சென்னை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மாநில அரசு குளிர் பதனக் கிடங்குகள் அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜிகே..நாகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடுமையான வறட்சியினாலும்,நீர்ப்பற்றாக்குறையினாலும் கொங்குமண்டல விவசாயிகள் நீண்டகால பயிர்களான வாழை,நெல் ஆகியவற்றுக்குப் பதிலாக குறுகியகால(90 நாட்கள்) சின்ன வெங்காயம்,தக்காளி போன்ற பயிர்களை பயிரிட துவங்கிவிட்டனர். ஏற்கனவே சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.தற்போது சின்ன வெங்காயம் ரூ.9க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.ஆனால் விவசாயிகளின் உற்பத்திசெலவு ஆட்கள் கூலி,உரம் உட்பட ரூ.10 செலவு ஆகிறது. அதேபோல,பொள்ளாச்சிப்பகுதியில் கூடை,கூடையாக தக்காளிப்பழங்கள் ரோட்டிலும், சுடுகாட்டிலும் கொட்டப்பட்டன.எனவே மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும்,விளைநிலத்தில் பாடுபட்டு விளைவித்த காய்கறிகள் வீணாகுவதை தடுக்கவும், தடையில்லா மின்சாரத்துடன் கூடிய குளிர்பதனக்கிடங்குகளை கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பிளஸ் 2-வில் பிட் அடித்து சிக்கிய 3 மாணவர்கள்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
தேனி: பிளஸ் 2 தேர்வில் ‘பிட்’ அடித்த 3 மாணவர்கள் அதிகாரியிடம் சிக்கினர். அவர்களை சரியாகக் கண்காணிக்கவில்லை எனக்கூறி 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. நேற்று கணக்குப் பதிவியல், வேதியியல் தேர்வுகள் நடைபெற்றன. தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் சுமார் 300 மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கான இணை இயக்குநர் செல்வராஜ் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வேதியியல் தேர்வு எழுதிய 2 மாணவர்கள், கணக்குப்பதிவியல் தேர்வு எழுதிய ஒரு தனித் தேர்வர் உள்ளிட்ட மூவர் பிட் அடித்ததை கண்டுபிடித்தார். உடனே 3 பேரையும் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றினார். அவரது பரிந்துரைப்படி, தேர்வறையில் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்த வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியர்கள், வைகை அணை அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் என 3 ஆசிரியர்களை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சகாயத்தின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இந்திய கம்யூ. கட்சி
சென்னை: சகாயத்தின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக திரு சகாயம் இ.ஆ.ப பணியாற்றிய போது, கிரானைட்டு முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். பின்னர் அவர் கோ.ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். நீதிமன்ற உத்திரவின் படி கிரானைட்டு முறைகேட்டை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு அப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவரையும் குடும்பத்தாரையும் அச்சுறுத்தும் வண்ணம் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. அவரை கூலிப்படையை வைத்து கொலை செய்திட திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்குள் நடத்திய உரையாடல் குறித்த, தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து திரு சகாயம் அவர்கள் கடந்த 2013 மார்ச் 22&ல் தமிழ்நாடு தலைமைச் செயலாளரை சந்தித்து முறையிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே புகார் தெரிவித்த போதும், புகாரின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்க முயற்சிக்காது இருப்பது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. அன்மை காலத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றிட இயலாது என்ற நிலை உருவாகியுள்ளது. நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிப்பதும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும் அரசின் தலையாக கடமையாகும். இனியும் காலம் தாழ்த்தாது நேர்மையான அதிகாரியான சகாயம் அவர்கள் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு குத்தகம் விளைவிக்காமல், அவரது கடமையை நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அவரை அச்சுறுத்து வோரை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது செய்திட வேண்டும். திரு சகாயம் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கும் உடமைக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்கிட வேண்டுமாய் தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். – என்று கோரியுள்ளார்.
66-ஏ சட்டப்பிரிவு நீக்க உத்தரவு: ரவிசங்கர் பிரசாத் வரவேற்பு
புது தில்லி: சமூகவலைதளங்களில் கருத்தை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் 66 ஏ சட்டப் பிரிவை ரத்து செய்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார். ‘பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் நடந்து வரும் இந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரத்திற்கு பெரும் மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது,’ என்று அவர் கூறினார்.
தெற்கு பிரான்சில் 148 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கியது
செவ்வாய்க்கிழமை, இன்று பிரான்ஸ் அதிபர் ப்ராங்கோய் ஹோலண்ட், இது குறித்துக் கூறுகையில், அது மிகவும் உள்ளடங்கிய பகுதி, அதில் சிலர் உயிருடன் இருக்கலாம் என்று கூறியுள்ளார். பார்சிலோனாவில் இருந்து, டுச்செல்டோர்ப் நோக்கிச் சென்றது அந்த விமானம். அது, தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாம். ஏர்-பஸ் ரக விமானத்தில் 142 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விரிவான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இது அடர்ந்த மலைப் பகுதி என்பதால், மீட்புப் பணியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஏ320 ரக விமானத்தில் 150ல் இருந்து 180 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். இந்த விபத்து குறித்து தகவல் வந்தது என்றாலும், முழுத் தகவலும் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த தகவல்களை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது….
