காவிரி நீர் திறந்துவிடப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதால், ஏழை விவசாயி அய்யாக்கண்ணு தனது பணியான விவசாயத்தை இனி பார்க்க வேண்டும் என்று கோரியும், அவரிடம் இருந்து போராட்டத்தின் போது பயன்படுத்தப் பட்ட மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகளை கைப்பற்ற வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.
இது குறித்து அக்கட்சியின் சார்பில் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்த போது…
மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மாலையாக அணிந்து கோவணம் கட்டி விவசாயிகளுடைய மானத்தை டெல்லி வரை பறக்கவிட்டார் அய்யாக்கண்ணு. தமிழர்களையும் தமிழக விவசாயிகளையும் அவமானப்படுத்திய போலி விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, காவிரியில் தண்ணீர் வந்த காரணத்தினால் விவசாயம் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளிடம் போராட்டத்தை தூண்டி விட்டு தமிழக அமைதியைக் கெடுக்க முயற்சித்ததால், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவரது தொழில் முதலீடாக இருக்கக்கூடிய மண்டை ஓடு, எலும்பு ,ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டியும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 23.07.2018 இன்று மனு ஒன்றைக் கொடுத்தோம்.
இந்து மக்கள் கட்சியின் சார்பில், என் தலைமையிலான குழுவினர் நெல் நாற்று உடன் வந்து மனு அளித்தனர். இதில், மாநில துணைத் தலைவர் சந்துரு, மாநில இளைஞரணி செயலாளர், கடலூர் மாவட்ட தலைவர் என் ஆர் பரணிதரன், திருச்சி மாவட்ட தலைவர் பரமானந்தம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாநில தொண்டரணி தலைவர் கணக்கன்பட்டி மாரிமுத்து, திருமுருகன் , கௌரவத் தலைவர் காவேரி உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் ராம.ரவிக்குமார்.


