Home Blog Page 5434

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 6)

பேரருளாளன் பெருமையை , திருவத்தி மாமலையின் ஏற்றங்களை “ப்ரஹ்மாண்ட புராணம் ” என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது ..

நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய் , (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம் அப்புராணத்தில் அமைந்துள்ளது !

ப்ருகு வேண்டினபடியால் , பிரமன் தனக்கு உபதேசித்த ஸத்ய வ்ரத க்ஷேத்ர மாஹாத்ம்யத்தை நாரதர் ( ப்ருகுவிற்குச் ) சொல்லலானார் .

துண்டீர மண்டலமென்றும் தொண்டை மண்டலமென்றும் வழங்கப்படுகிற இந்நிலப் பகுதி , பூமியின் மற்ற பாகங்களை விடப் பல வகைகளில் சிறப்புடையது !

அதனால் தான் அசரீரி , பிரமனை பூமியின் இப்பகுதிக்கு விரைந்து செல்ல ஆணையிட்டது ! ஆம் !! “ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் ” அது இங்கு தானே உள்ளது !

நம்முடைய விரதம் ..அதாவது நாம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தொடங்கும் நற்காரியங்கள் தங்கு தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறுமிடமாதலால் இவ்விடம் ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் என்று கொண்டாடப்படுகின்றது !

பூமிப் பிராட்டியின் இடைக்கு ஒட்டியாணமிட்டது போல் விளங்கும் ஊராக அறியப்படும் பெருமை காரணமாக ” காஞ்சீ ” என்றே புகழப்படும் நிலம் இது !

ஆம் ! காஞ்சீ என்று மேகலைக்கும் ( இடை ஆபரணத்திற்கும் ) பெயர் !

ஒரு பெண்ணை வருணிக்கும் புலவர்கள் பெரும்பாலும் அவள் இடையையன்றோ கவி பாடுவர் ! அது போல் , பூமி இத்தனை சிறந்து அழகாய் காட்சி அளித்திடக் காரணம் அவள் இடை, இடை ஆபரணம் போல விளங்கும் காஞ்சியேயாம் !

காஞ்சியில் பிறந்தால் முக்தி ; காசியில் மரித்தால் முக்தி என்னும் சொற்றொடர் இவ்வூரின் பெருமையை பாமரர்க்கும் எளிதில் உணர்த்திடும் !

அயோத்யா , ( வட ) மதுரா , ஹரித்வாரம், காசீ, காஞ்சீ, உஜ்ஜயினீ , த்வாரகை ஆகிய க்ஷேத்ரங்களை ” முக்தி தரும் நகரங்கள் ” என்று அழைப்பர்கள் !! தென்னாட்டில் இருந்து இப்பட்டியலில் இடம் பெற்ற பெருமை காஞ்சிக்கே என்பதனை நினைவில் கொள்க !

இன்னொன்று ; பூமிக்கு இடை ஆபரணம் போலே என்று ( காஞ்சீ ) சொல்லப்பட்டது போல் , மற்றெந்த முக்தி க்ஷேத்ரங்களும் பூமியோடு தொடர்பு படுத்திப் பேசப்படவில்லை / கொண்டாடப் படவில்லை என்பதும் காஞ்சிக்குத் தனிப் பெருமையாம் !!

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஒன்று என்கிற தன்னேற்றமும் காஞ்சிக்கு உண்டு ! ( ஒருவரும் ப்ரார்த்திக்காமல் , தானே உகந்து பகவான் நிலை கொள்ளும் இடங்களை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்பர் )

” ஸ்வயமுதயிந : ..” என்று தயா சதகம் மேலே சொன்ன கருத்தினை அறிவிக்கின்றது !!

பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்க , பாரதத்திற் படிந்திட்ட பங்கயத்தோனை ( பிரமனை ) ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் என்று அசரீரி பணிக்கவும், சடக்கெனப் புறப்பட்டான் பிரமன் !

அப்பொழுதே யாகம் செய்து இறைவனைக் கண்டு விட்டாற் போல் குதூகலித்தான் கமலோத்பவன் ( பிரமன் ) !!!!

வேதாந்த தேசிகன் “ஹம்ஸ ஸந்தேசமென்றொரு நூல்” அருளியுள்ளார் ..
ஸீதையின் பிரிவால் வாடும் இராமன் ஓர் அன்னப் பறவையை அவளிடம் தூது விடுவதாக அமைந்திருக்கிற அற்புதக் காவியமிது !

அன்னப்பறவைக்கு , எப்படிச் செல்ல வேண்டும்; எங்கெங்கெல்லாம் செல்ல வேண்டும் ; தரிசிக்க வேண்டியவைகள் என்னென்ன என்று அனைத்தையும் விவரித்துச் சொல்லுகிறான் இராகவன் !!

போகும் வழியில் , தொண்டை மண்டலம் புகுந்து ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல்லாமல் வாராதே என்று அன்புக் கட்டளையிடுகின்றான் !!

‘ துண்டீராக்யம் ததநு மஹிதம் மண்டலம் வீக்ஷமாண : க்ஷேத்ரம் யாயா : க்ஷபித துரிதம் தத்ர ஸத்ய வ்ரதாக்யம் | |
என்று புகழ்கின்றான் இவ்வூரினை !!

ஸத்ய வ்ரத க்ஷேத்ரமென்பது பாபங்களையெல்லாம் விரைவாகப் போக்கும் திவ்ய பூமி !

மேலும் எம்பெருமானின் தொடர்ச்சியான கருணைப் பார்வைக்கு இலக்கான ஒரே ஊர் காஞ்சீ மட்டுமே என்றும் ஹம்ஸ ஸந்தேசம் இவ்வூரினைக் கொண்டாடுகின்றது !!

இன்னொன்றும் வெகு ஸ்வாரஸ்யமாக , தனக்கே உரித்தான பாணியில் ” கவி தார்க்கிக ஸிம்ஹம் ” தேசிகன் , அங்கு அருளிச்செய்கிறார் !

ஸீதையை நாடிச் செல்லும் அன்னப் பறவை , வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதால் களைத்துப் போக வாய்ப்புண்டு ! வியர்வையினால் உண்டாகும் சிரமங்களும் அன்னத்தை பாதிப்பிற்குள்ளாக்கக் கூடும் !

ஆனால் அன்னம் அது குறித்து அஞ்ச வேண்டியதில்லையாம் !! ஏனெனில் காஞ்சியின் காற்று அன்னத்தின் களைப்பை அநாயாஸமாகப் போக்கிவிடுமாம் !!

“மந்தாதூதாத் ததநு மஹிதோ நிஸ்ஸ்ருதச் சூதஷண்டாத் ;பார்ச்வே தஸ்யா: பசுபதிசிரச் சந்த்ர நீஹார வாஹீ |

தூராத் ப்ராப்தம் ப்ரியஸகமிவ த்வாம் உபைஷ்யதி அவச்யம் ;கம்பாபாத : கமல வநிகா காமுகோ கந்தவாஹ :|| ”

அன்னமே; காஞ்சியில் மாஞ்சோலைகள் நிறைய உண்டு ! காற்று வீசுவதால் மாமரங்கள் அசைய , அவற்றின் ( மாங்கனி, பூ , இலை) நறுமணங்களைச் சுமந்து கொண்டு , காற்று அங்கிருந்து நகரத்து மக்களை மகிழ்விக்கப் புறப்பட்டுச் செல்லும் !

அது மட்டுமா ?!! அக்காற்று தன்னுடைய குளிர்ச்சியை அதிகரிக்க மற்றொரு உபாயத்தை ( வழியைக் ) கைக் கொள்ளுமாம்.. மாந்தோப்புகளிலிருந்து புறப்பட்டு நகரத்திற்கு வரும் போது இங்கு கோயில் கொண்டிருக்கும் ஏகாம்பரன் ( பரம சிவன் ) தலையைத் தடவிக் கொண்டு கிளம்புமாம்..

காற்று தன் குளிர்ச்சியைக் கூட்ட , சிவனின் சிரஸ்ஸை தடவிப் பயன் உண்டோ என்கிற ஐயம் எழுவது இயற்கை !

சிவன் தன் தலையில் சந்திரப் பிறை சூடியிருக்கின்றான் .. சந்திரன் குளிர்ச்சிக்குப் ( தண்ணளி ) பெயர் போனவன் .. அப் பிறையில் தோய்ந்து காற்று தன்னை இன்னமும் குளுமையூட்டிக் கொள்ளுமாம் !! இத்தனை போதாதென்று தாமரைக் காட்டைத் தழுவி , அதன் மணத்தையும் சுமந்து கொண்டு , ஒரு தோழனை உபசரிக்குமாப் போலே அன்னமே காஞ்சியின் காற்று உன்னையும் உபசரிக்கும் !!

அஞ்சாதே !! என்று பெருமாள் ( இராமன் ) அன்னத்தைப் பார்த்துச் சொல்லுவதாக ஸாதிக்கிறார் தேசிகன் !!

தற்சமயம் கடும் கோடை வெப்பத்தால் துவண்டு அவ் வருணனை ( மழையை ) எதிர்பார்த்திருக்கும் நமக்கு இவ் வருணனை ( மேலே கண்ட ச்லோகம் மற்றும் அதன் பொருள் ) சற்றேனும் ஆறுதலன்றோ !

( அவ் வருணனை, இவ் வருணனை என்றவிடங்களில் சிலேடைச்சுவை ரசித்திடுக ! )

இப்படிப் பரம்பொருளான இராமனே , இந்நகரைப் பல படிகளாக ( பல வகைகளில் ) கொண்டாடியிருக்கின்றான் எனில் ; பிரமன் மகிழ்ச்சியுடன் இந்நகரை நோக்கி ஓடி வரத் தயக்கம் தான் உண்டோ ?!

மண் மகளுக்கு அலங்காரமெனத் திகழும் மதிள் கச்சியை மகிழ்வுடனே வேகமாக அடைந்திட்டான் நான்முகனும் !!

வரதனாய் இறைவன் வருவதற்கு முன்பே அவன் அருட்பார்வை பதிந்திட்ட அத்திகிரியைக் கண்டான் அயன் !

எம்பெருமானுடைய சக்ராயுதமே அத்திகிரி ஆயிற்றோ என்று வியந்தான் பிரமன்.. ஆம் சக்ரம் எதிரிகளைப் பூண்டோடு அழிக்கும் !

இம்மலை நம் வினைத் தொடரை ( பாபங்களை ) வேரோடு அறுக்கும் !!

மலைக்கு இனியனாய் நின்ற பெருமானை மனக்கண்ணில் நிறுத்தி , மலையையே கரம் குவித்துப் போற்றலானான் நாபீஜன்மன் !!

உடனடியாக வேள்விக்குத் தன்னையும் , ஊரையும் தயார்படுத்த எண்ணியவன் சட்டென ஒரு பெயரை உச்சரித்தான் ..

ஆம் .. விச்வகர்மா தான் அவன்..

அவன் வருகைக்குக் காத்திருந்தான் பிரமன்..நாமும் காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 5)


ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன்..

பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள்.. அதிலும் பிரம்ம பதவி என்பது எத்தனை உயர்ந்தது .

ஆயிரங்கோடி யுகங்கள் பகவானைப் பூசித்து, பிரமன் இவ்வுலகங்களைப் படைக்கும் தகுதியை ( மீண்டும் ) அடைகின்றானாம் !!

அப்படி அரும்பாடுபட்டுப் பெற்ற பெருஞ்செல்வம் இப் பிரமபதவி !

ஆயிரம் அச்வமேதங்கள் செய்தால் தான் பதவி நிலைக்கும் ! சரி ! ஆயிரம் வேள்விகள் வளர்ப்பது நிச்சயமாகி விட்டது .. பதவியைக் காப்பாற்றிக் கொள்வது இருக்கட்டும் ! நாம் ஏன் இறைவனை தரிசிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது ?!

பாரத தேசம் வந்து, வேள்வி(களு)க்கான சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தான் .. வேள்வி ; விடை தெரியாக் கேள்வியாய் அவனை வாட்டிக் கொண்டிருந்தது !

முதலில் தன் பலத்தில் , தன் முயற்சியினால் இறையனுபவம் பெற விழைந்திட்ட பிரமனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது !

நிலவைப் பிடிக்க முயன்று , அது கை கூடாத வருத்தத்தில் அழும் குழந்தையைப் போல் ஓவென அழலானான் வாணீ நாதன் !
பிறகு தான் நம் முயற்சியினால் அவனை அடைவது சிரமம் என்பதனையும் , அவனைக் கொண்டே அவனை அடைய வேண்டும் என்பதனையும் நன்கு புரிந்து கொண்டான் !

அவனை ( பரமனை ) நம்புவதொன்றே வழி ! அவனே வழி காட்டுவான் என்று உளமாற நம்பினான் ! ” நம்பிக்கையே பலம் ” என்று உணர்ந்தான் !

