‘திராவிட’ இல்லாத அரசியலா? தினகரன் கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

nanchil sampath - 2026

சென்னை: டிடிவி தினகரன் அணியில் பற்றுதலோடு ஒட்டிக்கொண்டு கொள்கை முழக்கம் செய்து வந்த நாஞ்சில் சம்பத், அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.

தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், தினகரன் அணியில் இருந்தும், அரசியலில் இருந்தும் தான் விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், இனி நான் எந்த அரசியலிலும் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம். அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும், திராவிடத்தையும் தவிர்த்து விட்டு கட்சி நடத்தி விடலாம் என நினைக்கிறார் தினகரன். அண்ணாவையும், திராவிடத்தையும் தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. தினகரனின் அநியாயத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.

டிடிவி தினகரன்  கடந்த மார்ச் 15ஆம் தேதி தனது கட்சி அமைப்புக்கு ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என ஒரு பெயரை  அறிவித்தார். ஆனால், இந்தப் பெயரில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறினார் நாஞ்சில் சம்பத். டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை என்று கூறியுள்ளார். எனவே, ‘திராவிட’ இல்லாத அக்கட்சியில் இனி நீடிக்கப் போவதில்லை என்றும், இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டுக் கிடக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

முன்னர் ‘அண்ணா’ இல்லாத மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். பின்னர் அதிமுக.,வுக்கு வந்தார். திமுக., எங்கள் தாய் வீடு என்று சொல்லி வந்தார். இருப்பினும், அதிமுக.,வில் ஜெயலலிதா அளித்த இன்னாவோ காருடன் வலம் வந்ததால், அவருடைய சொந்த  மண்ணான நாஞ்சில் மறந்து இன்னோவா சம்பத் என்றே பலராலும் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அதிமுக., பிளவுபட்ட போது, டிடிவி தினகரன் பின்னால் நின்றார். அதனால் அதிமுக., அளித்த இன்னோவா காரை அக்கட்சியிடம் திருப்பி அளித்தார். இந்நிலையில், டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்க அதற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார்.

அண்மையில் குற்றாலத்துக்கு வந்திருந்த நாஞ்சில் சம்பத்திடம், இரட்டை இலை மீட்பு, அதிமுக., என்ற பின்னணி எல்லாம் மறந்து, டிடிவி தினகரன் ஏன் புதுக்கட்சி, குக்கர் சின்னம் என்று இயங்க வேண்டும் என்று நாம் கேட்ட போது, அரசியலுக்கு ஒரு பாத்திரம், ஒரு களம் வேண்டுமல்லவா? அது கிடைக்கும் வரை தற்காலிகமாக இது என்று பதில் கொடுத்தார். அப்போதும் தினகரன் செயல்பாடுகளுக்கு கண்மூடித்தனமான தனது முழு ஆதரவை அளித்ததுடன், தினகரனே தமிழகத்தின் எதிர்காலம் என்று சொன்னார். இப்போது அந்த எதிர்காலத்தில் இருந்து விலகி வந்துள்ளார் நாஞ்சில் சம்பத்.

அதற்கு சம்பத் கூறியுள்ள காரணம், திராவிட இல்லாத அரசியலா? என்பதுதான்! தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளின் அரசியலும் ஆட்சியுமே நீடித்து வருகிறது. திக., தொடங்கி, திமுக., அதிமுக., மதிமுக., தேமுதிக., என திராவிடப் பெயரில் கட்சிகள் பலவும் இயங்கி வரும்போது, டிடிவி தினகரன் துணிச்சலாக திராவிட என்ற பெயரை தன் கட்சியில் சேர்க்காமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி அரசியலைத் துவங்கினார்.

அப்போதே, தினகரன் திராவிட மாயையில் இருந்து விழித்திருக்கிறார் என்று விமர்சிக்கப் பட்டது. ரஜினி திராவிட இல்லாத ஆன்மிக அரசியலை முன்வைத்திருப்பதால், தினகரனும் அவ்வாறே செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சிப் பெயரை ’திராவிட’ இல்லாமல் அறிவித்தார்.

இது தற்காலிகமே என்றும், குக்கர் சின்னமும் புதிய அமைப்பும் தன்னை நம்பி வந்தவர்களை அரவணைக்கவும் அவர்களுக்காக ஒரு தளம் வேண்டும் அல்லவா என்றும் கூறி, எதிர்காலத்தில் அதிமுக.,வை மீட்டெடுப்பார் தினகரன் என்று முழங்கி வந்த நாஞ்சில் சம்பத்துக்கு இப்போது அந்த நம்பிக்கை போய் விட்டதையே, அவரது விலகல் முடிவு காட்டுகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.