ஆடி வருகுது அம்மன் உலா

ஆன்மிகச் செய்திகள் ஆலயங்கள் விழாக்கள் விசேஷங்கள்

samayapuram mariamman - 2026

நம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது தேவர்களின் இரவு. நம் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள். அதில் இந்த ஆடி மாதம் தேவர்களின் நாள் கணக்கில், மாலை நேரத் துவக்கம். இந்த காலம்தான் இங்கே நமக்கு மழைக்காலத் துவக்கம். எனவே ஆடியில் நல்ல மழை வேண்டியும், உடல்நலம் பெறவும் நம் முன்னோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி வந்துள்ளனர்.

அம்மனுக்கு மிகவும் பிடித்தவை வேம்பும் எலுமிச்சையும். ஆடி மாதம் என்றால் கூழ் இல்லாமலா? இம்மூன்றுமே இந்தப் பருவ மாற்றத்துக்கு உட்படும் ஆடி மாதத்தில் நம் உடல் அடையும் நோய்களில் இருந்து தடுக்க உதவுவன. எனவேதான் அம்மன் இவற்றை தமக்கான அர்ப்பணமாக ஏற்றாள். இவற்றையே அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தருகிறார்கள்.

மேலும், தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதமும் இந்த ஆடி மாதம்தான்! பூமிதேவி பூமியில் தேவியாக அவதரித்ததும் இம்மாதமே. ஆண்டாள் ஆடிப்பூரத்தைத்தான் அவதரிக்க நன்னாளாகத் தேர்ந்தெடுத்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதத்தை அம்மன் மாதமாக இருக்க அருள் புரிந்தார். எனவேதான், சிவனுடையதை விட, அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும் என்பர். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவம் அடங்கி விடுகிறதென்பர். ஆடியில் செவ்வாய், வெள்ளிகள் போல் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடித் தபசு விழா, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் என ஆடி மாதப் பண்டிகைகள் வரிசை கட்டி நின்கின்றன.

ஆடியில் தான் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுகின்றனர். இது ஏன்? ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்பர். இந்த ஆடி மாதத்தில்தான் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசி சேரும். இந்தக் காற்றின் மாற்றத்தாலும் பருவ நிலை மாறுபாட்டாலும், மனிதர்க்கு வரும் இருமல் உள்ளிட்ட சுவாச நோய்களைத் தவிர்க்கவே அம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுக்க கூழ் ஊற்றும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த ஆடிக்கஞ்சியில், அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் என மருந்துப் பொருள்களை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து, அதில் இந்தத் துணிக் கட்டைப் போட்டு ஊறவைத்து, மருந்துகளைப் பிழிந்து ஆடிக் கஞ்சியைப் பரிமாறுகிறார்கள். எனவே இது ஒரு மாமருந்து.

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயராம். அவளே பூலோகத்தில் சிவபெருமானின் சாபத்தின் காரணத்தால் வேப்ப மரமாகத் திகழ்கிறாள் என்பது புராணம். வேம்பு நோய்கள் பலவற்றை குணமாக்கும் வல்லமையுடன் குளிர்ச்சியைத் தருவதாகவும் அமைந்தது. வேம்பின் காற்று நம் உடல்நனைக் காக்கும். அதன் கசப்புத் தன்மை நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அம்மை நோய்க்கு அருமருந்தாகத் திகழ்வது வேம்பு.

அம்மனுக்குரிய இந்த ஆடி மாதத்தில்தான் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. பக்தர்கள் வழங்கும் ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களை சரம் சரமாகக் கோத்து, அம்மனுக்கு அலங்காரம் செய்கிறார்கள். மூன்று நாட்கள் கழித்து அந்தக் கண்ணாடி வளையல்களை சுமங்கலிப் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் சுகமாக வாழ்வர் என்பது நம்பிக்கை. வளையல் பிரசாதம் பெறும் கன்னியருக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆனந்த மாதமான ஆடியில் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அம்மன் சந்நிதி முன் நெய் விளக்கேற்றியும் எலுமிச்சை விளக்கேற்றியும் வழிபட்டால் துர்தோஷம் விலகி சந்தோஷம் நிலவும்.

கரூருக்கு அருகே உள்ளது வேலாயுதம்பாளையம். முருகன் கோயிலுக்கு புகழ்பெற்ற இந்த ஊரில் மலைவீதியில் உள்ளது மகாமாரியம்மன் கோயில். இங்கே ஆடி வெள்ளி மிகச் சிறப்பு. அப்போது அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, பட்டுப் புடவை உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து மகா தீபாராதனை செய்கிறார்கள். அதனைக் காண்பதற்கு, பல இடங்களிலும் பக்தர்கள் இங்கே கூடுவது பார்ப்பதற்கு வெகு அழகு!
இந்த அபிஷேக விழாவே ஒரு திருவிழா போல் கொண்டாடப் படுகிறது. அப்போது, சுற்று வட்டார பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து, புனித நீரை கோயிலுக்கு எடுத்து வருவார்கள். பின்னர் மகாமாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்கிறார்கள். பின் அம்மனுக்கு மீனாட்சி அம்மன் உள்ளிட்ட அம்மன் வடிவங்களை ஒவ்வொரு வெள்ளியிலும் விதவிதமாக அலங்காரம் செய்து, பூக்களால் அலங்கரிக்கின்றனர். அது கண்கொள்ளாக் காட்சியாகத்தான் இருக்கும். அதன் பின்னர் பக்தர்களுக்கு கூழ் வழங்குகிறார்கள். இந்த ஆடியில் அருகில் இருக்கும் அம்மன் கோயில் வைபவங்களில் கலந்து கொண்டு, பலன் கூடப் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.