சிரமமான தருணத்திலும் மிகச் சரியான முடிவெடுத்தான் பத்மாஸனன் !

அப்போது தான் அசரீரி வார்த்தையைக் கேட்டான் !

என்ன பிரம்ம தேவா !! நலமா ?

அசரீரி இப்படிக் கேட்கவும் , இது ; தான் தரிசிக்க விரும்பும் பரமாத்மாவின் குரல் தான் என்று ( அயன் ) புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை !

பெருமானே ! நலமா என்றா தேவரீர் ( நீங்கள் ) வினவுவது !? என் நிலைமையை என்னை விட நன்கு அறிந்தவரன்றோ நீர் !!

உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிபவரன்றோ நீர் !

“யஸ் ஸர்வஜ்ஞ: ஸர்வ வித் ” என்று உம்மை அனைத்தும் அறிந்தவர் என்றன்றோ வேதாந்தம் அறைகின்றது !

மாதா பிதா ப்ராதா நிவாஸஸ் சரணம் கதி : ஸுஹ்ருத் நாராயண : என்கிற படியே சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் எந்தமக்கு நீரே அன்றோ !

ஆனால் நாங்களோ உம்மை மறந்து , எங்களையே பெரியவர்களாகக் கருதிக் கொண்டு அஹங்கரித்துத் ( நான் , எனது போன்ற தீய குணமுடையவர்களாய் ) திரிபவர்களானோம்.

நீ கொடுத்த படைப்புத் தொழிலைச் செய்யும் நான் , நீ தான் என்னுள் இருந்து ( அந்தர்யாமியாய் ) அனைத்தையும் செய்கிறாய் என்பதனை மறந்து , என்னை விடப் பெரியவன் யாருமில்லை என்று எத்தனை ஆட்டம் போட்டிருக்கிறேன் தெரியுமா ?

சாதாரண ஜீவனான நான் உனதருளால் அன்றோ பிரம பதவியில் இருக்கிறேன். ஆயினும் ஒரு நாளும் உனக்கு நான் நன்றி சொன்னதில்லையே !

தெய்வத்திடம் எதனையும் கேட்டுப் பெறாதே ! அவன் இதுவரை நமக்குத் தந்திருப்பவைகளுக்கு நன்றி சொல்ல மட்டும் அவனிடம் செல் என்று அற நூல்கள் சொல்லியிருப்பதை மறந்து , இது நாள் வரை நாங்கள் யாசிப்பதற்கு மட்டும் தானே உன்னைச் சேவித்திருக்கிறோம்.

இறைவா ! எங்கள் அறியாமை கண்டு உன் மனது எத்தனை வாட்டமடைந்திருக்கும் ! அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட்டதே இல்லையே !

இன்று பார் , என் செயல்களுக்குத் தகுந்த தண்டனை அடைந்து விட்டேன் !

மனைவி விட்டுப் பிரிந்தாள் .. ப்ருஹஸ்பதி சாபம் தந்தார் ..என் நாற்காலி நழுவியது ! ஆயிரம் அச்வமேத யாகங்கள் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் !

வேள்வி செய்ய சித்த சுத்தி முக்கியம் ! தபஸ்ஸினால் தான் சித்த சுத்தி உண்டாகும் ! தபஸ் செய்ய சமம் தமம் ( உட்புலன் மற்றும் வெளிப்புலனடக்கம் ) முதலான குணங்கள் தேவை ! அவைகள் உண்டாக ஒரு காலாலே நின்று , கைகளைக் குவித்துக் கொண்டும் , மூச்சடக்கிப் பார்த்தும் , அந்தர்யாமியான உன்னைக் காண மனம் பக்குவப்படவேயில்லை !

நான் மொத்தமாகத் தோற்றுப் போனேன் ! கானல் நீர் தேடியோடும் சிறுமானைப் போலே ஆகி நிற்கிறேன் இப்பொழுது ..என்று கதறித் தீர்த்தான் பிரமன் !

சிரித்தது அசரீரி !

மனிதர்களில் சிலரைப் போலே , ஒரு முறை நலமா என்று கேட்டதற்கு மொத்தப் புராணத்தையும் சொல்லி விட்டாயே !!

கவலை வேண்டாம் !! உன் துயர் தீர்க்கவே யாம் பேசுவது !! மனத்தினை ஒருமுகப் படுத்த முடியாமல் நீ தவிப்பது புரிகிறது ! பதவி அதிகாரத்தில் பன்னெடுங்காலம் நீ ஆனந்தங்களை மட்டுமே தொடர்ச்சியாக அனுபவித்து வந்த படியாலும், உன்னுடைய கர்மாவின் காரணமாகவும் நீ தற்சமயம் சிரமப்படுகிறாய் !!

ப்ருஹஸ்பதி ஆயிரம் அச்வமேதங்கள் உன்னால் செய்யப்படவேண்டும் என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் !
ஏனெனில் அப்போது தான் உனக்கு மனத்தெளிவு ஏற்படும் என்றது அசரீரி !!

வாய் பிளந்து நின்றான் வாணீசன் !!

அவன் நெஞ்சம் இரு பிளவாக போகாமல் நின்றதில்
அவனுக்கே வியப்பு தான் !

அவன் கலக்கம் கண்டு ஆகாச வாக்கு அவனுக்கு விரைவாக இதமுரைக்கத் ( நன்மை உரைக்க ) தொடங்கியது !

நான்முகனே ! உன் கவலை புரிகிறது ! அச்வமேத வேள்வி செய்வதும் கடினம் ..அதுவும் ஆயிரம் வேள்விகள் !! சொல்லவே வேண்டாம் எத்தனை சிரமமென்பதை ! கால தாமதத்தாலும் நீ அல்லலுறுவாய் !

அஞ்சாதே ! உனக்கு ஒரு சுலபமான வழி சொல்கிறேன் ..கேள் .. ஒரு வேள்வி செய்தாலே , ஆயிரமல்ல ..கோடி வேள்விகள் செய்த பலனை நமக்குப் பெற்றுத் தரக் கூடிய ஒரு இடம் இருக்கிறது ! அதனை உனக்குச் சொல்லட்டுமா ? என்று வான் குரல் வினவவும் ;

கரங்களை குவித்தவனாய் , மண்டியிட்டு ஆகாசத்தை நோக்கினவனாய் , பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பிரமன் பேசலானான் !

ப்ரபோ ! உடனே அவ்விடம் யாதென்று சொல்லுக ! செல்வதற்கு அடியேன் சித்தமாயிருக்கிறேன் என்றான்..

அசரீரியும் சற்றே மௌனமாயிருந்து , பின்பு இன்னமும் உரத்த குரலினால் ” ஸத்ய வ்ரத க்ஷேத்ரம் செல் ” ” ஸ்ரீ ஹஸ்திகிரியே ” உனக்குப் புகல் ; அங்கு வேள்வி செய் என்றது !

பிரமன் ஆனந்தமடைந்தவனாய் , உடனே தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினான் !

ஒரு முறை சொல்லிப் பார்த்தான்

” ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி ”

சொன்னதும் அவனுக்கு அது ” தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகத் தித்தித்தது ”

நாமும் ஸத்யவ்ரத க்ஷேத்ரம் – ஸ்ரீ ஹஸ்திகிரி என்று சொல்லிக் கொண்டே காத்திருப்போம் !

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 4)

மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத ( பிரமனின் ) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் !

சட்டத்திற்குப் ( சாஸ்த்ரங்களுக்கு ) புறம்பாக பிரமன் பேசியதாக கூச்சலிட்டதுடன் , நான்முகனுக்கு, அவன் செய்த பெரும்பிழைக்கு , அவனுக்கு தண்டனை தர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர் ..

உண்மையான ம்ருகத்தைக் கொண்டு யாகங்கள் செய்ய வேண்டியதே முறையாயிருக்க , மாவினால் மிருகம் செய்து தீ வளர்க்க வேண்டுமாமே !! இதற்கு என்ன சாபம் கொடுக்கலாம் ?! என்று தங்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் !

பொறுமையுடன் ப்ருஹஸ்பதி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் ! .. அவர் என்ன பேசப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்..

மௌனம் கலைத்தார் தேவ ப்ரோஹிதர் ..

” பிரமனே ! பிடி சாபம் !! வேள்வியின் இலக்கணங்களுக்கு/சட்ட திட்டங்களுக்கு எதிராக நீ பேசியமையால் , உன் ( பிரம்ம ) பதவியிலிருந்து விலகக் கடவாய் !

ஒன்றல்ல !! ஆயிரம் அச்வமேத யாகங்களை குறையில்லாமல் விரைவில் செய்து முடித்தால் , உன் பதவி உன் வசமாகும் !! மேலும் யாகங்களை நீ தீர்ப்பளித்தாற் போல் மாவினால் ஆன ம்ருகங்களைக் கொண்டு அல்ல ; நிஜமான ம்ருகங்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும் .. இதுவே சாபம் !

கலக்கமுற்ற பிரமனும் வெகுண்டவனாய் ப்ருஹஸ்பதிக்கு சில சாபங்களைத் தந்தனன்..

( இருவருக்குமே சாப விமோசனம் நம் வரதனால் தான் என்பது மேலே தெரிய வரும் )

ப்ருஹஸ்பதிக்கு பதிலுக்கு சாபம் வழங்கினாலும், பிரமன் நிலை பரிதாபத்துக்கு உரியதாயிற்று !

ஆம்.. யாகம் செய்வதே கடினம்.. அதிலும் அச்வமேத யாகம் சாதாரணமானதா ??
ஆயிரம் அச்வமேதம் என்றால் …. தலை( கள் ) சுற்றியது ப்ரம்மாவிற்கு !!

நாம் சொன்ன தீர்ப்பு ; சரிப்படவில்லையென்றால் மேல் முறையீடு, மறு சீராய்வு போன்றவற்றிற்கு விண்ணப்பித்திருக்கலாம்.. அதை விடுத்து ஆயிரம் அச்வமேதங்கள் செய்ய வேண்டியது என்றால் , யாராயிருந்தாலும் தலை சுற்றத் தானே செய்யும் .. **

## வாசகர்களுக்கு..

உங்களில் பலரும் பிரம்மா கொடுத்த தீர்ப்பு முடிவு சரியானதே என்று கருத இடமுண்டு !
வேள்விகளில் ஒரு உயிரை பலியிடுவதை விட , மாவினால் செய்யப்பட்ட மிருகத்தை ஆஹுதியாகக் கொடுப்பது சிறந்தது தானே என்று எண்ணுவீர்கள்..

“ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி” – யாரையும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது என்று விதித்த சாஸ்த்ரம் தான் வேள்விகளில் மிருக வதையை ஆமோதிக்கிறது என்பது ஜீரணிக்க சிரமமாயிருக்கலாம். ஒன்றுக்கொன்று முரணாகவும் தென்படும் ..

முதற்கண் வேதத்தில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றறிக !

சிற்சில யாகங்களில் ம்ருகங்களை பலியிட வேண்டும் என்று சொல்லியிருப்பது , அஹிம்ஸைக்கு விரோதமாகாது ! யாகத்தினுடைய தூய்மைக்கும் பங்கமாகாது !

ஒரு மருத்துவன் , நமக்கு அறுவை சிகித்ஸை செய்கிறான்.. வாளால் அறுத்துச் சுடுகிறான் .. நிச்சயம் அது வெளிப்பார்வைக்கு ஹிம்ஸையாகவே புலனாகும். ஆனால் நோயாளன் ( patient ) அம் மருத்துவனிடம் ஆராத காதலோடு தானே இருப்பன். ( அதாவது இந்த ஆபரேஷன் நம் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்று தெளிந்து , மருத்துவரிடம் அன்பாகவே இருப்பான் )

நிகழ்காலத்தில் , ஹிம்ஸையாகக் கண்ணில் பட்டாலும் , எதிர்காலத்திற்கு அது நன்மையே ஆகும் !

அதே போல் , வேள்விகளில் பலியிடப்படுகிற பசுக்களின் ( மிருகங்களின் ) ஆன்மாக்கள் ஸுவர்க்கம் முதலான உயர்ந்த லோகங்களை நிச்சயமாகப் பெறுகின்றமையால் , வேள்வியில் பலியிடுதல் என்கிற முறை தவறாகாது !

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்விஷயம் ஈண்டு விசாரிக்கப்பட்டு , ஆடு குதிரை போன்ற மிருகங்களை யாகங்களில் உபயோகிப்பது தவறில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது !

” அசுத்தமிதி சேத் ந சப்தாத் ” ( ஸூத்ரம் 3.1.25 ) என்கிற ப்ரம்ம ஸூத்திரத்தின் (எம்பெருமானார் ) உரையினில் மேற்கண்ட விஷயம் சேவிக்கலாகும் .

