Home Blog Page 6191

மீனவர் பேச்சுவார்த்தை நிறைவு

சென்னை தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், அரசுத் தரப்பு என நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. சென்னை மீன் வளத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை, சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும், இரு தரப்புக்கும் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மீன்பிடித்தல் தொடர்பாக இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான கோரிக்கைகள் எழுத்துபூர்வமாக கையெழுத்தாகியுள்ளன.

28ஆம் தேதி பந்த்தில் பாஜக பங்கேற்காது: தமிழிசை

சென்னை: தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். போராட்டத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப் படுவார்கள், எனவே முழு அடைப்புப் போராட்டம் வேண்டாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனார் குஷ்பு: சோனியா அறிவிப்பு

KUSHBOOபுது தில்லி: திமுகவில் இருந்து விலகி, சோனியாகாந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இப்போது காங்கிரஸ் கட்சியில் புதிய பதவி கிடைத்துள்ளது. இவருக்கு கட்சியில் என்ன பதவி என்று இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தநிலையில் இன்று கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமத்துள்ளார். குஷ்பு உள்ளிட்ட 17 பேரை செய்தித் தொடர்பாளராக நியமித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா இன்று அறிவிப்பு வெளியிட்டார். காங்கிரஸ் கட்சியில் 4 மூத்த செய்தித் தொடர்பாளர்கள், 17 புதிய செய்தி தொடர்பாளர்கள், 31 மீடியா விவாதங்களில் பங்கேற்கும் நபர்கள் மற்றும் இரண்டு மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் என நியமிக்கப்பட்டுள்ளனர். அஜய் மக்கான், சி பி ஜோஷி, சத்யவ்ரத் சதுர்வேதி, ஷகில் அகமது ஆகியோர் மூத்த செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்ட 31 பேர் டிவி விவாதங்களில் பங்கேற்கும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து: மோடி இரங்கல்

தெற்கு பிரான்ஸில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்பாராத இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தாரின் துக்கம், வலியை தாமும் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி…

சொந்தமாகக் கார் வாங்கி ஓட்டலாம்: ஸ்டேட் பாங்க் ஏற்பாடு

சென்னை: ஓட்டுநருக்கான சிறப்பு நிதி உதவித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ தொடங்கியுள்ளது. ஓலா வாடகை கார் நிறுவனமும், எஸ்.பி.ஐ.யும் இணைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் பயனடைவதற்கான “ஓலா பிரகதி’ என்ற இந்த திட்டத்தை நேற்று சென்னையில் அறிமுகம் செய்து வைத்தது. இது குறித்து வங்கி முதன்மை பொது மேலாளர் பிரகாஷ் ராவ் பேசியபோது, கார் ஓட்டுநர்கள் தொழில்முனைவதற்கான திட்டத்தில், விரைவாக நிதி உதவி பெறும் வசதி, எளிய முறையில் தவணை செலுத்தும் வசதி, மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக வங்கியை அணுகும் முறை உள்ளிட்டவற்றைப் பயனாளிகள் பெறலாம். மேலும், வாடகைக் கார் ஓட்டுநர்கள் விரும்பிய கார்களை வாங்கிகொள்வதற்கு 90 சதவீத நிதியை வங்கி தருகிறது. பயனாளிகள் 2-3 ஆண்டுகளில் பணத்தைத் திருப்பி செலுத்தி கார்களை உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 150 கார்களுக்கு நிதி உதவியளித்துள்ளோம். மேலும், ஓலா நிறுவனம் இத்திட்டத்திற்கென ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு நகரங்களில் 15 ஆயிரம் கார்களுக்கு நிதி உதவி வாய்ப்பினை கார் உரிமையாளருக்கு ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர்கள் தொழில் முனைவோராகவும், உரிமையாளராகவும் விளங்கும் முறையில் இத்திட்டம் செயல்படும். – என்றார்.

