
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்:பகுதி: 15
– மீ.விசுவநாதன்
தர்மம்
நாம் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதை வேதம் கூறுகிறது. செய்யப்பட வேண்டும் என்று எவை வேதத்தில் சொல்லப் பட்டவையோ அவை தர்மமாகும். செய்யப்படக் கூடாது எனப்பட்டவை அதர்மமாகும். பிறருக்கு ஹிம்சையளிக்காமல் இருப்பது தர்மம். ஹிம்சையளிப்பது அதர்மம் எனப்படும். தர்மம் செய்வதால் நமக்கு சுகம் கிடைக்கும். பரலோகத்திலும் நாம் சுகம் பெறலாம்.
தர்மம் செய்வதற்கு இப்பொழுது என்ன அவசரம்? பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறுவர். ஆனால் நாம் எவ்வளவு காலம் ஜீவித்திருப்போம் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. யமனுக்குக் கருணை என்பதே கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் வந்து உயிரைப் பிரித்துச் சென்று விடுவான். ஆகையால் தர்மம் செய்யும் விஷயத்தில் எந்தவிதமான தாமதமும் கூடாது. எண்ணம் உண்டானதுமே செய்து விட வேண்டும்.
தர்மம் செய்வது பணக்காரர்களுக்கே சாத்தியம்; பிறருக்கு அல்ல என்பது சரியல்ல. என்னிடம் பணமில்லை. தர்மம் செய்ய இது தடையாக உள்ளது என்று கூறுவதும் உண்மை அல்ல. வெறும் பிரமையே. ஏனெனில் பணமின்றிச் செய்யக் கூடிய காரியங்கள் பல உள்ளன.
பணக்காரன் கோவில் கட்டுகிறான். அவன் தனக்காக மட்டுமின்றி மற்றவர்களுக்காகவும் அதைக் கட்டுகிறான். பணமில்லாதவர்கள் கோவிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்கலாம். தியானம் செய்யலாம். இதற்குப் பணம் தேவை இல்லை. இது தர்மமாகாதா?
இன்னும் சிலர் வீட்டில் இருந்து கோவில்வரை செல்ல முடியாது என்ன செய்வது எனக்குறைப்படலாம். ஏதாவது ஊனம் போன்ற காரணத்தினால் போக முடியாதவர்கள் மனத்திலேயே கடவுளை நினைக்கலாம். இதற்கு எந்த விதமான சிரமமும் படவேண்டாம்.
ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தர்மம் சாதாரண மனிதனுக்கு தர்மமாகாது. அவரவர்களுக்குத் தகுந்தாற்போல் செய்வதையே சாஸ்திரம் சொல்லுகிறது.
அதனால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட காரியங்களைச் செய்வதே தர்மம் எனப்படும். ஒவ்வொருவரும் தனக்காக விதிக்கப்பட்டுள்ள காரியங்களையே செய்யவேண்டும்.
(ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் அருளுரை. ஸ்ரீமான் கி. சுரேஷ்சந்தர் எழுதிய “ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)
“குருசேவா துரந்தரா அ. சிவசைலம்”

தென்பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிக அழகான கிராமம் ஆழ்வார்குறிச்சி. இவ்வூருக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள அழகான ஊர் சிவசைலம். இவ்வூரில் கோவில் கொண்ட ஈசனே ஸ்ரீசிவசைலபதி, அம்மன் ஸ்ரீ பரமகல்யாணி. இந்தக் கோவிலின் சூழலே அற்புதமாக இருக்கும். சுகமான காற்று நம்மைத் தழுவிக் கொண்டு வரவேற்கும். கோவிலுக்கு எதிரே குளிர்ந்த நீர்பாயும் கடனாநதி நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். அங்கு மக்கள் சுகமாகக் குளிப்பதற்கு வசதியாக ஒரு படித்துறையை இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரு. சிவசைலம் அவர்கள் கட்டிக் கொடுத்ததாகப் பெருமையோடு சொல்லுவார் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள்.
இந்தச் சூழலில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் பிறந்தவர் ஸ்ரீமான் அனந்தராமகிருஷ்ணன் ஆவார். அவர் தர்ம சிந்தனை மிக்க மனித நேயர். தொழிலதிபர். அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உண்டு. அவரது மூத்த குமாரர் ஸ்ரீமான் அ. சிவசைலம் அவர்கள், இளையவர் ஸ்ரீமான் அ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
ஸ்ரீமான் சிவசைலம் அவர்கள் உலகப் புகழ் கொண்ட தொழிலதிபரும் கூட. தர்ம சிந்தனை, இறைபக்தி மிக்க மனிதர். சிருங்கேரி ஸ்ரீ ஆசார்யார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர்.
