Home Blog Page 5435

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!

சென்னை:

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ரஜினி காந்த்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் ரசிகர்களிடம் குறிப்பிட்டவை:

முதல் நாளில் அரசியலுக்கு வருவது பற்றி பேசினேன்;
எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது, அரசியலில் எதிர்ப்பு தான் அவசியம்

தமிழக அரசியல் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்.

மக்களின் சிந்தனையை உருவாக்கினால் மட்டுமே நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

போர் வரும்போது பார்த்து கொள்வோம்; அதுவரை பொறுமை காப்போம்.

நல்ல உள்ளங்கள் வாழும். தமிழக மக்களுடன் தான் நான் இருக்க வேண்டும்

23 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்தேன். 43 வருடங்கள் தமிழகத்தில் வாழ்கிறேன். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள்.

மு .க .ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் நன்றாகச் செயல்படுவார்

தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை

அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சையாகும் என எதிர்பார்க்கவில்லை

அனைவரும் அவரவர் கடமையை செய்யுங்கள்; போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது.

ஸ்டாலின் நல்ல நிர்வாகி, சீமான் போராளி, அன்புமணி சிறந்த சிந்தனை வளம் மிக்கவர்.

தமிழகத்தில் இருந்து என்னைத் தூக்கி போட்டால் இமயமலையில் போய் தான் விழுவேன்; என்னை வாழ வைத்த தமிழக மக்கள் நன்றாக இருக்க நினைக்கக் கூடாதா? என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார் ரஜினி காந்த்.

ஆந்திராவில் ஒரே நாளில் கடும் வெயிலுக்கு 58 பேர் பலி

திருப்பதி: ஆந்திராவில் கடுமையான வெயிலுக்கு 58 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் ஓரே நாளில் 58 பேர் வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி இறந்தனர். சித்தூர் மாவட்டத்தில் சேர்ந்த  கிருஷ்ணம்மா(66), சின்னாரெட்டி(70), கிருஷ்ணம்மா(53), நரசிம்மலநாயுடு(65), பிரம்மாயி ஆச்சாரி(60), பிரதாப்ரெட்டி(67) மற்றும்  த லட்சுமியம்மா(60) உள்பட 7 பேர்  வெயில் கொடுமைக்கு பரிதாபமாக நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

இதேபோல், பிரகாசம் மாவட்டத்தில் 13 பேரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேர், குண்டூர் மாவட்டத்தில் 10 பேர், கிருஷ்ணா மாவட்டத்தில் 3 பேர், விஜயநகரம் மாவட்டத்தில் 7 பேர், நெல்லூர் மாவட்டத்தில் 10 பேரும் பலியாகினர்.  மேலும்,அனந்தபுரம் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ராஜமுந்திரி மாவட்டத்தில் 113 டிகிரி பாரன்ஹீட் வெயிலும்,112 டிகிரியும், சித்தூரில் 109 டிகிரியும், திருப்பதியில் 111 டிகிரியும் பதிவாகி இருந்தது. இருப்பினும், ஒரு சில உள்மாவட்ட கிராமங்களில் சூறைச் காற்றுடன் கனமழை பெய்தது.

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி:

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பயண ஏற்பாட்டின் படி, லண்டன் சென்றுள்ளதாக கூறப்பட்டது. அண்மையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எ பில்லியன் ட்ரீம்ஸ் குறித்து விளக்க மோடியை சந்தித்த சச்சின்

புது தில்லி:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது விரைவில் அவர் நடித்து வெளிவரவுள்ள சச்சின்: எ பில்லியன் டிரீம்ஸ் படத்தை பற்றி விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் சச்சின் குறித்து பெருமைப் படுவதாகவும், அவருடைய வாழ்க்கை 125 கோடி மக்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் செய்தி:

குழந்தைகளையும் ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்


சென்னை ராயபுரம் போக்குவரத்து காவலர் ஒருவர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார்.

வர போற வாகனங்களை மடக்கி எல்லோரையும் ஊத சொல்கிறாராம். பெற்றோருடன் சென்றாலும் யாராக இருந்தாலும் விடுவதில்லையாம். கடமை உணர்வு என்கின்றனர் சிலர்.இராயபுரம் பழைய காவல நிலையம் முன்பே கனரக வாகனங்களை விதியைமீறி நிறுத்தி லஞ்சம் பணத்தை பொதுமக்கள் முன்னிலையில் பெறுகின்றனர்.

காவல்துறை உடைக்கு களங்கம் சேர்க்கின்றனர். இவ்வளவு தவறுகளை செய்வதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று வேதனையோடு கூறுகின்றனர். அரசு நிர்வாகத்தில் நேர்மையானவர்களை தேட வேண்டியதுள்ளது.

