ஓ.பன்னீர்செல்வம் தில்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு?

இந்தியா சற்றுமுன்
modi pannerselvam - 2026
கோப்பு புகைப்படம்: பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம்

புது தில்லி:

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு திடீரென தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். இன்று மாலை பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தில்லியில் உள்ள மைத்ரேயன் எம்.பி., யின் இல்லத்தில் இன்று முற்பகல் 12.15க்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அதற்கு முன்னதாக தேர்தல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று சில கோப்புகளை அதிமுக புரட்சித் தலைவி அம்மா பிரிவினர் வழங்க உள்ளனர் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மாலை 4 மணிக்கு பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க இரண்டாக பிளவடைந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரதமர் மோடியை சந்திக்க பயணம் மேற்கொண்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, தங்கள் அணி மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்றும், தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இன்னொரு அணியான எடப்பாடி அணியினரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக.,வுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஓபிஎஸ் அணி, முந்திக்கொண்டு பிரதமரைச் சந்திக்கவுள்ளது என்று தில்லி வட்டாரத்தில்  பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.