சமாதானப் பேச்சு நடந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும்: அதற்குள் ராஜீவ் கொலையானார்: கண்கலங்கிய ப.சிதம்பரம்!

சற்றுமுன் சென்னை

chidambaram - 2026

சென்னை:
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்திருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கும்; ஆனால், அதற்குள் அவரைப் படுகொலை செய்துவிட்டார்கள் என்று ராஜீவ் நினைவு தினத்தில் கண்கலங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் வருடந்தோறும் மே 21ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று ராஜீவ் நினைவு தினம் நாடு முழுதும் கடைபிடிக்கப்பட்டது.

தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், ராஜீவ் குறித்த நினைவுகளைக் கூறி கண்கலங்கிப் பேசினார். “மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், ஜான் கென்னடி உள்ளிட்டோர் சமாதான தூதுவர்களாக இருந்ததால் கொல்லப்பட்டனர். ராஜீவும் அவ்வாறு இருந்ததால் போராளிகள் சிலரால் கொல்லப்பட்டார். சமாதான பேச்சுவார்த்தை நடந்திருந்தால் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை, மொழி உரிமை, சம குடியுரிமை உள்ளிட்டவை கிடைத்திருக்கும். ஆனால் அதற்குள் அவர் கொலை செய்யப்பட்டு விட்டார். அவர் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகளை சிலர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை என்று பேசினார் ப.சிதம்பரம்.

முன்னதாக, தில்லியில் உள்ள வீர பூமியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.