விஸ்வரூபம்

தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்த பவன் ரெய்னா ராஜினாமா ஏற்பு

சென்னை:

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா கடந்த 12ஆம் தேதி கடிதம் வாயிலாக ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா தில்லியில் பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னர், அதனை மீட்க எடுத்த முறைகேடான நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பாக இருந்தார் புகார் எழுந்தது. இதையடுத்து தில்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 12ஆம் தேதியே அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக இன்று அறிவித்தது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்!

சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 94,167 மாணவ, மாணவியர்கள் தேர்வுகளை எழுதினர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் போலவே, பத்தாம் வகுப்பு தேர்விலும், மாநில, மாவட்ட அளவிலான முதல் 3 இடங்கள் அறிவிக்கப்படாமல், கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது,.

இதில் 481 மதிப்பெண்களுக்கு மேலாக பெற்ற 38,613 மாணவர்களுக்கு ஏ கிரேடு கிடைத்துள்ளது.

451 முதல் 480 வரை 1,22,757 மாணவர்களுக்கு பி கிரேடு கிடைத்துள்ளது.

426 முதல் 450 வரை 1,13,8311 மவர்களுக்கு சி கிரேடு கிடைத்துள்ளது.

401 முதல் 425 வரை 1,11,266 டி கிரேடு கிடைத்துள்ளது.

301 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற 3,66,948 மாணவர்களுக்கு இ கிரேடு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 92.5% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.2% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 0.8% கூடுதல் ஆகும். 5059 பள்ளிகள் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். 5059 பள்ளிகளில் 1557 அரசு பள்ளிகள் அடங்கும்.

விருதுநகர் மாவட்டம் முதலிடம்

98.55% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.59 ஆக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது.

* தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம்
பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடம்- 98.17% தேர்ச்சி
* ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடம்- 98.16% தேர்ச்சி
* ஈரோடு மாவட்டம் 4-வது இடம்- 97.97% தேர்ச்சி
* தூத்துக்குடி மாவட்டம் 5-வது இடம்- 97.16% தேர்ச்சி

பாட வாரியாக 100க்கு 100

* தமிழ் பாடத்தில் 69 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* கணக்கு பாடத்தில் 13759 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
* அறிவியல் பாடத்தில் 17481 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
* சமூக அறிவியல் பாடத்தில் 61,115 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர்.
* ஆங்கிலப் பாடத்தில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவு தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் குறிப்பிட்டு கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு உடனே அனுப்பி வைக்கப்படும். தனித் தேர்வர்களும் செல்போனில் தெரிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றுகளை 25ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அந்தந்த தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு முடிவுகளை
https://www.tnresults.nic.in,
https://www.dge1.tn.nic.in,
https://www.dge2.tn.nic.in இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்


புதுதில்லி:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி, அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பிரதிபலனாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை யும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கினை, 2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வரும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து கடந்த பிப்ரவரி 2-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், “ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதில் மாறன் சகோதரர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கு ஆதாரங்கள் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மாறன் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. எனவே மாறன் சகோதரர்களை இந்த வழக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மறு சீராய்வு மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: ரஜினிகாந்த்

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார்.

இதனிடையே ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தனது ரசிகர்களிடம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது என அவர் கோரிக்கை வைத்தார்.

நான் கர்நாடகத்தில் 23 வருடங்கள் வாழ்ந்தேன். ஆனால் தமிழகத்தில் 43 வருடங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் கர்நாடகத்தில் இருந்து வந்திருந்தாலும் நீங்கள் என்னை வரவேற்று ஏற்றுக் கொண்டீர்கள். என்னை உண்மையான தமிழனாக ஆக்கியிருக்கிறீர்கள். எனக்கு என்று சில கடமைகள், பணிகள் இருக்கின்றன. அதுபோல் உங்களுக்கும் நிறைய கடமைகள், வேலைகள் இருக்கும். முதலில் அதை சரியாகப் பார்ப்போம். ஆனால், எப்போது போர் வருமோ அப்போது பார்த்துக் கொள்வோம்… என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.

ஓ.பன்னீர்செல்வம் தில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு?

கோப்பு புகைப்படம்: பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம்

புது தில்லி:

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தில்லியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., யின் இல்லத்தில் இன்று முற்பகல் 12.15க்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று சில கோப்புகளை அதிமுக புரட்சித் தலைவி அம்மா பிரிவினர் வழங்க உள்ளனர் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மாலை 4 மணிக்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க இரண்டாக பிளவடைந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரதமர் மோடியை சந்திக்க பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, தங்கள் அணி மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றும், தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்னொரு அணியான எடப்பாடி அணியினரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓபிஎஸ் அணி, முந்திக்கொண்டு பிரதமரைச் சந்திக்கவுள்ளது என்று தில்லி வட்டாரத்தில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.