மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று, 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. 39 வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆகும். கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்படும் உபரி நீர் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் கடந்த மாதம், 17 ல், 40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று, 120 அடியை எட்டுகிறது.
இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 119.41 அடியாக உள்ளது.அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து 68,489 கனஅடியாகவும், நீர்இருப்பு 92.53 டிஎம்சி.,யாகவும் உள்ளது.
அணையில் இருந்து இன்று காலை, 10:00 முதல், 12:00 மணிக்குள் உபரி நீர் அணையின் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டி வருவாய்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், தஞ்சாவூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 70,000 கனஅடியிலிருந்து 80,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 15வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.