சென்னை தியாகராய நகரில் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி மடத்தைப் புதுப்பிக்க எண்ணி திரு. சிவசைலம் அவர்கள் தலைமையில் சிருங்கேரி மடத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு சிருங்கேரி மடத்தின் சீடர்கள் முக்கியமாக, சென்னை நகரச் சீடர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
“இங்கே உள்ள சிருங்கேரி மடத்தைப் புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்க இருக்கிறது. தி.நகரில் புதுப்பிக்கப் படும் சிருங்கேரி மடம் அனைவரும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக (Land Mark) இருக்கும். இந்த நல்ல பணிகுழுவுக்குத் தலைவரான திரு. சிவசைலம் அவர்களின் வழிகாட்டுதலின் படி நாம் நடப்போம்.” என்று திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் அன்று தமது கருத்தைக் கூறினார்.
நிறைவாகப் பேசிய திரு. சிவசைலம் அவர்கள்,”இந்தப் பணிக்கு ரூபாய் ஐம்பது லக்ஷம் வரை செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அவர்களால் முடிந்த காணிக்கையை இந்த நல்ல பணிக்காகச் செலுத்தும் படி கேட்டுக் கொள்ளலாம். ஒரு ரூபாய் கொடுத்தாலும் மிக்க பணிவோடு அதை வாங்கிக் கொள்வோம். ரோட்டில் காரில் போய்க் கொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தெரியும் படியாக ஸ்ரீ சாரதாம்பாள் விக்ரஹத்தைப் பிரதிர்ஷ்டை செய்ய வேண்டும் என்பது என் ஆசை. கவலைப் படவேண்டாம். எல்லாம் ஆசார்யாள் கிருபையில் சரியாக முடியும்” என்றார். அன்றே ஒன்றிரண்டு பிரமுகர்கள் தங்களது காணிக்கையை அறிவித்தனர்.

கூட்டம் முடிந்தவுடன் திரு. விஸ்வநாத மாமா,” விஸ்வநாதன் ..நீ என்னோட கார்ல வா…உன்னை இந்திரா நகரில் உனது வீட்டில் இறக்கி விடுகிறேன்” என்று அழைத்துச் சென்றார். போகும் பொழுது,” சிவசைலம் இருக்கிறார். விரைவிலேயே இங்கு அழகான ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் வந்துவிடும்” என்று பெருமையோடு கூறினார்.
பெங்களூரில் அமைந்திருக்கும் சிருங்கேரி மடத்தைப் போலவே கருங்கற்களைக் கொண்டு மிக அழகான “சிருங்கேரி ஸ்ரீ பாரதீ வித்யாஸ்ரம்” கோவில் தயாராகி விட்டது. திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது, தவறாமல் அங்கு வந்து வேலைகளை கவனித்து, தனது கருத்துகளைக் கூறுவார் திரு. சிவசைலம் அவர்கள்.
பணிகள் அனைத்தும் சிறந்த முறையில் நடந்து முடிந்தது. சித்திர வேலைப் பாடுகள் கொண்ட தேக்கு மரத்தினால் செய்யப் பட்ட மிகப் பெரிய வட்ட வடிவிலான தாமாய்ப்பூ போன்ற வடிவத்தை ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதிக்கு முன்பாக, மேல் புறச்சுவற்றில் பதிக்கும் வேலைகள் கும்பாபிஷேகத்திற்குச் சிலதினங்கள் முன்பு இரவு நேரத்தில் நடந்தது. திரு. சிவசைலம் அவர்கள், அதற்காக உழைக்கும் தொழிலாளர்களை மிகக் கவனமாகச் செய்யுங்கள் என்று சொல்லி, அந்த வேலை முடியும் வரை கூடவே இருந்து கவனித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். இரவு பன்னிரெண்டு மணிக்குமேல் அந்த வேலை முடிந்ததும்தான் அவர் வீட்டிற்குச் சென்றார். இந்தப் பணியை அருகிருந்து பார்க்கும் பேறு அடியேனுக்கும் கிடைத்தது.
கோவில் திருப்பணி நிறைவு வேலைகள் ஸ்ரீ ஆசார்யாளுக்குத் தெரிவிக்கப் பட்டது. ” ஸ்ரீமான் சிவசைலம் அவர்களுக்குத் திருப்தியானால் எனக்கும் திருப்திதான்” என்று ஸ்ரீ ஆசார்யாள் சொன்னாராம்.
