ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 4)

Published:

varadharajaperumal - 2026

மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத ( பிரமனின் ) இத்தீர்ப்பினால் துவண்டு போயினர் !

சட்டத்திற்குப் ( சாஸ்த்ரங்களுக்கு ) புறம்பாக பிரமன் பேசியதாக கூச்சலிட்டதுடன் , நான்முகனுக்கு, அவன் செய்த பெரும்பிழைக்கு , அவனுக்கு தண்டனை தர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர் ..

உண்மையான ம்ருகத்தைக் கொண்டு யாகங்கள் செய்ய வேண்டியதே முறையாயிருக்க , மாவினால் மிருகம் செய்து தீ வளர்க்க வேண்டுமாமே !! இதற்கு என்ன சாபம் கொடுக்கலாம் ?! என்று தங்களுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் !

பொறுமையுடன் ப்ருஹஸ்பதி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் ! .. அவர் என்ன பேசப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்..

மௌனம் கலைத்தார் தேவ ப்ரோஹிதர் ..

” பிரமனே ! பிடி சாபம் !! வேள்வியின் இலக்கணங்களுக்கு/சட்ட திட்டங்களுக்கு எதிராக நீ பேசியமையால் , உன் ( பிரம்ம ) பதவியிலிருந்து விலகக் கடவாய் !

ஒன்றல்ல !! ஆயிரம் அச்வமேத யாகங்களை குறையில்லாமல் விரைவில் செய்து முடித்தால் , உன் பதவி உன் வசமாகும் !! மேலும் யாகங்களை நீ தீர்ப்பளித்தாற் போல் மாவினால் ஆன ம்ருகங்களைக் கொண்டு அல்ல ; நிஜமான ம்ருகங்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும் .. இதுவே சாபம் !

கலக்கமுற்ற பிரமனும் வெகுண்டவனாய் ப்ருஹஸ்பதிக்கு சில சாபங்களைத் தந்தனன்..

( இருவருக்குமே சாப விமோசனம் நம் வரதனால் தான் என்பது மேலே தெரிய வரும் )

ப்ருஹஸ்பதிக்கு பதிலுக்கு சாபம் வழங்கினாலும், பிரமன் நிலை பரிதாபத்துக்கு உரியதாயிற்று !

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆம்.. யாகம் செய்வதே கடினம்.. அதிலும் அச்வமேத யாகம் சாதாரணமானதா ??
ஆயிரம் அச்வமேதம் என்றால் …. தலை( கள் ) சுற்றியது ப்ரம்மாவிற்கு !!

நாம் சொன்ன தீர்ப்பு ; சரிப்படவில்லையென்றால் மேல் முறையீடு, மறு சீராய்வு போன்றவற்றிற்கு விண்ணப்பித்திருக்கலாம்.. அதை விடுத்து ஆயிரம் அச்வமேதங்கள் செய்ய வேண்டியது என்றால் , யாராயிருந்தாலும் தலை சுற்றத் தானே செய்யும் .. **

## வாசகர்களுக்கு..

உங்களில் பலரும் பிரம்மா கொடுத்த தீர்ப்பு முடிவு சரியானதே என்று கருத இடமுண்டு !
வேள்விகளில் ஒரு உயிரை பலியிடுவதை விட , மாவினால் செய்யப்பட்ட மிருகத்தை ஆஹுதியாகக் கொடுப்பது சிறந்தது தானே என்று எண்ணுவீர்கள்..

“ந ஹிம்ஸ்யாத் ஸர்வா பூதாநி” – யாரையும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக் கூடாது என்று விதித்த சாஸ்த்ரம் தான் வேள்விகளில் மிருக வதையை ஆமோதிக்கிறது என்பது ஜீரணிக்க சிரமமாயிருக்கலாம். ஒன்றுக்கொன்று முரணாகவும் தென்படும் ..

முதற்கண் வேதத்தில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றறிக !

சிற்சில யாகங்களில் ம்ருகங்களை பலியிட வேண்டும் என்று சொல்லியிருப்பது , அஹிம்ஸைக்கு விரோதமாகாது ! யாகத்தினுடைய தூய்மைக்கும் பங்கமாகாது !

ஒரு மருத்துவன் , நமக்கு அறுவை சிகித்ஸை செய்கிறான்.. வாளால் அறுத்துச் சுடுகிறான் .. நிச்சயம் அது வெளிப்பார்வைக்கு ஹிம்ஸையாகவே புலனாகும். ஆனால் நோயாளன் ( patient ) அம் மருத்துவனிடம் ஆராத காதலோடு தானே இருப்பன். ( அதாவது இந்த ஆபரேஷன் நம் நன்மையின் பொருட்டே செய்யப்படுகிறது என்று தெளிந்து , மருத்துவரிடம் அன்பாகவே இருப்பான் )

நிகழ்காலத்தில் , ஹிம்ஸையாகக் கண்ணில் பட்டாலும் , எதிர்காலத்திற்கு அது நன்மையே ஆகும் !

