
வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை..
பாரத நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலை போராட்ட வீரர்களின் தாரக மந்திரமாக விளங்கியது வந்தே மாதரம் என்ற மந்திர சொல். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உற்சாகத்தை உணர்ச்சியை உத்வேகத்தையும் கொடுத்தது வந்தே மாதரம் என்ற தாரக மந்திரம். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தடி அடியையும் கண்ணீர் புகையையும் துப்பாக்கி குண்டையும் தாங்குவதற்கு மருந்தாக அமைந்தது வந்தே மாதரம் என்ற சொல்.
1892-ல் ஆனந்தமடம் என்ற நாவலில் பக்கிங் சந்தர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டு வெளியிட்ட பாடல் தான் வந்தே மாதரம் என்ற பாடல். இந்த பாடல் பாரதத்தின் மேன்மை உணர்த்தும் உணர்ச்சிகரமான பொருளுடைய கீதம் அது.
இந்தப் பாடலின் 150ஆவது ஆண்டு விழாவை ஒட்டி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் அது பற்றிய கருத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
வந்தே மாதரம் முழக்கம் நாட்டில் உள்ள எல்லோரையும் ஒன்றிணைத்தது. வந்தே மாதரம் என்றால் தாயை வணங்குகிறோம் என்று அர்த்தம். வந்தே மாதரம் என்பது வெறும் சுதந்திரப் போராட்டத்திற்கான அரசியல் முழக்கம் அல்ல, பாரத்தாயை போற்றும் பாடல். வந்தே மாதரம் என்பது ஒரு மந்திரம் என பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசினார்.
மேலும் பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் எதிர்த்ததால் வந்தே மாதரம் பாடல் பிளவுபட்டது என்பதையும் மதச்சார்பின்மை சமூக ஒற்றுமை என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலின் வரிகளை நீக்கி காங்கிரஸ் இந்த நாட்டிற்கு அநீதி இழைத்தது என்ற உண்மையை தெளிவாக சுட்டிக்காட்டி பேசினார்.
இதற்குப் பதில் அளித்து பேசிய தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பி ஆ.ராசா அவர்கள் வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் எதிரானது என்றும் அது முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்றும் இதனால் தான் காங்கிரஸ் அதை புரிந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் பேசி உள்ளார்.
இந்த நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தை கொடுக்காதீர்கள். அப்படி கொடுத்தாலும் தயவு செய்து தமிழகத்திற்கு கொடுக்காதீர்கள், லண்டனில் இருந்தாவது தமிழகத்தை ஆளுங்கள் என்று மாநாட்டில் தீர்மானம் இயற்றியது திமுகவின் தாய் அமைப்பான திராவிட கழகம். அந்த திராவிட கழகத்திலிருந்து வந்த திமுக “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு” என்று தனி நாடு கேட்டு போராட்டம் நடத்தியது.
இப்படிப்பட்ட தேசவிரோத கருத்துக்களை பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
தற்போது இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்ட காலத்தில் முஸ்லிம்களை திருப்தி படுத்துவதற்காக காங்கிரஸ் தேசிய மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை பாடுவதை தவிர்த்ததும் பல்வேறு சலுகை வாரி வழங்கியும் தாஜா போக்கு கடைப்பிடித்தது. அதனாலேயே இந்த தேசம் மதத்தின் அடிப்படையில் வெட்டி பிளக்கப்பட்டது.
அதேபோல் தமிழகத்திலும் ஓட்டுக்காக முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி தாஜா போக்கை கடைப்பிடிப்பதே திமுகவின் வாடிக்கையாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பல்வேறு மேடையில் நான் திருவாரூர் தெருக்களில் பாகிஸ்தான் கொடி பிடித்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கத்தி சென்றுள்ளேன் எனவும் மேடையில் பேசி உள்ளார். அதேபோல் OBC மக்கள் 30 சதவீத இட ஒதுக்கீட்டை பிடுங்கி அதிலிருந்து 3.5% இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வாரி கொடுத்தார் கருணாநிதிஅவர்கள். தற்போது அமைந்துள்ள திமுகவின் ஸ்டாலின் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முஸ்லிம்கள் திருமணத்திற்கு சென்றும் இந்துக்களின் திருமண சடங்குகளை அவமானப்படுத்துவதும், இந்துக்களின் புனித தலமான முருகனின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம் மலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகும் இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற மறுத்து தமிழ் கடவுள் முருகனை முருக பக்தர்களையும் அவமானப்படுத்துகிறது.
இப்படி முஸ்லிம்களின் ஓட்டுக்காக காங்கிரசும் திமுகவும் மாறி மாறி அவர்களை தாஜா செய்வதுடன் தேசத்திற்கு எதிரான கருத்துக்களையும் சொல்ல வைக்கிறது.
இந்த பாரத நாட்டை நேசிக்கின்ற ஒவ்வொரு குடிமக்களும் வந்தே மாதரம் பாடலை தனது தேசிய கீதமாக உணர்கின்றனர்.
தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர் செய்த கொடுமைகளை தாங்கியதும், கோவை சிறையில் வ.உ.சிதம்பரனர் செக்கிழுக்க உத்வேகத்தை கொடுத்ததும், திருப்பூர் குமரன் தடியடி தாங்கி உயிர் நீக்கும் தருவாயிலும் தேசியக் கொடியை கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க சக்தியை கொடுத்ததும் வந்தே மாதரம் என்று சொல்லும் பாடலும் தான். தேசிய கவி பாரதியார் வந்தே மாதரம் என்ற தொடங்கும் பல்வேறு உணர்ச்சி மிக்க பாடல்களை உருவாக்கி தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வேட்கை உருவாக காரணமாக இருந்தார்.
இதெல்லாம் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார். ஏனென்றால் திட்டமிட்டு தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் மறைத்து தமிழ்நாடு பாரத நாட்டிற்கு எதிராக தனிநாடு பிரிவினை கேட்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியது திமுக என்ற உண்மையை திமுக எம்பி ஆ.ராசா எப்படி மறந்திருப்பார்.
தொடர்ந்து தமிழகத்தில் தேசத்திற்கு எதிராக கருத்துக்களை விதைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் திமுக எம்பி ஆ.ராசா அவர்கள். தமிழகம் அன்றும் இன்றும் என்றும் தேசியத்தின் பக்கம் தான். தில்லையாடி வள்ளியம்மையும் முத்துராமலிங்க தேவரும், வாஞ்சிநாதனும் பிறந்த மண் தமிழகம்.
பாரத நாட்டை தெய்வமாக நினைக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக ஏற்கத் தயாராக இருக்கின்றனர்.
முகமது அலி ஜின்னாவிடம் சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்ன காயிதே மில்லத்தின் வாரிசுகளுக்காகவும் அவர்களின் ஓட்டுக்காகவும் வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்கள் மனதை புண்படுத்துகிறது என்று பாராளுமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேசிய பேச்சுக்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்ந்து ஓட்டுக்காக தேசவிரோத கருத்துக்களை சொல்லும் திமுகவிற்கு தமிழக மக்கள் வருகின்ற தேர்தலில் தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…