நம் சுயநலத்திற்காக ஒரு ப்ராணியை ஹிம்ஸிப்பது குற்றமாகும் ! அந்த ப்ராணியின் ஆன்ம நன்மையை உத்தேசித்துச் செய்யப்படும் காரியம் எங்ஙனம் தவறாகும் ?!

” ஹிரண்ய சரீர ஊர்த்வ : ஸ்வர்க்கம் லோகமேதி ” ( யாகத்தில் பலியிடப்பட்ட ம்ருகம் தங்க மயமான சரீரத்துடன், ஸ்வர்க்கத்திற்குச் சென்று அங்கு பல போகங்களை அனுபவிக்கிறது ) என்கிறது சாஸ்த்ரமும் ..

“யத்ரயந்தி ஸுக்ருதோ நாபிதுஷ்க்ருத: தத்ர த்வாதேவ : ஸவிதா ததாது ” என்று எது செல்வதற்கு அரிதான இடமோ , அங்கு ம்ருகமே உன்னை பகவானே அழைத்துச் செல்லட்டும் என்று வேள்வியில் பலியிடப்படும் ம்ருகத்தைப் பார்த்து வேதம் பேசுகிறது !

எனவே தான் பிரமன் உரைத்த தீர்ப்பு சாத்திரங்களுக்கு முரணானதென்று ப்ருஹஸ்பதி கோபமடைந்தார் ###

***

ஆயிரம் அச்வமேதங்கள்.. ஆம் செய்தே ஆக வேண்டும்.. பதவி சுகம் கண்டு விட்டோமே ! அதுவும் ப்ரம்ம பதவி என்றால் லேசா..

இன்னொன்று ! பத்நீ இல்லாமல் யாகம் செய்வதா ?? மனைவிக்கு யாக வேளையில் அன்றோ பத்நீ என்று பெயர் !

இன்ன பிற தேவிகள் இருந்தாலும் ப்ரதான மஹிஷீ ஸரஸ்வதி தானே !
சரி பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தான்..
பிரச்சினைகள் அணிவகுத்து நெருக்க / நெரிக்க , பிரமன் பூவுலகிற்கு வந்து , திரிவேணீ ஸங்கமத்தில் மற்றும் நைமிசாரணியத்தில் வேள்விகள் செய்ய ஆயத்தமாயினன்..

தவறான தீர்ப்பு சொன்ன பழி – பாபம் நீங்க மட்டுமல்ல.. இந்த யாகங்களின் வழியாக தன் தமப்பன் ..தன்னொப்பாரில்லப்பனையும் தரிசித்து விட ஆசைப்பட்டான் அயன் !

” சக்ஷுஷாம் அவிஷயமான ” ( கண்களால் காண முடியாத தத்வமன்றோ இறை தத்வம் )

“என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை ” கண்டே தீருவது என்று தயாரானான்.

முடியுமா ?? என்றால் முடியும் என்பதே விடை !

ஆம்.. நம் முயற்சியினால் ஆகா !! ஆனால் அவன் அருளினால் அவனைக் காண முடியும் !!

தீர்மானமாக நம்பினான் பிரமன்..

அப்போது ஒரு அசரீரி ( வார்த்தை ) கேட்டது..

உருவமில்லா அவ்வொலி சொன்னதென்ன !!

காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 3)

தேவகுரு ப்ருஹஸ்பதி !!

” ப்ருஹதீ வாக் தஸ்யா : பதி :” (ப்ருஹதீ = வாக்குகள் ) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார் . ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர் !

” புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் ” ( கீதை 10-24 )

( புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! ( ப்ருஹதாம் பதி : கிராம் பதிர்ஹ்யஸௌ – தாத்பர்ய சந்த்ரிகையில் தேசிகன் ) என்றான் கண்ணனும் !

“புரோஹிதர்” என்றால் நம் நன்மையை ( நமக்கும் ) முன்னாலேயே உத்தேசித்துச் செயல்படுபவர் என்றே பொருள் !

ஆம் ! தேவர்களின் நன்மைக்காக பாடுபடுபவர் புரோஹிதரான ப்ருஹஸ்பதி !

அவர் தான் தேவர்களையும் , ரிஷிகளையும் மற்றும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு ஸத்யலோகம் வந்துள்ளார் !

அனைவரும் ஒரு பிரச்சினையையும் சுமந்து வந்துள்ளது சேவகன் மூலமாக பிரமனுக்கு உணர்த்தப்பட்டது !

என்ன கலகம் என்று நான்முகன் கேட்கவும் சேவகன் சொன்னது இது தான் !

சிற்சில யாகங்களில் , ப்ராணிகளைப் பலியிட வேண்டிய கட்டளைகள் உண்டு .
ஆடு, வெள்ளாடு , குதிரை இவற்றின் வபை ( சதை ) மற்றும் மாம்ஸங்களைக் கொண்டு ( சில வகை ) யாகங்கள் செய்யப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன !

யாகத்திற்காக அழைத்து வரப்படும் அந்தப் பிராணிகளை ” யாகப்பசு ” என்றே அழைப்பர்கள் ! ( பசு என்றால் பசு மாடு என்று பொருளல்ல ! மிருகம் என்றே பொருள் )

உதாரணமாக , கல்ப சூத்திரங்களின் படி அச்வமேத யாகத்தில் , மூன்று தினங்கள் முக்யமானவையாம் .

சதுஷ்டோமம், உக்த்யம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் அம் மூன்று நாள்களில் விதிப்படிச் செய்யப்பட வேண்டும் !

மேலும் ஜ்யோதிஷ்டோமம் முதலான பற்பல வேள்விகளைச் செய்ய வேண்டும்.

அவற்றில் குதிரையின் உள் அவயவத்தை ( உடல் உள் உறுப்புகள் ) ஆஹுதியாக வேள்வியில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் உண்டு !

பிரச்சினை இது தான் !!

ரிஷி முனிவர்களில் சிலர் , அவ்வகை வேள்விகளில் உண்மையான ம்ருகத்தை பலியிடத் தேவையில்லை ; அதற்கு பதில் பிஷ்ட பசு ( = மாவினால் ஒரு ம்ருகத்தை ) ( ஆடு, குதிரை ) செய்து அதனையே வேள்விகளில் சேர்க்கலாம் என்றனர் !

தேவர்களோ , இல்லையில்லை உண்மையான ம்ருகத்தினைக் கொண்டே யாகங்கள் நிறைவேற்றப் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் !

இதுவே சண்டைக்கான காரணம் ! தற்சமயம் பிரமன் தலையில்(களில் ) விழுந்திருக்கிறது . தேவ குரு ப்ருஹஸ்பதியோ அக்கினிப் பிழம்பாகத் திகழ்கிறார் .. நியாயம் கேட்டு வந்திருக்கிறார் !

அவர் பார்வையே பிரமனை பயமுறுத்துகிறது !

பிரமன் தன்னுள் எண்ணலானான்.. வாக்குகளுக்குத் தலைவி ( வாக் தேவி – ஸரஸ்வதி ) சற்று முன்பு தான் கோபித்துக் கொண்டு வெளி நடப்பு செய்தாள் !

இப்போது வாக்குகளுக்குத் தலைவர் ( ப்ருஹஸ்பதி ) கோபத்தோடு வந்திருக்கிறார் ! தாயும் மனைவியும் ஒரே நேரத்தில் கடுங்கோபம் கொண்டால் ஒருவன் எப்படிக் கலங்கிப் போகிறானோ அப்படித் தவித்தான் பிரமன் ! கைகளைப் பிசைந்தான்..

சரி ..ப்ருஹஸ்பதி தான் கோபமாயிருக்கிறார் .. மற்ற ரிஷி முனிவர்கள் ?? அவர்களைப் பார்த்தால் ப்ருஹஸ்பதியின் கோபமே தேவலை போலும் !!

நிஜமான ம்ருகமா ? மாவினால் ஆன ம்ருகமா ?? இந்த நீயா நானாவில் நிலை குலைந்து போனான் அஜன் !

கடைசியில் , தேவர்கள் நம் சாதி தானே ! எனவே அவர்களையும் ப்ருஹஸ்பதியையும் பின்பு சமாளித்துக் கொள்ளலாம் என்றெண்ணினானோ என்னவோ ; மாவினால் ஆன பிஷ்ட பசுவினால் வேள்வி செய்வதே நலம் என்று தீர்ப்பளித்து விட்டான் !

” ரிஷி முனிவர்கள் , ” நாவலிட்டுழி தருகின்றோம் “தேவர் தம்” தலைகள் மீதே ” என்று சந்தோஷத்தால் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்..

தேவர்களோ பிரமனுக்குச் சாபம் கொடுக்க வேண்டி ஸபை கூட்டினர் !!

என்ன சாபம் ?!

விரைவில் ….
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 2)

 

ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது .. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் ( ஸரஸ்வதி ) பெயரைச் சொல்லாமல் , திருமகளே சிறந்தவள் என்று நான் சொன்னதால் அவள் கோபித்துக் கொண்டாள்.. அதனால் என்னை விட்டு அகன்றாள்..அது புரிகிறது .. ஆனால் தன்னாற்றின் ( ஸரஸ்வதி நதி ) கரையில் தவமியற்ற வேண்டிய காரணம் என்ன ??

கோபித்துக் கொண்டால் தவம் செய்ய வேண்டுமோ ?! தவத்திற்கு யாது காரணமாயிருக்கும் ? .. விடை தெரியாது தவித்தான் நாபி ஜன்மன் ( உந்தியில் உதித்தவன் – பிரமன் )

நீண்ட யோசனைக்குப் பிற்பாடு விடை கண்டுபிடித்தான் விரிஞ்சன் !

முன்பு ஸரஸ்வதி தன்னிடம் சொன்னது நினைவிற்கு வந்தது !

ஒரு முறை பிரமனும் ஸரஸ்வதியும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது , கங்கை நதியைப் பற்றின பேச்சு வரவும் , பிரமன் கங்கையைக் கொண்டாடவும் , நாமகள் முகம் வாடத் தொடங்கினாள் !

” எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினிலெல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையை ” நான்முகன் கொண்டாடுவது கண்டு வருத்தமே ஏற்பட்டது ஸரஸ்வதிக்கு !

( ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களையும் நொடிப்பொழுதில் கழுவ வல்ல / போக்க வல்ல பெருமையுடையது கங்கை – அந்நதியின் பெயர் சொன்னாலே நம் தீவினைகள் தொலந்து போகுமாம் )

கங்கையைக் கொண்டாடினாலும் கோபம் !

திருமகளைக் கொண்டாடினாலும் கோபம் !

ஸரஸ்வதி எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளும் குணமுடையவள் என்றெண்ண வேண்டாம் !

( பொதுவாகவே , பெரும்பாலும் பெண்கள் தன்னையொழிந்த ( தன்னைத் தவிர ) மற்ற பெண்களின் ஏற்றங்களை/பெருமைகளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் )

பரமன் நம்மை அநுக்ரஹிக்க , வரதனாய்க் கச்சியில் நின்றிட , ஸரஸ்வதியைக் கொண்டு ஆடும் ஆட்டம் இது !

இப்படித்தானே கைகேயியின் மனதை மாற்றித் தன் பெருமைகளை உலகறியும்படிச் செய்து கொண்டான்..

அர்ஜுனனுக்கு கலக்கத்தைத் தானே விளைவித்ததும் அவனுக்கு கீதோபதேசம் செய்வதற்காகத் தானே !

ஆகவே இதுவும் நம் நன்மையின் பொருட்டே !

ஸரஸ்வதியின் வருத்தத்திற்குக் காரணம் இது தான் !

வடக்கே பதரீகாச்ரமத்துக்கும் மேலே நாம் ( ஸரஸ்வதி நதி ) பெருகி ஓடுகின்றோம் ! மற்ற நதிகளுக்கு இல்லாத பெருமை நமக்கு உண்டு .. ஆம் ! நம் நீரோட்டம் சிலவிடங்களில் கண்ணுக்குப் புலனாகும் ! சிலவிடங்களில் கண்களுக்குத் தெரியாமல் ” “அந்தர்வாஹினி ” யாய்ச் ( வெளியில் தெரியாமல் பூமிக்கடியில் வெள்ளமிடுதல் ) செல்லும் !

( க்வசிதுபலக்ஷிதா க்வசித் அபங்குர கூட கதி : – தயா சதகம் – ஸ்ரீ தேசிகன் )

இப்பெருமைகளெல்லாம் கங்கை முதலான நதிகளுக்கு உண்டோ ??

ஆனாலும் என் கணவர் உள்பட அனைவரும் கங்கை நதியின் பெயரினைக் கேட்ட மாத்திரத்தில் தலைகளுக்கு மேலே கரம் குவிப்பதும் , ஜய ஜய என்று கோஷமிடுவதும் .. இப்பெருமைகளொன்றும் தனக்கில்லையே என்று மிகத் தளர்ந்தாள் நான்முகன் கிழத்தி !