சுமார் ஒருகோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து சென்னை, தி.நகரில் வெங்கட்நாராயணா சாலையில் மிக அழகாகக் கட்டப்பட்ட “சிருங்கேரி ஸ்ரீ பாரதீ வித்யாஸ்ரம்” கோவிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி 1995ஆம் வருடம் “மே” மாதம் மிக விமர்சையாக நடந்து முடிந்தது. அந்த ஆனந்த நிகழ்ச்சிகளை அனைத்து பக்தர்களளோடு பக்தனாக வாசலில் ஒரு ஓரத்தில் மிகப் பணிவாகத் தன்கைகளைக் கட்டிக்கொண்டு நின்றபடி தரிசனம் செய்தார் திரு.சிவசைலம் அவர்கள். அந்தப் பணிவுதான் அவரது அணிகலன்.

வந்திருந்த ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.
இதேபோன்று இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் கோவில் கும்பாபிஷேஹத்தை ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் நடத்தி வைத்தார்கள். அதைக் காண வந்த பக்தர்கள் வெயில் சூட்டில் தவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அனைவருக்கும் குடை வழங்கியும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கியும் மகிழ்ந்ததாகவும், எந்த ஒரு இடத்திலும் தனது பெயரோ, குடும்பத்தின் பெயரோ, தன்னுடைய நிறுவனத்தின் பெயரோ வராமல் அனைத்தும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கொடை என்றே பணிவாக குருதரிசனம் செய்தததாக, நேரில் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களித்த வக்கீல் ஸ்ரீமான் தியாகராஜன் அவர்களும், ஸ்ரீமான் பாரதி காவலர் ராமமூர்த்தி அவர்களும் அடியேனிடம் பகிர்ந்து கொண்டனர்.
சிருங்கேரி சீடர்கள், சிருங்கேரியிலேயே தங்களது இல்லத்து நிகழ்ச்சிகளான பிறந்த நாள், உபநயனம், திருமணம், சஷ்டியப்த்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற மங்கல நிகச்சிகளை ஸ்ரீ ஆசார்யாளின் சந்நிதியில் நடத்த வேண்டும் என்ற தன் வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு அழகான கல்யாண மண்டபத்தை சிருங்கேரியில்,” ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த கல்யாண மண்டபம்” என்ற பெயரில் கட்டி, அதை ஸ்ரீ சாரதா பீடத்திற்க்கே சமர்ப்பணமும் செய்தார்.
ஸ்ரீமான் சிவசைலம் அவர்களின் குருபக்தியைப் பாராட்டி “குருசேவா துரந்தரா”, “டாக்டர் தானி” என்ற இரண்டு விருதுகளை ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதித்தார்.
2011ஆம் வருடம் தை மாதத்தில் (ஜனவரி மாதத்தில்) அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தனது குருநாதரை தரிசனம் செய்து வரவேண்டும் என்ற விருப்பத்திலும், குருநாதரை தமிழ்நாட்டிற்கு விஜய யாத்திரைக்கு அழைக்கும் விருப்பத்திலும் சிருங்கேரிக்குச் சென்றார்.
ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ சங்கரர், குருநாதர்களின் அதிஷ்டானங்கள் எல்லாம் தரிசனம் செய்துவிட்டு, நரசிம்ம வனத்தில் இருக்கும் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளையும் தரிசித்தார். ஸ்ரீ ஆசார்யாளின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு திரும்பும் சமயம் திடீர் உடல்நலக் குறைவால் உன்னதமான குருவின் திருவடி நிழலை அடைந்தார்.

அவருக்கு அஞ்சலிக் கூட்டம் சிருங்கேரி சீடர்களால் தி.நகரில் உள்ள “சிருங்கேரி ஸ்ரீ பாரதீ வித்யாஸ்ரம்” கீழ்த் தளத்தில் நடத்தப் பட்டது. அனைவரும் ஸ்ரீமான் சிவசைலம் அவர்களின் குருபக்தியையும், இறைபக்தியையும், தொழில் பக்தியையும், தேச பக்தியையும், முக்கியமாக அவரது பணிவையும், எளிமையையும் நினைவு கூர்ந்தனர்.
ஸ்ரீமான் சிவசைலம் அவர்கள் காசோலையில் போட்ட கடேசிக் கையெழுத்தே “குரு காணிக்கையாக ஒரு தொகையை எழுதி” குருவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்ததுதான் என்று அஞ்சலிக் கூட்டத்தில் ஒரு அன்பர் கண்கள் பனிக்கக் கூறினார்.
இது போன்ற தர்மங்கள் எல்லாம் பிறர் சொல்லித்தான் நமக்குத் தெரிந்ததே தவிர திரு.சிவசைலமோ, அவரது குடும்பத்தினர்களோ தாங்கள் செய்ததாகக் காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.
ஸ்ரீமான் சிவசைலம் அவர்கள் மறைந்தாலும் அவர்செய்த குரு சேவையும், அறப்பணிகளும், தர்மமும் அவரது புகழை என்றும் கூறிக் கொண்டே இருக்கும்.
(வித்யையும் விநயமும் தொடரும் )