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

அதே போல் , வேள்விகளில் பலியிடப்படுகிற பசுக்களின் ( மிருகங்களின் ) ஆன்மாக்கள் ஸுவர்க்கம் முதலான உயர்ந்த லோகங்களை நிச்சயமாகப் பெறுகின்றமையால் , வேள்வியில் பலியிடுதல் என்கிற முறை தவறாகாது !

ஸ்ரீ பாஷ்யத்திலும் இவ்விஷயம் ஈண்டு விசாரிக்கப்பட்டு , ஆடு குதிரை போன்ற மிருகங்களை யாகங்களில் உபயோகிப்பது தவறில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது !

” அசுத்தமிதி சேத் ந சப்தாத் ” ( ஸூத்ரம் 3.1.25 ) என்கிற ப்ரம்ம ஸூத்திரத்தின் (எம்பெருமானார் ) உரையினில் மேற்கண்ட விஷயம் சேவிக்கலாகும் .

நம் சுயநலத்திற்காக ஒரு ப்ராணியை ஹிம்ஸிப்பது குற்றமாகும் ! அந்த ப்ராணியின் ஆன்ம நன்மையை உத்தேசித்துச் செய்யப்படும் காரியம் எங்ஙனம் தவறாகும் ?!

” ஹிரண்ய சரீர ஊர்த்வ : ஸ்வர்க்கம் லோகமேதி ” ( யாகத்தில் பலியிடப்பட்ட ம்ருகம் தங்க மயமான சரீரத்துடன், ஸ்வர்க்கத்திற்குச் சென்று அங்கு பல போகங்களை அனுபவிக்கிறது ) என்கிறது சாஸ்த்ரமும் ..

“யத்ரயந்தி ஸுக்ருதோ நாபிதுஷ்க்ருத: தத்ர த்வாதேவ : ஸவிதா ததாது ” என்று எது செல்வதற்கு அரிதான இடமோ , அங்கு ம்ருகமே உன்னை பகவானே அழைத்துச் செல்லட்டும் என்று வேள்வியில் பலியிடப்படும் ம்ருகத்தைப் பார்த்து வேதம் பேசுகிறது !

எனவே தான் பிரமன் உரைத்த தீர்ப்பு சாத்திரங்களுக்கு முரணானதென்று ப்ருஹஸ்பதி கோபமடைந்தார் ###

***

ஆயிரம் அச்வமேதங்கள்.. ஆம் செய்தே ஆக வேண்டும்.. பதவி சுகம் கண்டு விட்டோமே ! அதுவும் ப்ரம்ம பதவி என்றால் லேசா..

இன்னொன்று ! பத்நீ இல்லாமல் யாகம் செய்வதா ?? மனைவிக்கு யாக வேளையில் அன்றோ பத்நீ என்று பெயர் !

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்ன பிற தேவிகள் இருந்தாலும் ப்ரதான மஹிஷீ ஸரஸ்வதி தானே !
சரி பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தான்..
பிரச்சினைகள் அணிவகுத்து நெருக்க / நெரிக்க , பிரமன் பூவுலகிற்கு வந்து , திரிவேணீ ஸங்கமத்தில் மற்றும் நைமிசாரணியத்தில் வேள்விகள் செய்ய ஆயத்தமாயினன்..

தவறான தீர்ப்பு சொன்ன பழி – பாபம் நீங்க மட்டுமல்ல.. இந்த யாகங்களின் வழியாக தன் தமப்பன் ..தன்னொப்பாரில்லப்பனையும் தரிசித்து விட ஆசைப்பட்டான் அயன் !

” சக்ஷுஷாம் அவிஷயமான ” ( கண்களால் காண முடியாத தத்வமன்றோ இறை தத்வம் )

“என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை ” கண்டே தீருவது என்று தயாரானான்.

முடியுமா ?? என்றால் முடியும் என்பதே விடை !

ஆம்.. நம் முயற்சியினால் ஆகா !! ஆனால் அவன் அருளினால் அவனைக் காண முடியும் !!

தீர்மானமாக நம்பினான் பிரமன்..

அப்போது ஒரு அசரீரி ( வார்த்தை ) கேட்டது..

உருவமில்லா அவ்வொலி சொன்னதென்ன !!

காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

Related articles

Recent articles

spot_img