ஐடி கம்பெனிகளில் இருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் செல்பவர்களுக்கு அந்த நாட்டின் கலாசாரம் குறித்து ஒரு தனி வகுப்பு எடுப்பார்கள். உதாரணமாக ஜப்பான் செல்வதாக இருந்தால் அங்கு எப்படி பரஸ்பரம் வணக்கம் தெரிவிப்பது எப்படி? விசிடிங் கார்ட் கொடுக்கும் பொழுது கூட எத்தனை கோணத்தில் குனிந்து கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லித் தருவார்கள். அமெரிக்கா போவது என்றால் அங்கே ஒருவரை எப்படி அழைக்க வேண்டும் பொது இடங்களில் வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடாது போலீஸ் நிறுத்தினால் என்ன செய்ய வேண்டும் இத்யாதி இத்யாதிகளைச் சொல்லித் தருவார்கள்
அப்படி அந்த வகுப்புகளில் சொல்லித் தந்திராத சில விஷயங்களை வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் தங்கள் அனுபவத்தில் அடி வாங்கி அனுபவித்தும் இருப்பார்கள். ஒரு நண்பருக்கு அவரது அமெரிக்க வெள்ளை சக ஊழியர் தன் காரில் லிஃப்ட் கொடுத்துள்ளார். நண்பர் அவசரத்திலும் பதட்டத்திலும் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். அது தவறான ஒரு செய்கை. அது அவருக்குத் தெரியாமல் செய்து விட்ட ஒரு தவறு. பின்னர் தன் தவறு தெரிந்தது மன்னிப்பு கேட்டு விட்டார்.
இன்னொரு நண்பர் சாப்பிடும் இடத்தில் கையால் சாப்பிட்டு விட்டார். அதை இன்னொரு நண்பர் சுட்டிக் காட்டியதும் அதன் பின் ஸ்பூன் பயன் படுத்தினார். இன்னொரு நண்பர் ஜிம்மில் காலில் அணி ஏதும் இல்லாமல் வெறும் காலில் ட்ரெட்மில்லில் நடந்து விட்டார் பின்னர் தவறு தெரிந்ததும் திருத்திக் கொண்டார்.
நான் மேனேஜராக இருந்த இடத்தில் எங்கள் கம்பெனியில் இருந்து அமெரிக்க நிறுவனத்திற்கு பணி புரிய வந்த சில சக ஊழியர்கள் உடலில் நாற்றம் வந்தது. அவர்களிடம் டியோடரண்ட் பயன் படுத்தச் சொல்லவும் என்று அமெரிக்க நிறுவனத்தின் மேலாளர் என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார். நான் இதை எப்படி என் நிறுவன பெண் ஊழியரிடம் சொல்வது என்ற சிக்கலில் மாட்டிக் கொண்டேன்
இப்படி ஒரு புத்தகம் போடும் அளவுக்கு ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் பல விஷயங்களைத் தெரியாமல் செய்வார்கள்; ஆனால் ஒரு முறை தெரிந்தவுடன் திருத்திக் கொண்டு புது இடத்தின் வழக்கத்திற்குள் வந்து விடுவார்கள்.
அது போலவே கவர்னருக்கும் தமிழகத்தின் வழக்கம் தெரியவில்லை. அவர் பிற இடங்களில் இருக்கும் வழக்கம் போலவே நினைத்து விட்டிருக்கிறார். இப்பொழுது தெரிய வந்த பிறகு இனிமேல் எச்சரிக்கையுடன் இருப்பார்; ஆனால் வேறொரு தவறை தெரியாமல் செய்து விடக் கூடும்.
உடனே அவருக்கு சென்சிடிவிடி இல்லை அவர் இதையெல்லாம் கற்றுக் கொண்டு வந்திருக்க வேண்டும் ஒரு கவர்னருக்கு இது கூடவா தெரியாது என்றெல்லாம் அவரை குறை கூறுபவர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் – கலாச்சார ரீதியான தவறுகள் நடப்பது சகஜம். அதை பெருந்தன்மையுடன் புரிந்து கொள்வதோ அல்லது சிறு தவறுகளையும் பூதாகரமாக்கி வசை பாடுவதோ அவரவர் எண்ணங்களைப் பொருத்தது பரந்த அல்லது குறுகிய மன எல்லைகளைப் பொருத்தது.
-கட்டுரை: திருமலை .ச