( வேதங்களிலும் மஹாபாரதம் போன்ற இதிஹாஸ புராணங்களிலும் போற்றப் பட்டிருக்கும் புண்ணிய நதி தான் ஸரஸ்வதி ) அவளே காஞ்சியில் வேகவதி ஆனாள் என்பது மேலே கதையில் வரும் ! )

வாசகர்களுக்கு இன்னொரு ஸ்வாரஸ்யமான செய்தி !

இந்தியாவின் முதல் நாகரிக சமுதாயமான ” சிந்து சமவெளி நாகரிகம் ” என்பது உண்மையில் ஸரஸ்வதி நதி நாகரிகமே !!!!

ஆம் !! ஸரஸ்வதி( நதி )யின் கரையில் உருவான இந்த நாகரிகம் தான் , கொஞ்சம் கொஞ்சமாக கங்கை நதிக் கரையை நோக்கிச் சென்றதாக ஸமீபத்திய புவியியல் ஆய்வுகள் சொல்கின்றன !!

அப்படியெனின் ஸரஸ்வதியின் கோபம் நியாயம் தானே .. நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால் , தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !

பிரம்மா பொறுமையாக பதிலளித்தார் !

## வாசகர்களுக்கு ..

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள் இங்கே கொடுக்கப்பட்டது ஒரு கூடுதல் தகவல் மட்டுமே !!

(நாகரிகமே தன்னிடமிருந்து தான் கங்கைக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது என்றால் , தான் கங்கையை விடச் சிறந்தவள் தானே என்பது அவள் முடிவு !)

ஸரஸ்வதி கோபித்துக் கொண்ட தருணத்தில் இந்த நாகரிகங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டு ஆய்வுகளும் ஸரஸ்வதி நதிக்குப் பெருமை சொல்வது போல் உள்ளதை , ஒரு சுவைக்காகவே இவ்விடத்தில் சேர்த்துள்ளேன் !

மொத்தத்தில் தான் கோபித்துக் கொண்ட அன்றும் சரி ; நாகரிகத்தை ( கங்கைக் கரைக்கு ) வழங்கிய பிற்காலத்திலும் சரி ; தானே உயர்ந்தவள் என்று ஸரஸ்வதி கருத வாய்ப்புண்டு என்பதனைக் காட்டவே இப்பகுதி சேர்க்கப்பட்டது.

சரித்திரம் நிகழும் காலத்தில் நாகரிகங்கள் ஏற்பட்டிருந்தனவா என்கிற குழப்பங்களைத் தவிர்க்கவும். ################

வாணீ … கோபப்படாதே ! என் கையில், சதுப்புயன் ( சதுர்புஜன் – எம்பெருமான் ) தாளில், சங்கரன் சடையில் என்று கங்கைக்கு எங்கள் மூவராலும் பெருமை !

முக்யமாக ” ஹரி பாதோதகம் ” எம்பெருமானின் ஸ்ரீபாத தீர்த்தம் என்கிற பெருமை கங்கைக்கே உரித்தானது .. இவ்வாறு பிரமன் சொல்லவும் அப்போது ஒன்றும் பேசாதிருந்த கலை மகள் , இப்பொழுது கோபித்துக் கொண்டு சென்று , தவமியற்றுவது கங்கையை விடத் தான் சிறந்தவள் என்கிற ஏற்றம் பெறவே என்பதனை உணர்ந்தான் ஸுரஜ்யேஷ்டன் ( தேவர்களில் பெரியவன் – பிரமன் )

ஸரஸ்வதியை எண்ணியவாறு பெருமூச்செறிந்தான் !

அப்பொழுது தான் தேவகுரு ப்ருஹஸ்பதி பலரையும் கூட்டிக் கொண்டு, தன்னைச் சந்திக்க வந்திருப்பதாக அயனுக்கு செய்தி சொல்லப்பட்டது !

ப்ருஹஸ்பதி வந்திருப்பதை நான்முகனிடம் சொல்ல வந்த சேவகன் , அவருடைய எண்காதுகளில் ( எட்டுக் காதுகளில் ) ஒன்றைக் கடித்தான் ( ரஹஸ்யமாகப் பேசினான் )

ப்ரபோ ! ப்ருஹஸ்பதியும் அவருடன் வந்திருப்பவர்களும் ( தேவர்கள் – ருஷி, முனிவர்கள் ) அளவிற்கு மீறிய கோபத்துடன் தங்களுக்குள்ளே சண்டையிட்டபடியே தங்களைக் காண வந்துள்ளனர் !

சேவகன் இப்படிச் சொன்னதும் , தன் நாடியடங்கிட நின்றான் நான்முகன் !

நடுநடுங்கின குரலோடே சேவகனை அவர்களுக்குள் என்ன தான் சிக்கல் என்று கேட்டான் !

சேவகன் சொன்ன பதில் தான் என்ன ?

விரைவில் ..
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 1)

ஸத்ய லோகம் !

நான்முகனின் உறைவிடம். கலைமகளின் கனிவான பார்வை நாற்புறமும் விழுந்திருந்தது !

ஒரு புறம் தேவ மாதர்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். பாட வல்லவர்களும் பரவலாகப் பாடிக் கொண்டிருந்தனர்.

வெண் தாமரையினில் , கணவனும் மனைவியுமாகப் பிரமனும் ஸரஸ்வதியும் கொலு வீற்றிருந்தனர்.

பிரமன் .. நான்முகக் கடவுள் என்று போற்றப்படுமவன் ! ஹிரண்ய கர்ப்பன் என்று வேத வேதாந்தங்களாலே சொல்லப்படுகின்றவன்.. திருமால் உந்தியில் இருந்து தோன்றிய பெருமைக்குரியவன்.. நாராயணனிடமிருந்து எழுதாக் கிளவியான வேதங்களை அதிகரித்தவன் ..

அறிவிற் சிறந்தவனாகக் கொண்டாடப் படுகின்றவன்..ஆம்..நான்கு சிரங்கள் ..வேத வேதாங்க வேதாந்தங்களில் தேர்ச்சி.. எனவே அறிவிற்குக் கேட்க வேண்டுமா ?!

போதாக்குறைக்கு கல்விக் கடவுளாக அறியப்படுகிற ஸரஸ்வதியைக் கரம் பிடித்த பெருமை வேறு அ(வ)(ய)னுக்கு ! அவனுக்கு /அயனுக்கு !

“நிறை நான்முகன்” ( (இறைவனாலே அருளப்பட்ட) ஜ்ஞாந சக்திகள் நிறைந்தவன் ) என்று ஆழ்வாரும் பாடுகின்றாரே !

ஆம் ! திசைமுகனுக்கு எத்திசையிலும் ஏற்றம் தான்.. எனவே தான் தேவர்கள் தங்களுக்கு ஸந்தேஹமோ , கஷ்டமோ ஏற்படும் போதெல்லாம் , முதலில் பிரமனை நாடுவர்கள்..

அவ்வப்பொழுது தேவர்கள் , தம் துயர் தீர உருத்திரனை நாடுவதும் உண்டு ! அச்சமயங்களில் முக்கண்ணனார் அத்தேவர்களை பிரமனிடமே அழைத்துச் செல்வராம் !

தான் தீர்க்கக் கூடிய பிரச்சினையெனின் பிரமன் தயங்காது உதவிடுவர் ! தன்னால் முடியாது ; எம்பெருமான் தான் ஒரே தீர்வு என்று இருப்பின் , அத்தேவர்களைத் தன் தலைமையில் ” பாற்கடலுள் பையத்துயின்ற பரமனிடம் ” அழைத்துச் செல்வராம்..

ஆக தேவர்கள் பரமசிவனை அண்டியிருப்பர்கள்.. பரமசிவன் தன் தமப்பனான தாமரை மேல் அயனை நாடியிருப்பன்.. பிரமனோ தன் தமப்பனான தாமரையுந்தித் தனிப்பெரும் நாயகனை அடிபணிந்திருப்பன்..

பேரருளாளனைப் பணிந்து , ( பிற ) தேவர் துயர் தீர்ப்பவனாதலால் , மேலுலகத்தில் என்றுமே பிரமனுக்கும் அவர் கூறும் உபதேசங்களுக்கும் தனி மதிப்பு உண்டு !

சத்திய லோகத்தில் வாழ்பவராதலால் சத்திய வாக்கே சொல்லுவர் என்று பிரமனுக்குப் பிற தேவர்கள் புகழாரம் சூட்டுவர்கள் !

நான்முகனுக்கும் தேவர்கள் தன்னை மதிப்பதில் அலாதி இன்பம் !

ஒரு சமயம் , தேவர்களுக்குள்ளே ஒரு சர்ச்சை !! பெண்களுக்குள்ளே சிறந்தவர் யார் என்பது தான் அது ! பலரிடம் கேட்டுப் பார்த்தும் கிடைத்த பதில்கள் த்ருப்திகரமாக இல்லாமையால் , தேவர்கள் அனைவரும் பிரமனை நாடினர் !

தன்னை மதித்து வானுலகினர் வந்தமை கண்டு , வழக்கம் போல் பிரமனுக்குப் பூரிப்பு !!

பெண்களிற் சிறந்தவர் யார் என்பது தானே கேள்வி ?! பட்டென்று பதில் சொன்னார் பிரமன்..

ஸரஸ்வதி என்று தன் பெயரே சொல்லுவர் என்று நம்பிக் காத்திருந்தனர் கலைவாணியும் அவளுக்குத் தொண்டு புரியும் சேடிப் பெண்களும்..

மனைவி பெயர் சொல்லப் பிரமனுக்கும் ஆசை தான்.. ஆனால் .. பொய் சொல்லுவதற்காகவா , வேதங்களை, தான் கற்றது !

மனைவியின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தவாறே அவர் சொன்ன பதில் நாமங்கையை ( ஸரஸ்வதியை ) நடுங்கச் செய்தது !;

“பெருந்தேவியான ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ” இது தான் , பெண்களில் சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு ஸரோஜாஸநன் ( தாமரை மலரை ஆஸநமாகக் கொண்டவன் ) கூறிய பதில் !

பின்விளைவு அறியாதவனாய் உண்மையே உரைத்திட்டான்..அதற்கான பரிசும் காத்திருந்தது !

” தெள்ளுகலைத் தமிழ் வாணீ ” கோபத்தால் கண் சிவந்தவளாய் , நெருப்பை உமிழுமாப் போலே பிரமனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பணிப்பெண்களை சற்றே அவள் பார்க்கவும் , அவர்களும் கலைவாணீ தன் ஜாகையை மாற்றப் போகின்றாள் என்பதனைப் புரிந்து கொண்டவர்களாய் அவள் உடைமைகளை ( பயணத்திற்காக ) எடுத்து வைக்கத் தொடங்கினார்கள்..

செய்வதறியாது நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் ப்ரம்மா !

அதனாலும் அவர் ” திசைமுகன் ” என்று அழைக்கப்பட்டார் போலும் !

ஸரஸ்வதி கிளம்புவதற்குத் தயாரானாள் ..
“வருகிறேன் ” – இவ்வார்த்தை மட்டுமே அவள் அச்சமயம் உதிர்த்தது.. எங்கு.. ஏன்.. எதையும் சொல்வதற்கு அவளும் தயாரில்லை.. கேட்கும் தைரியமும் நான்முகனுக்கில்லை !

பிரச்சினை என்றால் , மனிதர்களான நாம் தலையைச் சொறிவது உண்டு. நான்முகனுக்கு அதிலும் பிரச்சினையே !

ஆம் ! எந்தத் தலையைச் சொறிவது என்கிற பிரச்சினை ! ஐயோ பாவம் ..தடுமாற்றத்திலிருந்தான் பிரமன் .

நாமகள் தன் கணவனைத் துறந்தாள்..( தன் பெயரினில் ஓடும் ) ஸரஸ்வதி நதிக்கரையில் தவமியற்ற அமர்ந்தாள்..

பிரமன் வேதனையடைந்தாலும், திருமகளே பெண்களிற் சிறந்தவள் என்கிற உண்மையுரைத்தோமே என்று மகிழ்ந்திருந்தார் !

அம்மகிழ்ச்சியும் நீடித்திருக்கவில்லை ! பிறிதோர் பிரச்சினையுடன் தேவகுரு ( ப்ருஹஸ்பதி ) முதலானோர் பிரமனை முற்றுகையிட்டிருந்தனர் ..

என்ன பிரச்சினை அது ?!

அறியக் காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் : பெருமைகளும் வழிமுறையும்!

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஐந்து வேளைகள்/செயல்கள்:

அபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம் செய்தல் முதலியன.