INFO: We have recently become aware of media reports speculating on an incident though we still do not have any own confirmed information… — Germanwings (@germanwings) March 24, 2015
… As soon as definite information is available, we shall inform the media immediately … — Germanwings (@germanwings) March 24, 2015
“We do not yet know what has happened to flight 4U 9525. My deepest sympathy goes to the families and friends of our passengers and crew 1/2 — Lufthansa (@lufthansa) March 24, 2015
“…on 4U 9525. If our fears are confirmed, this is a dark day for Lufthansa. We hope to find survivors.“ Carsten Spohr 2/2 — Lufthansa (@lufthansa) March 24, 2015
அறிவித்தார் அம்மா செய்துமுடித்தனர் அமைச்சர்கள்
சென்னை:பொதுமக்களின் தாகம் தணிக்க, அ.இ.அ.தி.மு.க. சார்பில் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைக்க அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தனது கட்சியினருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.விடுத்த சில மணி நேரத்திலேயே அமைச்சர்கள்-மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் குதித்து செய்து முடித்தனர். அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இன்று தனது கட்சியினருக்கு அன்பு கட்டளை ஒன்றை வெளியிட்டார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது. “மக்கள் நலப்பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். அது தான் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி. வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், அதிமுகவினர் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.”என்று தெரிவித்திருந்தார்.இந்த அன்பு கட்டளை வெளியிட்ட சிலமணி நேரங்களில் கோவையில் அமைச்சர் வைத்யலிங்கம்,நெல்லையில் மக்களவை உறுப்பினர்கள் முத்துகருப்பன்,விஜிலா,நெல்லை மேயர் ,சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,உள்ளிட்டோர் நீர்மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர்,பழங்கள்,தர்பூசணி ,உள்ளிட்டவைகளை வழங்கினர்.
ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட நபருக்கு ஆயுள் சிறை
ஹாங்காங்: பெற்றோரை சமைத்து உண்ட ஹாங்காங்கைச் சேர்ந்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் ஹென்றி ச்சா(31). இவர் தன் பெற்றோறைக் காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் முதலில் அவர்கள் சீனா சென்றனர் என்றும், பின்னர் அங்கு அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அவர்கள் கொல்லப்பட்டதாக நண்பர் ஒருவர் மூலமாக தெரியவந்ததாகவும் கூறினார். முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்களைக் கூறிக் குழப்பிய ஹென்றி ச்சாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2013ம் ஆண்டே பெற்றோரை ஹென்றி கொலை செய்ததும், தாய், தந்தையின் தலைகளை வீட்டில் 2 பிரிட்ஜ்களில் அடைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற உடற்பகுதிகள் சமைக்கப்பட்டு, லஞ்ச் பாக்ஸ்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹென்றியும் அவர் நண்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹென்றி ச்சாவ்வுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்தார். இருவித குற்றங்களுக்காக, சாவ்வுக்கு மேலும் 9 ஆண்டு 4 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்ற வழக்கில் இருந்து அவரது நண்பர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, ஹென்றி சாவ் ஒரு மனநோயாளி என்று சில இடங்களில் இனங்காணப்பட்டார். அவ்வாறு அவர் தன்னையே கூறிக் கொண்டதும் குறிப்பிடத் தக்கது. தன் வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தனது இளைய வயது முதல், நடுத்தர வயது வரை தனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் ஏற்பட்டது என்று கூறிய சாவ், தானே தன் பெற்றோரை சாகடித்து, அவர்களை காணாமல் போனவர்களாக போலீஸை நம்பவைத்து, அவர்களின் உடல்களை துண்டு துண்டாக நறுக்கியதை ஒப்புக் கொண்டார்.
ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு: ஆகஸ்டுக்குள் நிறைவடையுமாம்!
புரி: நாடு முழுவதும் நடைபெற்று வரும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு மாதத்துக்குள் நிறைவடைந்து விடும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச். எஸ். பிரம்மா தெரிவித்துள்ளார்.
சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது: மோடி வாழ்த்து
மும்பை: பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார். தற்போது 77 வயதான அவர், ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்தவர். கடந்த 1986–ம் ஆண்டு வெளியான ‘நியூ டெல்லி டைம்ஸ்’ என்ற படத்தில், தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்திய காரணத்தால், அவருக்கு அப்போது தேசிய விருது வழங்கப்பட்டது. 1993–ம் ஆண்டு வெளியான ‘முகாபிஸ்’ படத்துக்காக ‘சிறப்பு ஜூரி விருது’ மற்றும் 1979–ம் ஆண்டு வெளியான ‘ஜனூன்’ படத்துக்காக ‘தேசிய திரைப்பட விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். நடிகர் சசி கபூர் இந்திய சினிமா உலகுக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவருக்கு இந்த ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருது’ அறிவிக்கப்பட்டு உள்ளது. சசி கபூரின் தந்தை பிரிதிவிராஜ் கபூர், இந்தி திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த நடிகர் ராஜ் கபூர் (சசி கபூரின் சகோதரர்) ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, நடிகர் சசி கபூருக்கும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இந்த விருதைப் பெற்றவர்கள் என்ற சாதனை படைக்கவுள்ளனர்.
கோவையில் பைக் – பஸ் மோதல்: மாணவர்கள் இருவர் பலி
கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி கௌசல்யா, மாணவர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு மாணவி நித்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஒத்தக்கால் மண்டப போலீசார் விசாரித்து வருகின்றனர்.

