திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

94a12f6559ff7a0c5aafeb1ebe9926161669512030462571 original - 2026

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாளை மஹாதேரோட்டம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் சின்ன ரிஷப வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நாயன்மார்கள் வீதியுலா நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு நாயன்மார்கள் வீதியுலா நடைபெற உள்ளதால் சாமியை மாணவர்கள் வரிசையாக சுமந்து வரும் காட்சியை காண பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்ந்து வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா நடைபெறுகிறது. இரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா நடக்கிறது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் விநாயகர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதலில் விநாயகர் தேரும், அதைத்தொடர்ந்து முருகர் தேரும் வீதி உலா செல்கிறது. 2 தேர்களும் நிலைக்கு வந்ததும் பெரியதேரான (சாமி தேர்) மகா ரதம் இழுக்கப்படும். இதில் ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒருபக்கமும் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள். பெரியதேர் நிலைக்கு வந்ததும் இரவில் அம்மன் தேரோட்டம் நடக்கும்.

அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். இந்த தேரின் பின்னால் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும். கடந்த 2 வருடங்களாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றதால் இந்த ஆண்டு மாட வீதியில் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Related articles

Recent articles

spot_img