பிரபல ஹிந்தி, தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஆர். சாந்தசுந்தரி காலமானார்!

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
santhasundari
santhasundari

பிரபல மொழிபெயர்பாளர் ஆர். சார்ந்த சுந்தரி (79) கடந்த வாரம் புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். மூளையில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக சில மாதங்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்றுவந்தார்.

தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட சாந்தசுந்தரி பிரபல தெலுங்கு எழுத்தாளர் கொடவடிகண்ட்டி குடும்பராவு அவர்களின் மகள். சென்னையில் பிறந்து வளர்ந்தார். அங்கேயே கல்லூரியில் படித்தார். பேராசிரியர் டாக்டர் கணேஷ்வர ராவோடு திருமணமான பின் பல ஆண்டுகள் டெல்லியில் வசித்தார். ஹிந்தி மொழி ஆசிரியராக பணிபுரிந்த சாந்தசுந்தரி பதவி ஓய்வு பெற்ற பின் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

சுமார் 75 பிரபலமான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

santhaasundari2
santhaasundari2

‘இன்ட்லோ பிரேம்சந்த்’ என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு 2014ல் மத்திய சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

தந்தை குடும்பராவு போலவே இவர் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுவாதியாக இருந்தார். பகுத்தறிவு நூல்களையே அதிகம் மொழிபெயர்ப்பு செய்து வாசகர்களுக்கு அளித்தார்.

பல நாவல்களையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தெலுங்கிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தெலுங்குக்கும் ஆங்கிலத்திலிருந்து தெலுங்குக்கும் மொழிபெயர்த்துள்ளார். சேப்பியன்ஸ் என்ற ஆங்கில நூலை அண்மையில்தான் தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

சாந்தசுந்தரிக்கு இரு புதல்வியர். இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். மனைவியை இழந்து வருந்தும் கணேஷ்வரராவுக்கு எழுத்தாளர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சாந்தசுந்தரியின் தாயார் வரூதினி முதியோர் இல்லத்தில் தற்போது உள்ளார். சாந்த சுந்தரியின் அந்திமக் கிரியைகள் வியாழக்கிழமை மகா பிரஸ்தானத்தில் நடந்தன.

மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரை, சிறந்த இலக்கியப் பாலத்தை இலக்கிய உலகம் இழந்தது என்று பல எழுத்தாளர்களும் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

செய்தி: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.