ரஜினி முதல்வர் ஆவார் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் கேரள ஜோதிடர் ஒருவர்! இது சென்ற வருடம் பரபரப்பாக உலா வந்த செய்தி. 37 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு கர்நாடக முதல்வர் பதவியில் அமரப் போகிறார் மஜத.,வின் குமாரசாமி. இது இன்றைய செய்தி.
கர்நாடகத்தில் தனிப் பெரும் கட்சியாக, 104 இடங்களுடன் வென்றிருந்தாலும் 7 பேரின் கூடுதல் ஆதரவு பெற இயலாமல் ஆட்சியை தவறவிட்டுள்ளது பாஜக., அதற்காக, அக்கட்சித் தலைவர் அமித் ஷா எவ்வளவோ முயன்றார் என்றும், ஆனாலும் அவரால் இயலவில்லை என்றும் அரசியல் வட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகத்தை அடுத்து அமித்ஷாவின் அடுத்த குறி, தமிழகம் மற்றும் தெலங்கானா என்று பேசப் படுகிறது.
ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் செல்வாக்கு இயல்பாக இல்லாமல் ஒரு சிலரை வைத்துக் கொண்டு அல்லது ஊடகங்களின் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் இமேஜ் எந்த அளவிலும் பயன்படாது என்பது அரசியலில் எல்லோரும் அறிந்ததுதான்!
அப்படி, மக்கள் செல்வாக்கை இழந்து வாக்குகளைப் பெற முடியாமல் தவிக்கும் இடதுசாரிகளின் பினாமியாக இப்போது கமல்ஹாசனின் அரசியல் பயணத்தை ஊடகங்களை வைத்து முன்னிருத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிரான நிலையில், கலை உலகில் தொடங்கி, சமூக, அரசியல் உலகிலும் முன்னிறுத்தப் படுகிறார் ரஜினி. அவர் அறிவித்த ஆன்மிக அரசியல் என்பது, பாஜக.,வின் அடிநாதம் என்பதால், அதன் பின்னணியில் அரசியல் இயக்கத்தை தொடங்கவுள்ள ரஜினி, தனிக்கட்சியாக தயாராக முன்னின்றாலும், பின்னணியில் பாஜக.,வின் கை இருப்பதாக, தமிழக அரசியல் வட்டாரங்களில் பொதுவான குற்றச்சாட்டும் உலவுகிறது.
இந்த நிலையில், திமுக., என்னதான் தலைகீழ் நின்றாலும் ஆளும் அதிமுக., அரசை அசைக்க இயலவில்லை. பலமுள்ள தொண்டர் படை இருந்தாலும், பலவீனமான, மக்கள் செல்வாக்கு பெறாத தலைவர்கள் அதிமுக.,வில் இருந்தும் கட்சியையும் ஆட்சியையும் அசைக்க இயலாததற்கு, மத்திய அரசின் ஆசியும் அணுக்கமும்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருவதும் அதனால்தான்!
கர்நாடகத்தில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கவும், தனிப்பெரும் கட்சியாக உருவாகவும் முடிந்த பாஜக.,வால் தமிழகத்தில் பெரும் அளவில் முன்னேற்றம் காண இயலவில்லை. காரணம், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் எவரையும் பாஜக.,வால் தமிழகத்தில் உருவாக்க இயலாததுதான்! இந்த நிலையில் அதிமுக., பாஜக., ரஜினி என்ற கூட்டணியுடன் அடுத்து வரும் 2019 தேர்தலை எதிர்கொள்ள பாஜக., தயாராகி வருகிறது. அமித்ஷாவின் அடுத்த இலக்கு அதுதான் என்று கூறப்படும் நிலையில், ரஜினியின் நேற்றைய பேட்டியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
என்னதான் தங்களை திட்டித் தீர்த்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் குமாரசாமியை திடீர் முதல்வர் ஆக்கி, தாங்கள் பின்னணியில் இருந்து ஆட்டி வைத்து ஆட்சி செய்ய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆளுநர் 15 நாள் அவகாசத்தை எடியூரப்பாவுக்குக் கொடுத்தது கேலிக்கூத்து என்று ரஜினி கர்நாடக விவகாரத்தில் கருத்து தெரிவித்தது நேரத்துக்குத் தக்க கருத்து என்கிறார்கள்.
இந்த நிலையில், ரஜினியின் ஜாதகம் குறித்து அவரது மன்றத்தினர் இப்போது பேசிவருகிறார்கள். கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்ததையும், ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது, இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழக முதல்வராக அவர் வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
தனிக்கட்சி தொடங்கி, பாஜக.,வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில், பாஜக.,வும் தனக்கு முழு மரியாதை கொடுத்து, தமிழகத்தை ஆள அனுமதிக்கும் பட்சத்தில், புதிய கட்சியை பாஜக.,வுடன் இணைத்து விடலாம் என்று அந்த ஜோதிடர் நம்பிக்கை வாக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
காவிரி பாசனப் பகுதியான மைசூர் மாண்டியா பகுதியில் மட்டும் செல்வாக்கை வைத்துக் கொண்டு, 37 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே பெற்று கர்நாடகத்தில் முதல்வராக குமாரசாமி ஆகும் போது, தமிழகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள ரஜினிக்கு அந்த வாய்ப்பு வராமலா போய்விடும் என்று கூறுகின்றார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். அதனால்தான் தமிழக உளவுத்துறை அறிக்கை குறித்து செய்தித்தாளில் வந்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, அப்படி இருந்தால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.
தமிழக, கர்நாடக அரசியலில் ஏற்படும் குழப்ப நிலையில், அடுத்த வருடம் 2019ல் நடக்கும் பொதுத் தேர்தலின் போது இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கலாம் என்று இப்போதே யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. அதனால்தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்றும், இலக்கு 2019தான் என்றும் கூறப்படுகிறது.




