ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 3)

Published:

varadharajaperumal - 2026

தேவகுரு ப்ருஹஸ்பதி !!

” ப்ருஹதீ வாக் தஸ்யா : பதி :” (ப்ருஹதீ = வாக்குகள் ) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார் . ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர் !

” புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் ” ( கீதை 10-24 )

( புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! ( ப்ருஹதாம் பதி : கிராம் பதிர்ஹ்யஸௌ – தாத்பர்ய சந்த்ரிகையில் தேசிகன் ) என்றான் கண்ணனும் !

“புரோஹிதர்” என்றால் நம் நன்மையை ( நமக்கும் ) முன்னாலேயே உத்தேசித்துச் செயல்படுபவர் என்றே பொருள் !

ஆம் ! தேவர்களின் நன்மைக்காக பாடுபடுபவர் புரோஹிதரான ப்ருஹஸ்பதி !

அவர் தான் தேவர்களையும் , ரிஷிகளையும் மற்றும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு ஸத்யலோகம் வந்துள்ளார் !

அனைவரும் ஒரு பிரச்சினையையும் சுமந்து வந்துள்ளது சேவகன் மூலமாக பிரமனுக்கு உணர்த்தப்பட்டது !

என்ன கலகம் என்று நான்முகன் கேட்கவும் சேவகன் சொன்னது இது தான் !

சிற்சில யாகங்களில் , ப்ராணிகளைப் பலியிட வேண்டிய கட்டளைகள் உண்டு .
ஆடு, வெள்ளாடு , குதிரை இவற்றின் வபை ( சதை ) மற்றும் மாம்ஸங்களைக் கொண்டு ( சில வகை ) யாகங்கள் செய்யப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன !

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

யாகத்திற்காக அழைத்து வரப்படும் அந்தப் பிராணிகளை ” யாகப்பசு ” என்றே அழைப்பர்கள் ! ( பசு என்றால் பசு மாடு என்று பொருளல்ல ! மிருகம் என்றே பொருள் )

உதாரணமாக , கல்ப சூத்திரங்களின் படி அச்வமேத யாகத்தில் , மூன்று தினங்கள் முக்யமானவையாம் .

சதுஷ்டோமம், உக்த்யம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் அம் மூன்று நாள்களில் விதிப்படிச் செய்யப்பட வேண்டும் !

மேலும் ஜ்யோதிஷ்டோமம் முதலான பற்பல வேள்விகளைச் செய்ய வேண்டும்.

அவற்றில் குதிரையின் உள் அவயவத்தை ( உடல் உள் உறுப்புகள் ) ஆஹுதியாக வேள்வியில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் உண்டு !

பிரச்சினை இது தான் !!

ரிஷி முனிவர்களில் சிலர் , அவ்வகை வேள்விகளில் உண்மையான ம்ருகத்தை பலியிடத் தேவையில்லை ; அதற்கு பதில் பிஷ்ட பசு ( = மாவினால் ஒரு ம்ருகத்தை ) ( ஆடு, குதிரை ) செய்து அதனையே வேள்விகளில் சேர்க்கலாம் என்றனர் !

தேவர்களோ , இல்லையில்லை உண்மையான ம்ருகத்தினைக் கொண்டே யாகங்கள் நிறைவேற்றப் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் !

இதுவே சண்டைக்கான காரணம் ! தற்சமயம் பிரமன் தலையில்(களில் ) விழுந்திருக்கிறது . தேவ குரு ப்ருஹஸ்பதியோ அக்கினிப் பிழம்பாகத் திகழ்கிறார் .. நியாயம் கேட்டு வந்திருக்கிறார் !

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அவர் பார்வையே பிரமனை பயமுறுத்துகிறது !

பிரமன் தன்னுள் எண்ணலானான்.. வாக்குகளுக்குத் தலைவி ( வாக் தேவி – ஸரஸ்வதி ) சற்று முன்பு தான் கோபித்துக் கொண்டு வெளி நடப்பு செய்தாள் !

இப்போது வாக்குகளுக்குத் தலைவர் ( ப்ருஹஸ்பதி ) கோபத்தோடு வந்திருக்கிறார் ! தாயும் மனைவியும் ஒரே நேரத்தில் கடுங்கோபம் கொண்டால் ஒருவன் எப்படிக் கலங்கிப் போகிறானோ அப்படித் தவித்தான் பிரமன் ! கைகளைப் பிசைந்தான்..

சரி ..ப்ருஹஸ்பதி தான் கோபமாயிருக்கிறார் .. மற்ற ரிஷி முனிவர்கள் ?? அவர்களைப் பார்த்தால் ப்ருஹஸ்பதியின் கோபமே தேவலை போலும் !!

நிஜமான ம்ருகமா ? மாவினால் ஆன ம்ருகமா ?? இந்த நீயா நானாவில் நிலை குலைந்து போனான் அஜன் !

கடைசியில் , தேவர்கள் நம் சாதி தானே ! எனவே அவர்களையும் ப்ருஹஸ்பதியையும் பின்பு சமாளித்துக் கொள்ளலாம் என்றெண்ணினானோ என்னவோ ; மாவினால் ஆன பிஷ்ட பசுவினால் வேள்வி செய்வதே நலம் என்று தீர்ப்பளித்து விட்டான் !

” ரிஷி முனிவர்கள் , ” நாவலிட்டுழி தருகின்றோம் “தேவர் தம்” தலைகள் மீதே ” என்று சந்தோஷத்தால் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்..

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தேவர்களோ பிரமனுக்குச் சாபம் கொடுக்க வேண்டி ஸபை கூட்டினர் !!

என்ன சாபம் ?!

விரைவில் ….
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

Related articles

Recent articles

spot_img