குட்கா விற்க லஞ்சம்: விஜயபாஸ்கருக்கு வேட்டு?

Published:

health minister vijayabaskar - 2026

புதுதில்லி:

குட்கா, பான் மசாலா விற்பனையை அனுமதிக்க கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து தில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா புதன்கிழமை நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதுவது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. இது மாநில சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடை செய்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து மத்திய அரசு, நாடு முழுவதும் குட்கா, பான் மசாலா, ஜர்தா, புகையிலை அடங்கிய வாசனைப் பாக்கு உள்ளிட்ட பொருள்களின் விற்பனைக்கு தடை விதித்தது. அத்துடன், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றுக்கும் தடை விதிக்க அறிவுறுத்தி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப் படுவதாக புகார்கள் வந்தன. இதை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

அப்போது ஒரு நிறுவனத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை தொடர்பான ஆவணங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களில், இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க, காவல்துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.

குட்கா தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மாதவராவ் என்பவர், 2015–2016ஆம் ஆண்டு மட்டும் ஒரு அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். இந்த லஞ்ச விவகாரம் தொடர்பான ஆவணங்களை, மேல் நடவடிக்கைக்காக தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் வருமான வரித்துறையினர் வழங்கினர்.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு ஆகியோருக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப் பட்டதாகவும், யாரெல்லாம் இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றனர் என்ற பட்டியல் வருமான வரி சோதனையில் அம்பலமானதாகவும் நேற்று ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் செய்தி வெளியானது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா தனது துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினாராம். கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், தமிழகத்தில் தடையை மீறி குட்கா, பான் மசாலா விற்கப்படுவது குறித்து மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், குட்கா, பான் மசாலா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மற்ற மாநிலங்களுக்கும் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img