வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், பார்படாஸ் டிரைடன்ட்ஸ் அணி பந்துவீச்சாளர் முகமது இர்பான் (பாகிஸ்தான்), 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சாதனை படைத்தார்.கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசியது. பார்படாஸ் டிரைடன்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் குவித்தது.
கேப்டன் ஹோல்டர் அதிகபட்சமாக 54 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி, முகமது இர்பான் வீசிய முதல் பந்திலேயே கேப்டன் கிறிஸ் கேல்டக் அவுட்டாக அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
மற்றொரு தொடக்க வீரர் எவின் லூயிசும் 1 ரன் மட்டுமே எடுத்து இர்பான் வேகத்தில் வெளியேறினார். முகது இர்பான் 4 ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். டி20 போட்டிகளில் இது புதிய உலக சாதனையாக அமைந்தது. அவர் தனது 4வது ஓவரின் கடைசி பந்தில் தான் 1 ரன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பேட்ரியாட்ஸ் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வென்றாலும், சிறப்பாகப் பந்துவீசி சாதனை படைத்த முகமது இர்பான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.