பாதுகாப்பு வளையத்துக்குள் புதுதில்லி! 71ஆவது குடியரசு தினம்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
delhi security - 2026

71 வது குடியரசுதினத்தை ஒட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தில்லி!

நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் தில்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ளது. ஹில்லியில் உள்ள ராஜபாதையில் இருந்து செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் ஆயுத தளவாட அணிவகுப்பும், முப்படை வீரர்களின் அணிவகுப்பும், கலாசார பெருமையை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மூவர்ண தேசிய கொடியை ஏற்றி அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். விழாவில் பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரா (Jair Bolsonaro ) சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதனிடையே, விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தில்லியில் முன்னெச்சரிக்கையாக 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிமினல்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ய பேசியல் ரிககனிசன் அமைப்பு (facial recognition system), தில்லியின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் தில்லி முழுவதும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் செங்கோட்டை, சாந்தினி செளக், யமுனா காதர் ஆகிய பகுதிகளில் மட்டும் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தில்லியை ஒட்டியுள்ள பிற மாநிலங்களின் எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. புதுதில்லி மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து துணை ராணுவப்படையை சேர்ந்த ஏராளமான வீரர்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி முழுவதும் இரவு நேர ரோந்து, வாகன தணிக்கை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராஜபாதையில் விஜய் செளக்கில் இருந்து இந்தியா கேட் வரை, இன்று மாலை 6 மணி முதல் நாளை அணிவகுப்பு நடந்து முடிந்து வரையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜபாதையின் முக்கிய பகுதி நாளை பிற்பகல் 12 மணி வரை மூடப்பட்டுள்ளது.

இதேபோல், தில்லியில் பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஆளில்லா சிறிய விமானங்கள், இலகுரக விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க அடுத்த மாதம் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.