உபாதானம் – திருவாராதனத்திற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்தல்

இஜ்ஜா (யாகம்) – சேகரித்த பொருட்களைக் கொண்டு திருவாராதனம் செய்தல் – பொதுவாக மதிய நேரத்தில் செய்யப்படுவது

ஸ்வாத்யாயம் – அவரவருடைய வர்ணத்துக்குத் தகுந்தபடி வேதம், வேதாந்தம், திவ்ய ப்ரபந்தம் முதலியவற்றைக் கற்றல், கற்பித்தல்

யோகம் – ஆத்மாவை பரமாத்மாவில் ஒன்றவிடும் த்யானம் மற்றும் ஓய்வெடுத்தல்
இங்கே, இஜ்ஜா என்பது தேவ பூஜையைக் குறிக்கும். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் க்ருஹத்தில் இருக்கும் எம்பெருமான்களுக்கு திருவாராதனம் செய்தல் வேண்டும். திருவாராதனத்துடன் பகவத் விஷயத்தைக் கற்றல், பகிர்தல் மற்றும் த்யானித்தலும் செய்வர்கள்.

பெரியவாச்சான் பிள்ளை பெருமாள் திருமொழி 1.7 “மறம் திகழும்” பாசுர வ்யாக்யானத்தில், “இரு முப்பொழுது” என்பதற்கு “பஞ்ச காலங்கள்”

முதலில் தயார் செய்ய வேண்டியது

நீராட்டம் (தலை உள்பட)

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ர தாரணம் – 12 திருமண் ஸ்ரீசூர்ணம் அணிதல் (குருபரம்பரை ச்லோகம், ஆசார்யர்கள் தனியன்கள், பெருமாள் மற்றும் தாயாரின் த்வாதஸ நாம மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு செய்தல்).

ஸந்த்யா வந்தனம்.
மாத்யாந்ஹிகம் (வேளையைப் பொறுத்து) – பொதுவாக திருவாராதனம் மதிய நேரத்திலேயே செய்யப்பட வேண்டும். ஆனால் வேலைக்குப் போகும் பலருக்கும் இது சாத்தியப்படாது. நாம் முடிந்தவரை சாஸ்த்ரத்தின் படி நடக்க முயல வேண்டும், முடியாத நேரத்தில் எம்பெருமானிடம் அபராத க்ஷாமணம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

பஞ்ச பாத்ரம் (வட்டில்கள்), தூபம், தீபம், திருவிளக்கு, புஷ்பம், தீர்த்தம், தீர்த்த பரிமளம் (ஏலம்/க்ராம்பு பொடி) போன்றவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.

ஆசார்யன் ஸ்ரீ பாத தீர்த்தம் – ஆசார்யனின் பாதுகைகளையோ திருவடிகளில் வைத்து எடுத்த வஸ்த்ரத்தையோ திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொள்ளவும்.

குரு பரம்பரா மந்த்ரம் (அஸ்மத் குருப்யோ நம:, …) மற்றும் ஆசார்யர்களின் தனியன்களைச் சொல்லிக் கொண்டு தீர்த்தத்தைப் பாதுகையிலோ திருவடி வஸ்த்ரத்திலோ சேர்க்கவும். பின்பு தான் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவும். இது திருவாராதனத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

க்ருஹத்தில் இருப்பவர்கள், பெண்கள் உட்பட அனைவரும் திருவாராதனத்தில் பங்கு கொள்ளலாம் – புஷ்பம் தொடுத்தல், இடத்தைச் சுத்தம் செய்தல், போகம் (தளிகை) தயாரித்தல் முதலான கைங்கர்யத்தில் ஈடு படலாம்.

முறை

வட்டில்களும் அதன் உபயோகங்களும்

1 – அர்க்க்யம் – எம்பெருமானின் திருக்கை விளக்கும் நீர்
2 – பாத்யம் – எம்பெருமானின் திருவடி விளக்கும் நீர்
3 – ஆசமனீயம் – எம்பெருமான் உட்கொள்ளும் நீர்
4 – கண்டூஷம் (எம்பெருமான் திருவாய் கொப்பளிக்கும் நீர்), ஸ்நாநீயம், மதுவர்க்கம், பாநீயம், கண்டூஷம் – முறையே ஒவ்வொரு ஆஸனத்துக்கும்
5 – சுத்த உதகம் – எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வஸ்துக்களை சுத்தி செய்ய உதவும் நீர்
6 – படிக்கம் – எம்பெருமானுக்கு சமர்ப்பித்து புனிதமான நீரைச் சேகரிக்கும் பாத்திரம்
7 – ஆசார்யனுக்குச் சமர்ப்பிக்கும் தீர்த்தம்
8 – திருக்காவேரி – திருவாராதனத்துக்கு உபயோகப்படுத்த வேண்டிய நீர் இருக்கும் பாத்திரம்
ஒருவர் திருவாராதனம் செய்யும்போது தம்முடைய ஆசார்யனே திருவாராதனம் செய்வதாகவும், தாம் தம்முடைய ஆசார்யனின் கரணமாக இருந்து எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்கிறோம் என்றும் எப்போதும் எண்ண வேண்டும்.

நம் பெரியோர்கள் எம்பெருமானுக்கும் பிராட்டிகளுக்கும் திருவாராதனம் செய்வதற்குமுன் தன்னுடைய ஆசார்யன், மாமுனிகள், எம்பெருமானார், பராங்குச பரகாலாதி ஆழ்வார்கள், விஷ்வக்ஸேனர் மற்றும் திருவநந்தாழ்வான், கருடாழ்வார், ஸுதர்சனாழ்வார், பாஞ்சஜந்யாழ்வார் ஆகிய நித்யஸூரிகளுக்கும் திருவாராதனம் செய்யவேண்டும் என்று பணித்துள்ளார்கள். ஆசார்யன் திருவாராதனத்துக்கு தனி வட்டில் வைத்துக் கொள்ள வேன்டும். போகம், புஷ்பம், சந்தனம் முதலியவை முதலில் எம்பெருமானுக்கு சமர்ப்பித்து அவன் சேஷத்தை விஷ்வக்ஸேனர் மற்றும் நித்யஸூரிகள், நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இறுதியில் தன்னுடைய ஆசார்யனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பின்வரும் பகுதியில் திருவாராதன முறையைச் சுருக்கமாகக் காணலாம். இது முழுமையானது அல்ல. மேலும் திவ்ய தேசம், திருமாளிகை, குடும்பம் போன்றதற்கு ஏற்ப மாறுபாடும் இருக்கலாம். பெரியோர்களிடம் கேட்டு அறியவும்.

திருவாராதனத்துக்கு அதிகாரம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முறையைச் சுருக்கமாக மேலே காண்போம்.

“துளஸ்யம்ருத ஜந்மாஸி” ச்லோகத்தைச் சொல்லி வணங்கி, திருத்துழாயைப் பறிக்கவும்

பொதுத் தனியன்கள், வையம் தகளியா, அன்பே தகளியா, திருக்கண்டேன் பாசுரங்கள் சொல்லிக்கொண்டு திருவிளக்கு ஏற்றவும்

பஞ்ச பாத்ரங்களை வரிசைப்படி வைக்கவும்.

திருக்காவேரியில் தீர்த்தம் சேர்க்கவும்.

திருக்காவேரியிலிருந்து தீர்த்தத்தை எடுத்து திருத்துழாயைக் கையில் த்வயத்தின் உத்தர வாக்யத்தைச் (ஸ்ரீமதே நாராயணாய நம:) சொல்லிக்கொண்டு எல்லா வஸ்துக்களிலும் ப்ரோக்ஷிக்கவும்.

வட்டில்களில் தீர்த்தத்தைச் சேர்க்கவும்.

“ஜிதந்தே” முதல் இரண்டு ஸ்தோத்ரங்களும், “கௌசல்யா ஸுப்ரஜா “, “கூர்மாதீந் திவ்ய லோகாந்” ச்லோகங்களும், “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய“, “மாரி மலை முழைஞ்சில்“, “அன்று இவ்வுலகம் அளந்தாய்” மற்றும் “அங்கண்மா ஞாலத்து அரசர்” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு, கையால் ஓசைப் படுத்தி விட்டு, கோயில் ஆழ்வார் திருக்காப்பு  நீக்கவும் (கதவைத் திறக்கவும்).

ஸாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்கவும்.

ஒவ்வொரு ஆஸனத்திலும், முதலில், அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகளை திருக்காவேரியில் இருந்து வட்டில்களில் சேர்த்து ஸங்கல்ப்பிக்கவும் (மனதால் இருப்பதாக நினைக்கவும்). அர்க்க்ய பாத்ய ஆசமனீயம் முதலியவைகள் ஸமர்ப்பித்தபின் திருவொத்துவாடை ஸமர்ப்பிக்கவும் (ஒரு வஸ்த்ரத்தால் ஈரத்தைத் துடைத்தல் செய்யவும்).

மந்த்ராஸனம் – எம்பெருமானை திருவாராதனம் ஏற்றுக்கொள்ள அழைத்தல்

“உடுத்துக் களைந்த” பாசுரத்தைச் சொல்லிக் கொண்டு முந்தைய நாள் சூட்டிய மலர்களைக் களையவும்.

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும். ஓம் அர்க்ஹ்யம் ஸமர்ப்பயாமி, ஓம் பாத்யம் ஸமர்ப்பயாமி, ஓம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி என்றோ திருக்கைகள் விளக்கியருள வேண்டும், திருவடிகள் விளக்கியருள வேண்டும், ஆசமனம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸமர்ப்பிக்கவும்.

108 திவ்ய தேச எம்பெருமான்களை திருவாராதனம் கண்டருள அழைக்கவும்.
எம்பெருமானிடம் இந்த திருவாராதனம் தன்னுடைய ஆசார்யன் செய்வதாகவும், தான் அவன் கரணங்களாக இருந்து செய்வதாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்நாநாஸனம் – எம்பெருமானை நீராட்டுதல்

எம்பெருமான்களை திருமஞ்சன வேதிகையில் எழுந்தருளப்பண்ணவும்
அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

ஓம் ஸ்நாநீயம் ஸமர்ப்பயாமி என்றோ ஸ்நாநீயம் கண்டருள வேண்டும் என்றோ கூறிக்கொண்டு ஸ்நாநீயம் சமர்ப்பிக்கவும்.

புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ஸ்ரீ ஸுக்தம், பூ ஸூக்தம், நீளா ஸூக்தம் (நேரத்திற்கு ஏற்றார் போல்) சேவித்துக் கொண்டு திருமஞ்சனம் செய்யவும். “வெண்ணெய் அளைந்த குணுங்கும்” பதிகமும் திருமஞ்சன கால பாசுரங்களையும் சேவித்து முடிக்கவும்.

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களையும் தூபம், தீபம், பால், பழங்கள் போன்றவற்றையும் சமர்ப்பிக்கவும்.

வட்டில்களில் இருக்கும் தீர்த்தத்தை படிக்கத்தில் சேர்க்கவும்

அலங்காராஸனம் – எம்பெருமானை அலங்கரித்தல்

எம்பெருமான்களை ஆஸ்தானத்தில் எழுந்தருளப்பண்ணவும்
அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

சாத்துப்படி (சந்தனம்) மற்றும் புஷ்பம் சமர்ப்பிக்கவும் – “கந்தத்வாராம் துராதர்ஷாம்” ச்லோகத்தையும் “பூசும் சாந்து என் நெஞ்சமே” பாசுரத்தையும் விண்ணப்பிக்கவும். குறிப்பு: பொதுவாக சாளக்ராம எம்பெருமான்களுக்கு திருமண் காப்பு சாற்றுவதில்லை, சந்தனக்காப்பு சாற்றுவதே வழக்கம்.
“தூர்வஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தூபம் சமர்ப்பிக்கவும், “உத் தீப்யஸ்ய” ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டு தீபம் சமர்ப்பிக்கவும்.

மந்த்ர புஷ்பம், வேதாரம்பம்.

த்வாதஸ நாம அர்ச்சனை.

திவ்ய ப்ரபந்தம் சேவித்தல்

“ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” தொடக்கமான பொது தனியன்கள்.
திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, அமலனாதிபிரான், ஸ்தலப் பாசுரம் (நாம் பிறந்த மற்றும் இருக்கும் திவ்ய தேசப் பாசுரம்), கண்ணிநுண் சிறுத்தாம்பு, கோயில் திருவாய்மொழி, இராமானுச நூற்றந்தாதி, உபதேச ரத்தின மாலை, முதலியன.

குறிப்புகள்:

இருக்கும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேவிக்கலாம்

இராமானுச நூற்றந்தாதி ப்ரபந்ந காயத்ரி/ஸாவித்ரி என்று கூறப்படுகிறது –

மாமுனிகள் எப்படி ப்ராஹ்மணன் தினமும் காயத்ரி மந்திரத்தைச் சொல்லுகிறானோ அது போல ப்ரபந்நன் இத்தை தினமும் அநுஸந்திக்க வேண்டும் என்கிறார்.

4000 திவ்ய ப்ரபந்த பாசுரங்களையும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் சேவிக்கும் வழக்கமும் உள்ளது.

