பெண்களின் சபரிமலை ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருவிழா..

Published:

1001291839 - 2026

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்பட்டு வரும் கேரளா மாநிலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி கோயிலில் இன்று மாசி பூரம் பொங்கல் பெருவிழாவில் திருவனந்தபுரத்தில் மாநகர் முழுவதும் பல லட்சம் பெண்கள் பொங்கல் இட்டு வழிபாடு நடத்தினர்.

திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபடும் இந்த விழா பார்க்க மிக அற்புதமான இந்து கலாச்சாரம் நிகழ்ந்த விழாவாக அமைந்தது.இதற்காக திங்கட்கிழமை மாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்தனர். இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டதாக கூறப்படுகிறது

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பொங்காலை வழிபாடு நடப்பது வழக்கம். பொங்காலை வழிபாட்டின்போது பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதால் பெண்களின் சபரிமலை என ஆற்றுகால் கோயில் அழைக்கப்படுகிறது.

தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி தேவி இத்திருத்தலத்தில் பகவதி அம்மனாக வீற்றிருக்கிறார். மதுரை சென்ற கோவலன் மகாராணியின் கால் சிலம்பை திருடிவிட்டதாக தவறாக குற்றம்சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். கணவனுக்கு நேர்ந்த அநீதியை கண்டு கோபத்தால் கொந்தளித்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு தனது ஒற்றைக்கால் சிலம்புடன் அரண்மனை சென்றார். அங்கு தன் கணவன் கோவலன் கள்வன் அல்ல என உணர்த்த தனது கால் சிலம்பை வீசி எறிந்தார். அநீதி இழைத்து விட்டோமே என உணர்ந்த பாண்டிய மன்னன் மரணமடைந்தார்.அதைத்தொடர்ந்து மகாராணி மரணம் அடைந்தார். சினம் தணியாத கண்ணகி மதுரையை தீக்கிரையாக்கிவிட்டு கோபாவேசத்துடன் தெற்கு நோக்கி சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார். அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வம் என்பதை அறிந்து அவரை ஆற்றுபடுத்தி அங்கேயே குடியமர்த்தினர்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,


ஆற்றங்கரையில் அமைந்த கண்ணகி தேவியை ஆற்றுகால் பகவதி அம்மனாக மக்கள் வழிபடத்தொடங்கினர். ஆற்றுகால் பகவதி அம்மன் சாந்த சொரூபியாக, பெண்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். ஆற்றுகால் தேவிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பூரம் நாளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டுவருகின்றனர். ஆற்றுகால் பகவதி கோயில் பொங்கல் பெருந்திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. கண்ணகி தேவியின் வரலாற்றை தோற்றம் பாட்டாக தினமும் பாடுவது இந்த விழாவின் முக்கிய சடங்காக பார்க்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 4.30 மணி தொடங்கி மதியம் 1-மணிவரையும், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நள்ளிரவு 1 மணி வரையும் சிறப்பு பூஜைகள், களபாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

பொங்காலை விழாவுக்காக திருவனந்தபுரம் நகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்த மேயர் வி.வி.ராஜேஷ்
9-ம் நாள் விழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 மணி அபிஷேகம், 6.05 மணி தீபாராதனை, 6.40 மணிக்கு உஷபூஜை, தீபாராதனை, 8.30 மணி பந்தீரடி, தீபாராதனை, 9.15 மணிக்கு சுத்த புண்யாகம், காலை 9.45 மணிக்கு அடுப்பு வெட்டி பண்டார அடுப்பில் அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி கோவில் மேல்சாந்தி தலைமையில் நடந்தது. பின்னர் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட துவங்கி அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்காலையிடுவதற்காக பெண்கள் விரதமிருந்து வருவது வழக்கம். கோயில் வளாகம் மட்டும் அல்லாது திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுகால் அம்மனை வழிபட்டனர். அதற்காக அதிகாலை முதலே பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து பொங்கல் இட தயாராகினர்.இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் கண்டதாக கூறப்படுகிறது.பொங்கால் மஹோத்ஸவம் நடைபெறும்போது கண்ணகி தேவி பாண்டிய மன்னனை வதம் செய்யும் நிகழ்வு தோற்றம் பாடலாக பாடப்படுகிறது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்காலை விழா
மதியம் 2.15 மணிக்கு உச்ச பூஜை, பொங்காலை நைவேத்யம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் பொங்கலிட்டபின் நைவேத்யம் அம்மனுக்கு சமர்ப்பிக்கும் விதமாக கோயிலில் இருந்து புனிதநீர் பொங்காலை பானைகள் மீது தெளிக்கப்படும். இதற்காக 350 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 3.10 மணி முதல் இரவு 7 மணிவரை சந்திரகிரகணம் என்பதால் கோயில் திருநடை அடைக்கப்பட்டிருக்கும். இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும். 7.30 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு குத்தியோட்டம், சூரல்குத்து நடைபெறுகிறது. இரவு 10.45 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நிகழ்வு நடக்கிறது.நாளை புதன்கிழமை இரவு திருவிழா நிறைவடைகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img