ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி உள்பட இருவர் கைது

Published:

krishnagiri rupees - 2026

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி டி.பி. ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், இவர் வெல்லம்மண்டி கடை வைத்துள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள ஊரக வளர்ச்சி திட்ட முகமைக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடையை வாடகைக்குக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அந்தக் கடையை வாடகைக்கு பெற்றுத் தருவதாகவும், அதற்காக ரூ.15 ஆயிரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மனுக்கு லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகத்தின் பதிவு எழுத்தராகப் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி என்பவர், ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

லஞ்சப் பணத்தை கொடுக்க விரும்பாத ஜெயக்குமார், இது தொடர்பாக கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இதையடுத்து அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவப்பட்ட ரூ.15 ஆயிரத்தை கொடுப்பதற்காக ஜெயக்குமார்  மாலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு சென்று, லஞ்ச பணத்தை பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார். பின்னர் அவர் அந்தப் பணத்தை திட்ட இயக்குநர் நரசிம்மனிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கே மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு  துறையினர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img