இந்நேரத்தில் போகம் (தளிகை) தயார் செய்யலாம். எம்பெருமானின் தளிகைக்குத் தனியாக பாத்திரங்கள் வைத்துக் கொள்ளவும். மேலும், தளிகை சமைத்த பாத்திரத்திலேயே வைத்து எம்பெருமானுக்குக் கண்டருளப் பண்ணக் கூடாது. வேறு பாத்திரங்களில் மாற்றியே கண்டருளப் பண்ண வேண்டும். இந்தப் பாத்திரங்களை நாம் உபயோகப்படுத்தாமல் எம்பெருமானுக்கு என்றே வைத்துக் கொள்ள வேண்டும்.

போஜ்யாஸனம் – தளிகை சமர்ப்பித்தல்

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

போகத்தை எம்பெருமான் முன்பு வைக்கவும்.

போகத்தின் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷித்து, திருத்துழாய் சேர்க்கவும்.

கூடாரை வெல்லும் சீர், நாறு நறும்பொழில், உலகமுண்ட பெருவாயா பாசுரங்களையும் யா ப்ரீதிர் விதுரார்பிதே ச்லோகத்தையும் சொல்லிக் கொண்டு எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப் பண்ணவும்.

எம்பெருமானுக்கு சுருளமுது (வெற்றிலை பாக்கு), சாத்துப்படி (சந்தனம்) சமர்ப்பிக்கவும்.

எம்பெருமானின் ப்ரசாதத்தை ஆழ்வார் ஆசார்யர்களுக்குக் கண்டருளப் பண்ணவும்.

இப்போது போகம் ப்ரசாதமாகிவிட்டது – இவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிடவும்.

புநர் மந்த்ராஸனம் – மங்களாசாஸனம்/சாற்றுமுறை

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

“தத் விஷ்ணோர் பரமம் பதம்…” சொல்லிக் கொண்டு ஆரத்தி சமர்ப்பிக்கவும்.
கோயில், திருமலை, பெருமாள் கோயில், திருநாராயணபுரம் எம்பெருமான்கள், ஜகந்நாதன், பெருமாள் (ஸ்ரீ ராமன்), பார்த்தஸாரதி எம்பெருமான்கள், ஆண்டாள், நம்மாழ்வார், கலியன், எம்பெருமானார், மணவாள மாமுனிகள், ஸர்வ ஆசார்யர்களுக்கும் மங்களம் ஸ்தோத்ரங்களைச் சேவிக்கவும்.

சாற்றுமுறை பாசுரங்கள், திருப்பல்லாண்டு பாசுரம், வாழி திருநாமங்கள் ஆகியவற்றைச் சேவிக்கவும்.

திருவாராதனம் செய்பவர், தீர்த்தம் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.

ஸ்ரீ பாத தீர்த்தத்தை மற்றவர்களுக்கு வழங்கவும்.

திருவாராதனத்தின் போது பெருமாள் திருவடிகளில் சேர்த்த திருத்துழாயைத் தானும் ஸ்வீகரித்துக் கொண்டு மற்றவர்களுக்கும் வழங்கவும்.

ஒவ்வொரு நாளும், அந்நாளின் திருநக்ஷத்ரத்தில் அவதரித்த ஆழ்வார் ஆசார்யர்களின் வாழி திருநாமத்தைச் சேவிக்கவும்.

பர்யங்காஸனம் – எம்பெருமானை ஓய்வெடுக்கச் செல்லும்படி ப்ரார்த்தித்தல்

“பந்நகாதீச பர்யங்கே“, “க்ஷீர ஸாகர” ஸ்லோகங்களை சேவிக்கவும்
ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்து, “உபசாராபதேசேந” ஸ்லோகத்தை சேவிக்கவும். இந்த ச்லோகத்தால், திருவாராதனத்தின் போது நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.

“உறகல் உறகல் உறகல்“, “பனிக்கடலில் பள்ளி கோளை பழகவிட்டு” பாசுரங்களைச் சொல்லிக் கொண்டு கோயில் ஆழ்வார் திருக்காப்பு சேர்க்கவும் (கதவை மூடவும்).

அநுயாகம் – யாகம்/திருவாராதனத்தை நிறைவு செய்தல்

அவரவர் ஆசார்யன் மடம்/திருமாளிகை வழக்கப்படி தேவராஜ அஷ்டகமோ வரவரமுனி பூர்வ/உத்தர தின சர்யைகளோ வானமாமலை ஜீயர் ப்ரபத்தி/மங்களாசாஸனங்களோ சேவிக்கவும்.

ஸ்ரீவைஷ்ணவ அதிதிகளுக்கு ப்ரசாதம் அளிக்கவும்

தாங்களும் ப்ரசாதம் ஸ்வீகரிக்கவும்

அதிகப்படி விஷயங்கள்:

அநத்யயன காலம்

அநத்யயன காலத்தில் நாம் ஆழ்வார் பாசுரங்களைச் சேவிப்பதில்லை. கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கும்போது ஜிதந்தே  ஸ்தோத்ரம் (முதல் 2 ச்லோகங்கள்), கௌசல்யா ஸுப்ரஜா ச்லோகம், கூர்மாதீந் ச்லோகம் ஆகியவற்றைச் சொல்லி கதவைத் திறக்கலாம். ஆழ்வார் பாசுரங்களை வாயால் கூறுவதில்லையே தவிர மனதால் நினைக்கலாம்.

திருமஞ்சன காலங்களில், ஸூக்தங்களுடன் நிறுத்திக் கொள்ளவும்.

மந்த்ர புஷ்பத்தில், “சென்றால் குடையாம்” சேவிக்கும் இடத்தில் “எம்பெருமானார் தரிசனம் என்றே” சேவிக்கவும்.

சாற்றுமுறையில், உபதேச ரத்தின மாலை மற்றும் திருவாய்மொழி நூற்றந்தாதி பாசுரங்களைச் சேவித்து, “ஸர்வ தேச ஸதா காலே…” தொடங்கி வாழி திருநாமங்கள் வரை சேவிக்கவும்.

லகு திருவாராதனம் (30 நிமிடங்களுக்கும் குறைவு)

கோயில் ஆழ்வார் திருக்காப்பு நீக்கவும்

அர்க்க்ய பாத்ய ஆசமநீயங்களை சமர்ப்பிக்கவும்.

திருமஞ்சனம்

திருப்பல்லாண்டு, திருப்பாவை, முதலியன – இருக்கும் நேரத்தில் முடிந்த வரை. அநத்யயன காலத்தில், திவ்ய ப்ரபந்த தனியன்கள், உபதேச ரத்தின மாலை, முதலியன.

எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு போகம் கண்டருளப்பண்ணவும்.

சாற்றுமுறை

ஸ்ரீ பாத தீர்த்தம்

கோயில் ஆழ்வார் திருக்காப்பு மூடவும்

முக்கியக் குறிப்புகள்:
பூர்வ/உத்தர தினசர்யைகளில் காண்பித்தபடி மூன்று வேளை திருவாராதனம் செய்தல் வேண்டும். நாமும் முடிந்த வரை செய்யலாம்.

காலை ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்

மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு விரிவான திருவாராதனம்

ஸாயம் ஸந்த்யாவந்தனத்திற்குப் பிறகு சுருக்கமான திருவாராதனம்

ஏகாதசி அன்று பொதுவாக விரிவான தளிகை செய்வதில்லை. குழந்தைகள், வயதானவர்களின் இருப்பு போன்ற குடும்ப நிலைமையைப் பொறுத்து பழங்கள் மற்றும் சுருக்கமான போகம் செய்து சமர்ப்பிக்கலாம்.

த்வாதசி அன்று திருவாராதனம் சீக்கிரமாக செய்து தீர்த்தம், திருத்துழாய் மற்றும் ப்ரசாதம் ஸ்வீகரித்து, பாரணம் (வ்ரதத்தை முடித்தல்) செய்யவும்.

அநத்யயன காலத்தில், 4000 திவ்ய ப்ரபந்தங்கள் சேவிப்பதில்லை. பூர்வாசார்ய ஸ்தோத்ரங்கள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆழ்வார்/ஆசார்யர்கள் தனியன்கள், வாழி திருநாமங்கள் முதலியன சேவிக்கவும். மார்கழி மாதம் பிறந்த பின், திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை தினமும் சேவிக்கவும்.

யாத்ரைகள் செல்லும்போது, எம்பெருமானையும் உடன் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு செல்லுதல் உசிதம். அல்லது நம் க்ருஹத்தில் வேறு ஸ்ரீவைஷ்ணவர் திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்யலாம். அதுவும் இல்லாமல் போனால், எம்பெருமானை, திருவாராதனம் செய்யும் வேறு ஸ்ரீவைஷ்ணவர் க்ருஹங்களில் எழுந்தருளப் பண்ணலாம்.

தீட்டு காலங்களில் எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

முடிவாக, எம்பெருமான் நம் க்ருஹத்தில் எழுந்தருளியிருக்க நாம் திருவாராதனம் செய்யாமல் இருத்தல், வீட்டிற்கு வந்த விருந்தாளியை நாம் கவனியாமல் இருப்பது போன்றது.

சாஸ்த்ரத்தில் விதித்தபடியும், நம் பூர்வாசார்யர்களின் திருவுள்ளப் படியும் எம்பெருமானிடம் ஈடுபாட்டுடன் திருவாராதனம் செய்பவர், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் முழுமையாகவும் இயற்கையாகவும் ஈடுபடுவதன் மூலம் எம்பெருமானுக்கும், ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் தன்னுடைய ஆசார்யனுக்கும் மிகவும் விரும்பத்தக்கவராக ஆவர்.

Source: https://srivaishnavagranthamstamil.wordpress.com

தலைவர்கள் வாழ்வில்: அலறினார் காமராஜர்!

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.

சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.

ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத் தான் அழைத்தேன்” என்றார் பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.

இந்த பணத்திற்காகதான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒரு முறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார்.

பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம் பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம்

sriranganathaswamy srirangam

ஸ்ரீ வைஷ்ணவத் தூண்

வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம் என்று நிறைய பேர் அறிவதில்லை. வித்யாசம் அவரவர் எண்ணத்தில் தான் என்கிறது வைஷ்ணவம்.

ஸ்ரீ ராமானுஜர் இரண்டு கலாசாலைகளை நிறுவினார். ஒன்று காஞ்சியில், மற்றொன்று ஸ்ரீ ரங்கத்தில். காஞ்சி ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே இருப்பதால் அதை வடகலாசாலை என்றும் ஸ்ரீரங்கக் கலாசாலை தென் கலாசாலை என்றும் அடையாளம் கொண்டது. கலாசாலை என்றால் அதில் கற்றுக்கொடுக்க, தகுந்த பேராசிரியர்கள் வேண்டுமே. ஸ்ரீ ராமானுஜர் தனது சிஷ்யர்களில் இரண்டுபேரை காஞ்சிக்கும் இரண்டுபேரை ஸ்ரீரங்கத்திற்கும் அனுப்பிவைத்தார். விசிஷ்டாத்வைதம் கற்றுத்தரப்பட்டது.

இப்போதெல்லாம் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ மாணவியருக்கு வெவ்வேறு சீருடை தருகிறார்களே அதுபோல் வட கலாசாலையைச் சேர்ந்தவர்களின் நாமம் பாதமின்றியும் தென் கலாசாலையோருக்கு நாமத்தில் மூக்கில் மேல் பகுதியில் ஒரு பாதமும் அடையாளமாகியது. கலாசாலை சுருங்கி காலப்போக்கில் வட கலை தென்கலை ஆகியது.

ஒரு மாணவன் B.A. படிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கல்லூரியில் ஒருமாதிரியும் மற்றொரு கல்லூரியில் வேறு மாதிரியும் அந்தப் படிப்பை கற்றுக்கொள்வது போல்.

அடிப்படையில் வித்யாசம் இரு கலைகளிலும் இல்லை.வித்தியாசங்களும் மறைந்துவருகின்றன. வடகலையில் சிறந்த ஆசார்யன் ஸ்ரீ வேதாந்த தேசிகரும் தென்கலையில் ஸ்ரீ ராமானுஜரும் மணவாள மாமுனியும்
போற்றப்படுபவர்கள். இதில் மணவாள மாமுனிகளைப் பற்றி சில தெரிந்த விவரங்களை மீண்டும் ஞாபகப் படுத்தும் வேலை தான் எனக்கு.