முன்னாள் அமைச்சர் பரமசிவன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

சென்னை; தமிழக முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.மா. பரமசிவன் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.அதிமுகவில் மாணவர் அணி அமைப்பாளர், தொகுதி அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் கட்சிப் பணியாற்றிய அவர், எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் மக்கள் பணியாற்றியவர். பரமசிவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் எல்லா இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்தியாவின் அதிக வயதான பெண்மணி குஞ்சன்னம் மரணம்

kunnamkutti திருச்சூர்: இந்தியாவின் மிக வயதான பெண்மணி குஞ்சன்னம் குட்டி மரணம் அடைந்தார். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்த அவருக்கு தற்போது வயது 112. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சூண்டல் அருகே உள்ள பரனூரைச் சேர்ந்தவர் குஞ்சன்னம். சிறுவயது முதலே வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருந்து வந்த குஞ்சன்னம், திருமணம் செய்து கொள்ளவில்லை. காலணி அணிவதில்லை, பேருந்தில் பயணிப்பதில்லை, ரயில், விமானத்தைப் பார்த்ததில்லை, இப்படி தனது சொந்த கிராமத்திலேயே எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் குஞ்சன்னம். இவர் குறித்து, குடும்பத்தார் லிம்கா சாதனைப் புத்தகத்துக்கு தகவல் அளித்தனர். குஞ்சன்னத்தின் வயதுக்கு சாட்சியாக 1903ம் ஆண்டு பரனூர் எரானெல்லூர் தேவாலயத்தில் வழங்கப்பட்ட ஞானஸ்நான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வயதான பெண்மணியாக குஞ்சன்னம் அறிவிக்கப் பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்த குஞ்சன்னம், திங்கள் முதல் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திங்கள் மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைத் தேற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு, புதன்கிழமை நடைபெறவுள்ளது.

148 பேருடன் விமானம் விபத்து: மீட்புப் பணி தாமதம்

german-wing148 பேருடன் விமானம் தெற்கு பிரான்சில் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், மீட்புப் பணிகள் தாமதமாகும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். அந்தப் பகுதி மிகவும் உள்ளடங்கிய பகுதி என்றும், மீட்புக் குழுவினர் சென்று சேர பிரச்னைகளும் தடங்கல்களும் இருப்பதால், உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபடமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் இருந்து, டுச்செல்டோர்ப் நோக்கிச் சென்றது அந்த விமானம். அது, தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாம். ஏர்-பஸ் ரக விமானத்தில் 142 பயணிகள், 2 பைலட்கள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்தனர். விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தொடர்பான விரிவான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இது அடர்ந்த மலைப் பகுதி என்பதால், மீட்புப் பணியில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஏ320 ரக விமானத்தில் 150ல் இருந்து 180 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். இந்த விபத்து குறித்து தகவல் வந்தது என்றாலும், முழுத் தகவலும் கிடைக்கவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்த தகவல்களை அது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது….  

 

 

 

தோல்வியுற்ற சோகம்: அழுத தீர்த்த மார்கல் உள்ளிட்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்

south-africa உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிரடியாக ஆடி, 43 ஓவரில் 281 ரன் குவித்தது. மழை பெய்ததால், 43 ஓவரில் 298 ரன் என்ற வெற்றி இலக்கு நியூசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்கம் முதலே நியூசிலாந்து அதிரடியாக ஆடி, ரன் சேர்த்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் வெற்றி வாய்ப்பு வந்தது. ஆனால், பதட்டத்தில், 2 ரன் அவுட் வாய்ப்பையும், 3 கேட்ச் வாய்ப்புகளையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கோட்டை விட்டனர். இதனால் வெற்றி கைநழுவிப் போனது. இது தவிர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டு கடைசி ஓவரில், கடைசி பந்துகள் வரை வெற்றிக்கான விறுவிறுப்பை தங்கள் வசம் வைத்திருந்தும், வெற்றி கைநழுவியதில், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். மார்கல் மைதானத்தில் நடுவே அமர்ந்து கேவிக் கேவி அழுது தீர்த்தார். அவர் கண்களில் நீர் கரைபுரண்டது. முக்கியமான ஒரு போட்டி கைவிட்டுப் போன சோகத்தில், அவரை தேற்ற உடன் இருந்த வீரர்கள் வந்தனர். தென்னாப்பிரிக்க ரசிகர்களும் பெருத்த சோகத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இளைஞர் கைது

கம்பம்: கம்பம் அருகே அரசு பஸ்ஸில் கஞ்சா கடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கம்பம் புதிய பஸ் நிலையத்தில் அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது கம்பத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஒரு இளைஞரைப் பிடித்து சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிடிபட்ட இளைஞர் கூடலூர் பசும்பொன் நகரைச் சேர்ந்த செல்வம் (35) என்பது தெரிந்தது. இதை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கம்பம் நகரில் அண்மைக் காலமாக கஞ்சா கடத்தல் அதிகரித்து வருகிறதாம். தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.