காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும்: மீரா குமார்

இந்தியா

meerakumar பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா வதேரா முழுநேர அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால் வரவேற்பேன் என மக்களவை முன்னாள் அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால், காங்கிரஸுக்கு புதிய தலைமை தேவை என அக்கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனராம். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்கா முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். அண்மைக் கால தேர்தல் தோல்விகளின் போது காங்கிரஸ் தொண்டர்கள் இதையே வலியுறுத்தினர். இந்நிலையில், 2 நாள் பயணமாக பெங்களூரு வந்திருந்த மீராகுமார், நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்றார். அவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அனைத்துப் பிரிவினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இதுபோன்ற கொள்கை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. ஓட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தாற்காலிகமானது. இந்த நேரத்தில், பிரியங்கா முழுநேர அரசியலில் ஈடுபட்டால் காங்கிரசுக்கு பலமாக அமையும். சோனியாவைப் போல பிரியங்காவுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது. சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் மேம்பாட்டுப் பணிகளை பிரியங்கா திறம்பட நிர்வகித்து வருகிறார். முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.