சிக்கில் கிடாரம் என்று ஒரு குக் கிராமம். ஆழ்வார் திருநகரி அருகே உள்ளது. இந்த ஊரில் பிள்ளை லோகாசார்யர் என்று சிறந்த ஒரு வைஷ்ணவ பக்தர். அவருக்கு இன்னொரு பெயர் கொல்லி காவலதாசர். அவரிடம் சிஷ்யனாக இருந்தவர் திகழக் கிடந்தான். என்ன அழகிய தமிழ்ப் பெயர் அப்போதெல்லாம் இருந்திருக்கிறது என்று அறியும்போது அவர்களது மொழிப்பற்றும் , ஞானமும் நம்மைத் திகைக்க வைக்கிறது. அப்போதெல்லாம் சிஷ்யன் என்பவன் இந்தகாலத்தில் நடப்பதுபோல் காலையில் ஆஜராகி மாலையில் வீடு திரும்புபவன் அல்ல. குருவின் வீட்டிலேயே அடிமையாக அவர் வீட்டிற்கு உழைத்து குரு, குருபத்னி ஆகியோரை திருப்திப் படுத்தி தான் கல்வி ஞானம் பெறவேண்டும். குரு எப்போது அழைத்து உபதேசிப்பார் போதிப்பார் என்பது தெரியாது.

மிகவும் பிடித்துப் போய் இந்த சிஷ்யன் அவருக்கு மருமகனாகவே ஆகிவிட்டான். திகழக்கிடந்தான் மனைவி கர்ப்பமானாள் . அவள் கர்ப்பமான நாள் முதலாக அவள் முகத்தில் ஒரு தனி தேஜஸ் உண்டாகி ஒளி வீசியது. ஊரார் இதைக் கவனித்து ”இவள் வயிற்றில் யாரோ ஒரு மகாத்மா தோன்றியிருக்கிறார். ஊர் உலகமெல்லாம் இனி நலம் பெறும். அவர் வரவால் லோகத்தில் அனைவரும் பாபங்களிலிருந்து விடுபடுவர். பிறப்பு இறப்பு இன்றி ஜன்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு மோக்ஷம் பெறுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.

1370ம் வருஷம் ஐப்பசி மாதம் மூல நக்ஷத்ரத்தில் ஒரு ஆண் மகவை ஈன்றாள் அந்தப் பெண். திகழக் கிடந்தான் ஆனந்த சாகரத்தில் மூழ்கிக் கிடந்தான். ஆகாயத்தில் பெருமையோடு பறந்தான். குழந்தை வெண் தாமரை போல் ஜொலித்தது. நிறைய தலை முடி. கருநிற மேகம் ஒன்று கிரீடமாக அமைந்தாற் போல் இருந்தது. அகன்ற ஒளிவீசும் நயனங்கள்.

இது தெய்வீகக் குழந்தை என்பதில் யாதொரு சந்தேகமு மில்லை என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். பெற்றோர் அவர்கள் வழிபடும் தெய்வமான அழகிய மணவாளன் தான் இவன் என்று அந்தப் பெயரையே குழந்தைக்கு சூட்டினார்கள். நாளொரு சாஸ்திரமும் பொழுதொரு ஸ்தோத்ரமுமாக மணவாளன் வளர்க்கப்பட்டான். தக்க காலத்தில் வயதில் உபநயனம் நடந்தது. தந்தை திகழக் கிடந்தானே ஆச்சர்யனானார். வேதம் உபநிஷதம் எல்லாம் கற்றுத் தேர்ந்தான் மகன்.

ஆழ்வார்கள் வரலாறுகள் கிடைத்த பாமாலைகள் அனைத்துமே சிறுவனுக்கு அத்துபடியாயிற்று.
அடுத்ததாக அவனுக்கு திருமணம் முடிக்க தந்தை பெண் தேடலானார். மணமும் முடிந்தது. ஞானமும் பக்தியும் சேர்ந்து சத்வ குண சீலனாக திகழ்ந்தார் மணவாளன். உலக ஆசாபாசங்கள் அணுகவில்லை அவரை. தந்தை ஆசார்யனின் திருவடிகளையே பூஜித்தார். சரணாகதி அடைய அதுவே போதும் என்று மகிழ்ந்தார்.

அதிக காலம் அவரது தந்தை ஆசார்யன் பூமியில் இல்லை. திகழக் கிடந்தான் வைகுண்டம் ஏகினார். ஆச்சார்யனின் மறைவினால் கொழுகொம்பை இழந்த கொடியாக வாடினார் அழகிய மணவாளன்.

அக்காலத்தில் வாழ்ந்த ஒரு மகான், வித்வான் ஸ்ரீ சைலேசர். பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு மந்திரியாக இருந்தவர். பணமும் பதவியும் புகழும் தந்த அந்த உத்தியோகத்தைக் காட்டிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் இனித்தது ஸ்ரீ சைலேசருக்கு. எனவே உத்தியோகத்தை உதறித் தள்ளினார். முழுநேரமும் அவரை ஆட்கொண்டது ஆழ்வார்களின் அருளிச்செயல். ஆழ்வார்களின் பாசுரங்களைத் தேடி அலைந்தார். கிடைத்ததை பாதுகாத்தார். படித்து மகிழ்ந்தார்.

திருக்குருகூர் என்கிற க்ஷேத்ரத்தில் நம்மாழ்வாருக்கு ஒரு ஆலயம் நிர்மாணித்தது இந்த ஸ்ரீ சைலேசர் தான். நம்மாழ்வார் எம்மாழ்வார் என்று அவர் ஸ்மரணையாகவே தன்னை அர்ப்பணித்துகொண்ட ஸ்ரீ சைலேசர் அடைந்த பெருமை வாய்ந்த பட்டம் தான் ”’திருவாய் மொழிப் பிள்ளை”.

இவரை விடுவாரா மணவாளன். ஓடினார் அவரைத் தேடி. குருவே சரணம் என்று அவர் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவர் சிஷ்யரானார்.

குருவும், சிஷ்யனின் அருமையை அறிந்தவராயிற்றே. இவர் சாதாரணர் அல்ல. இவரால் வைஷ்ணவ சமுதாயம் ஒரு மாபெரும் பெருமையை அடையப்போகிறது என்று அவருள் தெய்வம் உணர்த்தியது. ஒவ்வொரு காரியமும் நிறைவேற அவ்வப்போது ஒரு மகான் தோன்றுவார். உலகம் அவரால் உய்யும் என்பது நாமறிந்தது தானே.

ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தம் உலகறிய வேண்டுமானால் அதற்கு ஒரு புண்ய புருஷன் தோன்றவேண்டுமானால் அது இந்த அழகியமணவாளன் தான் என்று குரு புரிந்துகொண்டார். புளகாங்கிதம் அடைந்தார். பெருமாளே என்று அடி நாபியிலிருந்து அவரது நன்றிக்குரல் எழும்பியது. இரு கரமும் கூப்பியவாறு சிரமேல் எழுந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் சிலிர்த்தது.

ஒரு தாய்ப்பறவை எப்படி தன குஞ்சின் மேல் அக்கறை காட்டுமோ அதைப்போல குரு மணவாளனை அணுகி அவருக்கு போதித்தார். சிஷ்யன் ஆழ்வார்கள் பாசுரங்களைக் கற்றார். ஞானிகளின் வியாக்யானங்கள்
பாஷ்யங்களைக் கற்று தேனாக அனுபவித்தார்.

மற்ற சிஷ்யர்கள் தமது, குரு, மணவாளனிடம் மட்டும் பிரத்யேக சலுகை காட்டியதில் வழக்கம்போல அவரை விரோத பாவத்தோடு பார்த்தனர். மாறும் உலகம் என்றும் மாறுவதில்லை சில விஷயங்களில்.

”குருநாதா, ஆச்சார்ய சுவாமிகளே, ஏன் இந்த பாரபக்ஷம் எங்களிடம்?” என்று கேட்டனர்.

”என் அருமை சிஷ்யர்களே, இந்த மணவாளன் வேறு யாருமில்லை, ஆதி சேஷனின் அவதாரம், போதுமா?” என்றார் திருவாய் மொழிப் பிள்ளை. வாயடைத்தது அவர்களுக்கு.

” இவன் ஆதிசேஷன். ஆயிரம் சிரங்கள் கொண்டவன், ஆயிரம் நாப்படைத்தவன். ஒரே நேரத்தில் ஆயிரம் கலைகளையும், ஞானத்தையும் க்ரஹிக்கும் சக்தி வாய்ந்தவன். எனவே இந்த அழகிய மணவாளனைப் பொன்னே போல் போற்றி அவனது திறனை, திறமையை வளர்த்து பயனடைய வேண்டியவர்கள் நாமும் நமக்குப் பின்னால் பல கோடி வைஷ்ணவர்களும். வேருக்கு நீரூற்றி விருக்ஷமாக்குவோம். பல பறவைகள், மாந்தர் பின்னர் கனிகள்,நிழல் எல்லாம் அநேகம் பெறுவர்” என்றார் குரு.. அவரால் ” யதீந்திர பிரவண” என்ற பட்டமும் பெறுகிறார்.

படிப்படியாக நாளுக்கு நாள் அழகிய மணவாளனின் பக்தி ஸ்ரீ ராமானுஜர் மேல் பல மடங்கு வளர்ந்து கொண்டே வந்தது.

அழகிய மணவாளரின் ”யதிராஜ விம்சதி” என்கிற ஸம்ஸ்க்ரித நூல் விலை மதிப்பற்ற பொக்கிஷமாக தமிழக ஆழ்வார்களில் முதல் வடமொழி ஸ்தோத்ரமாக வெளிவந்தது. வைஷ்ணவ தத்வ ஸாராம்ஸத்தை வெளிக்கொணர்ந்தது.

மோக்ஷம் வேண்டினால் அதற்கு ஒரே வழி கெட்டியாக ஸ்ரீ ராமனுஜரின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு சரணாகதி அடைவதே என்று முரசு கொட்டியது.

அழகிய மணவாளன் தனது ஆசார்யன் திருவாய் மொழிப்பிள்ளையிடம் கல்வி கற்று குருகுலவாசம் முடிந்து வணங்கி அவர் ஆசியுடன் சில சிஷ்யர்கள் தொடர ஸ்ரீ ரங்கம் பயணமானார். முக்ய சிஷ்யர் பொன்னடிக்கால் ஜீயர், மற்றொரு பெயர் ராமானுஜ ஜீயர். ஜீயர்கள் மடம் என்கிற வைஷ்ணவ சம்ப்ரதாயம் மணவாளன் மூலமே தொடர்ந்தது. வானமாமலையில் இன்றும் தொடர்கிறது.

ஸ்ரீ ரங்கத்தில் மணவாளன் ஆழ்வார்கள் பற்றியும் அவர்களது பொய்யாத இனிய தமிழ்ப் பாசுர பொன் மொழிகளையும் பரப்பினார்.

துக்கம் தரும் செய்தி வந்தது ஸ்ரீரங்கத்துக்கு. திரு வாய் மொழிப் பிள்ளை பரமபதம் அடைந்தார் என்று. ஆனால் அவர் பரம சந்தோஷத்துடன் தான் சென்றார். இனி வைணவ உலகத்துக்கு அதைத் தாங்கும் ஒரு நிலையான தூண் ஒன்று கிடைத்துவிட்டது. பல்லாயிரம் ஆண்டுகள் இனி வைணவ சம்ப்ரதாயம் ஒரு கவலையும் படத் தேவையே இல்லை என்று அவருக்கு திருப்தி.

மணவாளன் திருக்குருகூர் சென்றார். ஆச்சர்யனுக்கு செலுத்தவேண்டிய அந்திம கிரியைகள், மரியாதைகள் செவ்வனே நடந்தன. திருக்குருகூர் வாசிகள் பாக்கியசாலிகள். மணவாளன் சில காலம் தங்கி அவர்களுக்கு திருவாய் மொழி உபதேசம் வியாக்யானங்கள் அவர் வாய் மூலம் ஆறாகப் பெருக அவர்கள் மகிழ்ந்தனர்.

ஸ்ரீரங்கம் பிறகு திரும்பியவர் ஓலைச்சுவடிகள் தேடி கண்டுபிடித்து ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்பினார்.

”எங்கே என்னை மறந்துவிட்டாய், இங்கே வா” என்று திருவேங்கடவன் மணவாளனை அழைத்ததும் அங்கே சில காலம் தங்கினார்.

திருப்பதியில் அடிவாரத்தில் தனது சிஷ்யர் வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் சுவாமிகளோடு தங்கி கோவிந்தராஜனை வழிபட்டார்.

அன்றிரவு திருமலை ஜீயர் ஒரு அதிசய கனவு கண்டார். ”பள பளக்கும் பொன்னிற மேனி கொண்ட ஒரு ஆசார்யன் சாய்ந்துகொண்டிருக்க அவர் கீழே ஒரு திரிதண்டி சுவாமிகள் தோன்ற” என்ன ஆச்சர்யம் யார் இவர்கள்” என்று விசாரிக்க செய்தி கிடைத்தது.

