அந்த அறையில் என்னைத் தவிர நான்கைந்து பேர் இருந்தோம். எனக்கு சுறுசுறுவென்று ஏதோ எகிறியது. அவரிடம் உத்தரவு கூடப் பெறாமல் சட்டென அந்த அறையை விட்டு வெளியில் வந்தேன்.

கொஞ்சம் கழித்து அவரது பி.ஏ பெண்மணி ஓடி வந்தாள். “மேடம் சார் உங்களைக் கூப்பிடறார்” என்று அழைத்தாள்.

“வர முடியாது” என்றேன் அழுத்தமாக.

“ஏன் மேடம்..? என்று பதறினாள் பிஏ.

“லேடீஸ் கிட்ட எப்டி பேசணும்னு முதல்ல உங்க சார் கத்துக்கட்டும் அப்பறம் வரேன்” என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டேன்.

“என்னாச்சு மேடம்?” என்றாள். நான் நடந்ததைச் சொன்னேன்.

” என் உடம்புல என்ன பிரச்சனை இருக்குன்னு எனக்குதான் தெரியும். கால்ல பிளேட் இருப்பதால் அந்தக் காலில் அதிக வெயிட் கொடுத்து எப்போதுமே நிற்க மாட்டேன். அது புரியாமல் நான் நின்ற போஸை அவர் எப்படி கிண்டலடிக்கலாம்? முதலாவதா ஒரு பெண்ணை ஏற இறங்கப் பார்த்து இப்படி கிண்டல் செய்வதே நாகரிகம் இல்லையே. நிச்சயமாக இனி நான் அவர் அறைக்கு வர மாட்டேன். இனி எந்த உத்தரவானாலும் கோப்பில் எழுதி அனுப்பட்டும்” என்றேன்.

பி.ஏ சென்று விட்டாள். அவரிடம் என்ன சொன்னாளோ தெரியாது. அவர் மீண்டும் என்னை அழைத்தார். என் பிரிவில் அத்தனை பேரும்
பிரச்சனை வேண்டாம் மேடம் போங்க என்று என்னை வற்புறுத்த, வேண்டா வெறுப்பாகச் சென்று அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் நின்றேன்.

“சாரிம்மா உங்க பிரச்சனை எனக்குத் தெரியாது. வெரி சாரி என்றார். நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“சார் என் காலில் பிரச்சனயே இல்லை என்றாலும் கூட நீங்கள் இப்படி பேசியது உங்கள் பதவிக்கு அழகல்ல, இருந்தாலும் நீங்கள் சாரி சொல்லி விட்டதால் நான் இதை இதோடு மறந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்.

இதன் பிறகுதான் கிளைமாக்ஸ். ஒரு ஐஏஎஸ்சே மன்னிப்பு கேட்டு விட்டார் என்று தன் இமேஜை உயர்த்திக் கொண்டவர், மறுநாளே நாங்கள் செய்யாத தவறுக்கு எனக்கும் எங்கள் ஏடிக்கும் 17b யின் கீழ் சார்ஜ் மெமோ கையொப்பமிட்டு அனுப்பினார். இதனால் என் ரிடையர்மென்டே கேள்விக்குறியானது. என்னிடமிருந்த அத்தனை ஆதாரங்களையும் கொண்டு அத்தனைக்கும் பதில் அனுப்பினேன். ரிடயர்மென்ட்டிற்கு முதல் நாள் குற்றமற்றவள் என்று அந்த சார்ஜிலிருந்து விடுவிக்கப் பட்டேன். என் ரிடையர்மென்ட் நிகழ்ச்சியில் கூட அந்த இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி நானும் கவலைப்படவில்லை. அவர் அறைக்குச் சென்று நானும் விடைபெற விரும்பாமல் கிளம்பி விட்டேன்.

நாமார்க்கும் குடியல்லோம். நமனையும் அஞ்சோம்.

– வித்யா சுப்ரமணியம் (எழுத்தாளர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe