கமல் சர்ச்சைப் பேச்சு! தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்

kamalhaasan tv - 2026

சென்னை : அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியது நாடு முழுதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது குறித்து கரூர் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் பேசியபோது, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து, அவர் பெயர் கோட்சே” என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டி பகுதியில், அவர்கள் மத்தியில் இந்து தீவிரவாதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், கமலுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. கமலுக்கு எதிராக நாடு முழுதும் புகார்கள் போலீஸில் கொடுக்கப் பட்டன.

இதனிடையே தேர்தல் ஆணையத்திடம், கமல் கட்சிக்கு எதிராகவும், புகார் கொடுக்கப் பட்டது. கமல் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமல் பிரசாரத்துக்கு தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கப் பட்டன.

இதை அடுத்து கமல் பேச்சு குறித்து கரூர் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.