திருமலையில் ஜீயரிடம் அவரது சில சிஷ்யர்கள் ”ஸ்வாமின், திருப்பதியில் கீழே ஒரு ஆசார்யசுவாமி, அவரோடு அவர் சிஷ்ய சுவாமி ஆகிய இருவர் வந்துள்ளார்கள். கோவிந்தராஜ சுவாமி ஆலயத்தில் வழிபட்டதைக் கண்டோம். அவர்களைப் பார்த்தாலே பயமும் பக்தியும் எங்களை அறியாமல் தோன்றியது சுவாமி ” என்றனர்.

திருமலையிலிருந்து ஜீயர் தனது சிஷ்யர்கள் புடை சூழ கீழே இறங்கிவந்தார். அழகிய மணவாளனை கோவில் மரியாதைகளோடு வரவேற்றார்.

திருமலையிலிருந்து மணவாளன் காஞ்சி சென்றார். என்ன ஆச்சர்யம். அங்கே கனவில் ஸ்ரீ ராமானுஜர் காட்சியளித்தார்.

”மணவாளா, நீ செய்யவேண்டியது ஒன்று உண்டு. உடனே ஸ்ரீ பாஷ்யத்தை கவனமாகப் படி. தெரிந்துகொள். அதை உனக்கு தக்கவாறு கற்பிக்கக் கூடியவர் கிடாம்பி நாயனார் என்பவரே. அவரைத்தேடிச் செல்” என்ற உத்தரவு ஸ்ரீ ராமானுஜரிடமிருந்து வந்தது.

கிடாம்பி நாயனாரை அடைந்தார் மணவாளன். தெண்டனிட்டு அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். குரு அவரை ஒரு ”வித்வத் சதஸில்” கலந்துகொள்ளச் செய்தார்.

வித்வத் சதஸ் என்பது பல அறிஞர்கள் வந்து தங்களது கல்வி கேள்வி ஞானத்தை வெளிப்படுத்தி தர்க்கம், கலந்துரையாடல் போன்றவை நடத்துவது. சிறந்த வித்வான்கள், பண்டிதர்கள், வேத வித்தகர்கள் வந்து பங்குகொண்டு கருத்துகள், வியாக்யானங்கள் அங்கே பரிமாறப்படும். கேள்விகளுக்கு விடை சொல்வார்கள். பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே சிறப்படைவார்கள்.

அழகிய மணவாளனின் பேச்சு, அவர் உரைத்த கருத்துகள், வினாக்களை தொடுத்தவர்களுக்கு அவரது அருமையான விளக்கங்கள், விடைகள், அனைவராலும் புகழப்பட்டது. கிடாம்பி நாயனாருக்கு தெரிந்துவிட்டது மணவாளன் சாமானியர் அல்லர் என்று.

தனியே மணவாளனைக் கண்டு சந்தித்தார் கிடாம்பி.

”சுவாமி தாங்கள் யார். உங்கள் உண்மை ஸ்வரூபம் எனக்கு காட்டி அருளவேண்டும்” என்று வேண்டினார்.

”அதற்கென்ன அப்படியே என்று மணவாளர் சிரித்துக்கொண்டே சொல்ல கிடாம்பி நாயனார் முன் கண நேரத்தில் ஆயிரம் படங்கள் கொண்ட ஆதிசேஷன் குடையாக நிற்க சங்கு சக்ரங்களோடு ஸ்ரீமன் நாராயணனே காட்சி தந்தார்.

ஸ்ரீ வைஷ்ணவ சரித்திரத்தில் ஸ்ரீ கிடாம்பி நாயனார் ஒருவரே இப்படி அழகிய மணவாளனின் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டவர். வேறெவரும் இல்லை என்பது ஆச்சரியம்.

காஞ்சியில் தங்கிய காலத்தில் மணவாளன் அநேக கைங்கர்யங்களை புரிந்தார். ஒரு காலத்தில் இனி இந்த வாழ்வில் நான் பரமனின் சேவையில் இடைவிடாது, இடரேது மின்றி உழைக்க சன்யாச மார்க்கம் ஒன்றே சிறந்தது என முடிவெடுத்தார்.

சடகோப யதி என்ற ஞானி ஒருவர் காஞ்சியில் இருந்த காலம் அது. அவரைச் சரண் அடைந்து அழகிய மணவாளன் துறவு பூண்டார். அவரால் தீக்ஷை பெற்ற அன்றுமுதல் அழகிய மணவாளன் ”மணவாள மாமுனிகள்” ஆனார். ”பெரிய ஜீயர்”. இந்த மணவாள மாமுனிகள் என்ற பெயர் உலகுள்ளவரை தமிழுள்ளவரை, கடைசிப் பாசுரம் எதிரொலிக்கும் வரை சூரிய சந்திரர்கள் உள்ளவரை நிலைக்குமே.

பெரிய ஜீயர் ஸ்ரீரங்கம் திரும்பினார். பல்லவராயன் மடத்தில் தங்கினார். திருமலை ஆழ்வார் மண்டபம் அவரால் உருவானது. அந்த மண்டபத்தில் குடியேறினார். தினமும் அவரது தேனமுதக் குரலில் ஸ்ரீ பாஷ்யம் உபன்யாசம் அங்கே நடைபெற்றது. கேட்டவரெல்லாம் பாக்யசாலிகள்.

பசி எடுத்துவிட்டது அவருக்கு. நம்மாழ்வாரைக் காணவேண்டும் என்ற பக்திப் பசி, பாசுரப் பசி. திருக்குருகூர் சென்றார். ஆழ்வாரைக் கண்குளிர தரிசனம் செய்தார். பெரியஜீயர் என்கிற பேர் எட்டு திக்கும் பெருமையோடு சென்று சேர்ந்தது. அவர் பெருமையில் மனம் புழுங்கி சில அற்ப ஜீவிகள் பொறாமைப் படத்தானே செய்யும்.அவரைக் கொல்ல திட்டம் தயாரானது.

நிசப்தமான ஒரு நள்ளிரவில் ஊரே அடங்கிய அமைதியான நேரத்தில் மணவாள மாமுனிகள் தங்கியிருந்த ஆஸ்ரம குடிசை தீப்பற்றி எரிந்தது. விஷயம் பரவியது. தூக்கத்தை விட்டு ஊரே திரண்டது. எல்லோரும் காண ஒரு கரு நாகம் பற்றியெரியும் குடிலிலிருந்து வெளியேறியது. ஒரு கண நேரத்தில் அந்த பெரிய கருநாகம் பெரிய ஜீயராக தோன்றி மறைந்தது.

தீய எண்ணம் கொண்ட தீங்கிழைத்தோர் வெட்கித்தலை குனிந்தனர். பெரிய ஜீயர் மகத்வம் புரிந்தது. திருக்குருகூர் மக்கள் சிரமேற் கரம் குவித்தனர். ”பெரிய ஜீய சுவாமிகளே” என்று பிரார்த்தித்தனர்.

அந்த ஊர் ராஜாவின் உதவியுடன் திருக்குருகூர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. பெரிய ஜீயர் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

அங்கு தான் எறும்பி என்கிற ஊரில் வாழ்ந்த அப்பா என்கிற வைஷ்ணவர் அவர் சிஷ்யரானார்.

காஞ்சியில் ஒரு மஹான். அவரை எல்லோரும் அன்பாக அண்ணா என்றழைத்தார்கள். சிறந்த வைஷ்ணவ ஞானி. அவருடன் தர்க்கம் செய்வது எளிதல்ல. எந்த கருத்தையும் ஆழ்ந்து சிந்தித்து தக்க விடை கூறி எதிரிகளின் வாதத்தைப் பொடி செய்பவர் என்பதால் அவருடன் வாதம் செய்பவர்கள் அவரை பெருமையுடன் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் என்று அழைத்தனர். அவர் திருமலையில் தங்கி வெங்கடேச பெருமாளுக்கு திவ்ய கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள் அவரிடம் ஸ்ரீரங்கத்திலிருந்து வந்த ஒருவர் பெரிய ஜீயர் பற்றி சொல்ல அந்த கவனத்தில் பிரதிவாதி பயங்கரம், பெருமாளுக்கு தீர்த்தம் தக்க நேரத்தில் சாதிக்கவில்லை. மேலும் தீர்த்தத்தில் வாசனை திரவியமும் கலக்கவில்லை. இதால் அவர் குன்றிப்போய் மிக்க விசனம் உண்டாயிற்று.

”பெருமாள் கைங்கர்யத்தில் தவறு செய்துவிட்டேனே” என்று கலங்கினார் பிரதிவாதி பயங்கரம். என்ன ஆச்சர்யம்? வாசனை திரவியங்கள் கலக்காமலேயே புனித தீர்த்தம் கம கமவென்று மணத்தது. அசரீறி அவர் காதில் ஒலித்தது. ”உன் தீர்த்தத்தை நான் ஏற்றுக்கொண்டேன்” .

அந்த க்ஷணமே பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ ரங்கம் அடைந்து பெரிய ஜீயரை வணங்கி ஏற்றுக்கொண்டு அவர் சிஷ்யரானார்.

பெரிய ஜீயர் விட்டுச் சென்ற செல்வங்கள் நமக்கு என்ன தெரியுமா?

தேவராஜ மங்களம்.
ஸ்ரீ காஞ்சி திவ்ய தேச ஸ்துதி
யதிராஜ விம்சதி
உபதேச ரத்னமாலை
திருவாய் மொழி நூற்றந்தாதி.
ஆரத்தி பிரபந்தம்
திரு ஆராதனம் க்ரமம்

வயதேற ஏற உடல் குன்றியது பெரிய ஜீயருக்கு. உள்ளம் உற்சாகத்தோடு தான் இருந்தது.

திமு திமுவென்று கூட்டம் எப்போதும் பெரிய ஜீயர் செல்லும் இடமெல்லாம் சேரும். ஒருநாள் மண்டபத்தில் வழக்கம்போல் பெரிய ஜீயர் ரங்கநாதன், ரங்கநாயகி முன்பு அமர்ந்து பிரவசனம் செய்துகொண்டிருக்கும்போது, சம்பாவனை செய்கின்ற நேரம் வந்தது. அப்போது ஒரு ஐந்து வயது குழந்தை கோஷ்டியிலிருந்து ஓடி வந்தது.
எல்லோரும் அதிசயிக்க ”நான் ரங்கநாதன் வந்திருக்கேன் என்று சொல்லி கணீரென்ற குரலில்
”ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரவணம் வந்தே ரம்யாஜ மாத்ரம் முனிம்”

”திருவாய் மொழிப்பிள்ளையான ஸ்ரீ சைலேசரின் பெட்டகமான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு என்னுடைய
நமஸ்காரங்கள். அவர் தான் ஞானம், பக்தி மற்ற சிறந்த குணங்களின் சாகரம், இருப்பிடம், எப்போதும் ராமனுஜரின் த்யானத்தில் தன்னை இழந்தவரல்லவா?”.

இந்த ஸ்லோகம் சொல்லிய குழந்தை எங்கே ? திடீரென்று தோன்றிய குழந்தை மாயமாய் மறைந்தது.

அங்கிருந்த அனைவருக்கும் புரிந்துவிட்டது. வந்தது ரங்கநாதனே என்று. அன்றுமுதல் அந்த ஸ்லோகம் ஆச்சர்யனின் தனியனாக, ஸ்லோகமாகி விட்டது.

அன்று முதல் இன்றுவரை எங்கெல்லாம் பிரபந்தம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் தென்கலை வைஷ்ணவ பக்தர்களால் முதலிலும் முடிவிலும் இந்த ஸ்லோகம் சொல்லப்படுகிறது.

பிரபந்தம் கேட்டவாறே தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில், மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார். அவரது பூத உடலை பத்மாசன கோலத்தில் அமர்த்தி சிஷ்யகோடிகள் காவிரிக்கரைக்கு ஒரு புஷ்ப பல்லக்கில் பக்தியுடன் சுமந்து ஒரு சந்யாசிக்குறிய முறையில் அந்திமக்ரியைகள் செய்தனர்.
அந்த புனித இடம் இன்றும் அவரது பொற்பாதுகை கொண்ட க்ஷேத்ரமாக போற்றி வணங்கப்படுகிறது.

பதிவு: ஹெச்.கோபாலகிருஷ்ணன்

நினைவிடம் வேண்டாம்; நினைவாக மரங்களை நடுங்கள்: அனில் மாதவ் தவே உருக்கம்!

புது தில்லி:

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவர் தனது நினைவாக மரங்களை நடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 60 வயதான அவர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மோடி அமைச்சரவையில் சென்ற வருடம் தான் சேர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, உடனடியாக சட்டம் நிறைவேற அனில் மாதவ் தவே உறுதுணையாகவும் ஆர்வமாகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் தவே, 2012-ஆம் ஆண்டு எழுதப்பட்ட உயில் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது. தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ‘என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம்; அதற்கு பதில், ஒரு மரம் நடுங்கள் போதும்.’ என்று உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவரம் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் கனத்த மனத்துடன் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தவே, ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.