85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம்

சென்னை:
85% புகையிலை எச்சரிக்கை படங்களை  வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிறுவுனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிக்கை  15.10.2014 அன்று வெளியிடப்பட்டது. உறைகள் மீது பெரிய அளவில் எச்சரிக்கைப் படங்களை அச்சிட புகையிலை நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கும் வகையில், இத்திட்டம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி  நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆய்வு செய்து வரும் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழு, இந்தியாவில் புகையிலையை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா? என்பது குறித்து குறிப்பாக எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதால் இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்தது. அதன்படி, 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. இது தகுதியற்ற பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை ஆகும். புகையிலையால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கும் நிலையில் மக்கள் நலனில் அக்கறை  இல்லாமல், புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் விஷயத்தில் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் நிலைப்பாடு கேலிக்குரியதாகும். இக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தக் கருத்துக்கள் முட்டாள்தனத்தை விட மோசமானவை. புகையிலைப் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து இந்தியாவில் 65&க்கும் மேற்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று குழுவின் தலைவர் திலிப்குமார் காந்தியும், சர்க்கரை நோயை உருவாக்குவதற்காக வெள்ளை சர்க்கரை தடை செய்யப்படாத நிலையில், புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலைப் பொருட்களுக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்? என்று உறுப்பினர் ஷியாம் சரண் குப்தாவும், தினமும் ஒரு பாட்டில் மதுவும், 60 சிகரெட்டும் பிடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; உண்மையில் புகையிலையில் ஒருவித மூலிகைத் தன்மை உள்ளது என்று இன்னொரு உறுப்பினர் ராம் பிரசாத் சர்மாவும் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இவர்களில் குப்தா பீடி நிறுவன உரிமையாளர். மற்ற இருவரும் புகையிலை நிறுவன ஆதரவாளர்கள். இப்படிப்பட்டவர்களை புகையிலையின் தீமைகள் குறித்து முடிவெடுப்பதற்கான குழுவில் நியமித்தது அகிம்சையின் பெருமைகள் குறித்து பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கொலைகாரர்களிடம் ஒப்படைத்ததற்கு சமமான செயலாகும்.
மக்களவைக் குழுவின் பரிந்துரைகளை நாடே விமர்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவற்றை எதிர் கேள்வி கூட கேட்காமல் சுகாதார அமைச்சகம் ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவெனில், மத்திய அரசில் புகையிலை லாபியின் ஆதிக்கம் அசைக்க முடியாத அளவுக்கு வலுவாக உள்ளது என்பது தான். பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தான் புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம் வெளியிடும் முறை முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அவரது காலத்தில் தான் பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இம்முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட புகையிலை லாபியும், அவர்களுக்கு ஆதரவாக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் அழுத்தம் கொடுத்தனர். அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களிலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றையெல்லாம் போராடி முறியடித்து தான் புகையிலை தொடர்பான சீர்திருத்தங்களை மருத்துவர் அன்புமணி இராமதாசு கொண்டு வந்தார்.
மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற போது  சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற மருத்துவர் ஹர்ஷ்வர்தன் புகையிலை எதிர்ப்பில் தீவிரம் காட்டினார். தில்லியைச் சேர்ந்த இ.ஆ.ப. அதிகாரி ரமேஷ் சந்திரா தலைமையில் வல்லுனர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைப்படி பொது இடங்களில் புகைப்பிடித்தால் ரூ.20,000 தண்டம், சில்லறையில் சிகரெட் விற்கத் தடை, புகை பிடிப்பதற்கான வயதை 25 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முயன்றார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புகையிலை லாபி அடுத்த ஒன்றரை மாதத்தில் ஹர்ஷ்வர்தனை சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மாற்றியது என்பதிலிருந்தே அதன் வலிமையை அறிந்து கொள்ளலாம்.
பெரிய அளவிலான எச்சரிக்கைப் படங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 60-65% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்ப்பதற்கு, ஏதோ பிரதமர் சலுகை வழங்குவது போல தோன்றினாலும், உண்மையில் இது எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்படுவதைத் தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும். 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இந்தியா கையெழுத்திட்டுள்ள ஐ.நாவின் புகையிலைக் கட்டுப்பாட்டு செயல்திட்ட ஒப்பந்தத்தின்(Framework Convention on Tobacco Control – FCTC) 5.3 ஆவது பிரிவை மீறி புகையிலை கட்டுப்பாடு குறித்து முடிவெடுப்பதற்கான குழுவில் பீடி நிறுவன அதிபரும், புகையிலை நிறுவன ஆதரவாளர்களும் சேர்க்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்& புகையிலைக் கட்டுப்பாட்டு சட்டத்தில் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஹர்ஷ்வர்தன் கொண்டு வந்த மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரும் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னையில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் பசுமைத் தாயகம் மற்றும் புகையிலைக்கு எதிரான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்று கூறப்பட்டிருந்தது.