பசுவை தேசிய விலங்காக அறிவியுங்கள்: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி

Published:

judge mahesh chandra sharma - 2026

ஜெய்ப்பூர்:

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

ராஜஸ்தானில் பசுக்களை பராமரிப்பதற்கு மாநில அரசு நடத்தி வரும் பாதுகாப்பு மையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை நீதிபதி மகேஷ் சந்த் சர்மா விசாரித்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், பசுவை தேசிய விலங்காக அறிவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பசுவை கொல்லும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்தத் தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது…

நேபாளம் ஒரு இந்து நாடு ஆகும். அங்கு பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, விலங்கு வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடு. எனவே அரசியல் சாசனம் பிரிவு 48 மற்றும் 51 ஏ (ஜி)யின்படி, இந்த நாட்டில் பசுவுக்கு சட்டப்பூர்வ உரிமையை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பசுவதை செய்வோருக்கான தண்டனையை தற்போதைய அளவான 3 ஆண்டு என்பதை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ராஜஸ்தான் விலங்குகள் சட்டம், 1995–ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்… என்று கூறியிருந்தார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அவரது தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் நீதிபதி மகேஷ் சந்த் சர்மா டி.வி. சானல்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘‘பசுவைக் கொல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் ஆன்மாவின் குரல். உங்கள் ஆன்மாவின் குரல். நாட்டில் உள்ள எல்லோருடைய ஆன்மாவின் குரலும்தான். தர்மத்தில் இருந்துதான் சட்டமே தவிர, சட்டத்தில் இருந்து தர்மம் அல்ல. பசுவதை என்பது மிகக்கொடிய குற்றம். இதைவிடக் கொடிய குற்றம் ஒன்று இருக்க முடியாது. பசு, தாயைப் போல! பல்வேறு நோய்களில் இருந்து மக்களைக் காக்கிறது’’ என்றார். தாம் ஓய்வு பெறும் நாளில் இத்தகைய பரிந்துரை அளிக்க வாய்ப்பு அமைந்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து, அது நாட்டின் சில பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பசுவைக் கொல்கிறவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்திருப்பது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு மேலும் வலு சேர்த்ததாக அமைந்துள்ளது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img